இலங்கை கடற்படை விரட்டியதால் நடுக்கடலில் மூழ்கிய விசைப்படகு 6 மீனவர்கள் மீட்பு


இலங்கை கடற்படை விரட்டியதால் நடுக்கடலில் மூழ்கிய விசைப்படகு 6 மீனவர்கள் மீட்பு
x
தினத்தந்தி 1 Feb 2019 1:36 AM IST (Updated: 1 Feb 2019 1:36 AM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரததில் இருந்து 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.

ராமநாதபுரம்,

ராமேசுவரத்தில் இருந்து 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு சென்றனர். அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்தபோது இலங்கை கடற்படையினர் ரோந்து வந்தனர். அவர்கள் ராமேசுவரம் மீனவர்களை கண்டதும் அங்கிருந்து படகுகளை எடுத்துச் செல்லுமாறு எச்சரித்தனராம். இதையடுத்து மீனவர்கள் வேகமாக கரை திரும்ப முயன்றனர்.

இந்த நிலையில் இலங்கை கடற்படையினர் ஒரு சில படகுகளில் இறங்கி மீனவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. தங்கச்சிமடம் கிறிஸ்து ராஜா என்பவருக்கு சொந்தமான படகில் செல்வம் (வயது 44), கருப்பையா (35), தண்டாயுதம் (41), கண்ணன் (42), பாக்கியஜோதி (42), சூசை (45) ஆகிய 6 மீனவர்கள் இருந்தனர். இலங்கை கடற்படையினர் விரட்டியதால் இவர்கள் படகை வேகமாக திருப்பியபோது ராட்சத அலையில் சிக்கி படகின் பலகை உடைந்தது. இதையடுத்து அந்த படகு கடலில் மூழ்கியது.

மற்றொரு படகில் சென்றிருந்த மீனவர்கள் இதைக்கண்டு, கடலில் தத்தளித்த 6 மீனவர்களையும் பத்திரமாக மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். பின்னர் 6 மீனவர்களும் இதுகுறித்து மீன்வளத் துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் புகார் செய்தனர்.

Next Story