50-ம் ஆண்டு நினைவு நாள்: அண்ணா நினைவிடத்துக்கு 3-ந் தேதி தி.மு.க. அமைதி பேரணி தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு
அண்ணாவின் 50-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்துக்கு 3-ந் தேதி தி.மு.க. சார்பில் அமைதி பேரணி நடைபெறுவதாகவும், அதில் பங்கேற்க வருமாறு தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னை,
தி.மு.க. தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பேரறிஞர் அண்ணா இந்த மண்ணை விட்டு மறைந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. தி.மு.க. எனும் மாபெரும் மக்கள் அரசியல் இயக்கத்தை உருவாக்கி, அகில இந்திய அரசியல் கட்சிகள் அனைத்தையும் எதிர்கொண்டு, தன் உழைப்பாலும், உயர்வான ஆளுமையாலும், கரைகண்ட கல்வித்திறனாலும், தம்பிமார்களின் தளரா ஊக்கத்தாலும் 18 ஆண்டுகளில் மக்களின் பேராதரவுடன், ஆட்சியைப் பிடித்து முதல்-அமைச்சரானவர் அண்ணா.
1¾ ஆண்டு காலம்தான் அவர் ஆட்சி செலுத்தினார். அதற்குள் இயற்கை அண்ணாவின் உயிரை அவசரமாகப் பறித்துக் கொண்டோடிவிட்டது. ஒட்டுமொத்த தமிழகமும் தன் தவப்புதல்வனை இழந்த வேதனையில் கண்ணீர் வடிக்க, உலக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு லட்சக்கணக்கானோர் திரண்ட இறுதி ஊர்வலத்தின் மக்கள் வெள்ளத்தில் மிதந்து சென்று வங்கக் கடலோரம் மீளாத்துயில் கொண்டிருக்கும் அண்ணாவை நாம் இழந்து அரை நூற்றாண்டு கடந்துவிட்டது.
அண்ணா உருவாக்கிய கட்சியை - ஆட்சியை, லட்சியங்களை இந்த அரை நூற்றாண்டு காலமும் தன் நெஞ்சிலும், தோளிலும் சுமந்து நெருப்பாறுகளை நீந்திக் கடந்தவர், நம் உயிர் நிகர் தலைவர் கருணாநிதி. அண்ணாவின் பாசமிகு தம்பியாக இயக்கம் வளர்த்து, கோடிக்கணக்கான தொண்டர்களை கொண்ட நம் தலைவர் 95 வயது வரையிலும் தமிழ்ச் சமுதாயத்திற்காக சந்தனம் போல தன்னைத் தேய்த்துக் கொண்டவர். ஓய்வறியா அந்தச் சூரியன் கடந்த ஆகஸ்டு 7-ந் தேதி வானத்தில் இருந்து மறைந்துவிட்டது; மறைந்த பின்னரும் வாழ்வதைப் போலவே நமது மனங்களில் நிறைந்துவிட்டது.
இரு பெரும் தலைவர்கள் இன்று நம்மிடையே இல்லை; ஆனால், இல்லை என்ற எண்ணம் நெஞ்சில் இல்லை. ஏனெனில், உள்ளம் எல்லாம் அவர்களே நிறைந்திருந்து இயக்கிக் கொண்டிருக்கிறார்கள். அண்ணாவின் இதயத்தை தலைவர் கருணாநிதி இரவலாகக் கேட்டதுபோல, தலைவர் கருணாநிதியின் சக்தியில் பாதியைத் தரும்படி அவர் இருக்கும்போதே நான் கோரிக்கை வைத்தேன். தலைவர் கருணாநிதியின் அன்பு வாழ்த்துகளோடும், அனுமதியோடும் அந்த சக்தியைப் பெற்றிருக்கிறேன்.
உங்களில் ஒருவனான எனக்குக் கிடைத்துள்ள அந்த சக்தி, இந்தப் பேரியக்கத்தை இருபெரும் தலைவர்களின் லட்சிய நோக்கத்துடன் வழிநடத்திடும் ஆற்றலாக அமைந்துள்ளது. மாநில உரிமைகளைப் பறித்திடும் மனிதாபிமானமற்ற ஒரு கொடுங்கோல் ஆட்சி மத்தியிலே நடைபெற்று வருகிறது. அதனை எதிர்த்துக் குரல் கொடுக்க முடியாத எடுபிடிகளாக, கொத்தடிமைகளாக மாநிலத்தை ஆள்பவர்கள் மண்டியிட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
கொடுங்கோண்மை ஒழியவும், கொத்தடிமைத்தனம் அழியவும், அதற்குரிய வலிமை கொண்ட இயக்கம், அண்ணா உருவாக்கிய, தலைவர் கருணாநிதி தொடர்ந்து வழிநடத்திய தி.மு.க., 2 ஆட்சிகளையும் அகற்றினால்தான் தமிழ்நாட்டிற்கும், இந்தியாவுக்கும் விடிவுகாலம் பிறக்கும். உதயசூரியனால்தான் விடியல் வெளிச்சம் கிடைக்கும்.
அண்ணா வகுத்து தந்த கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு இந்த மூன்றையும் நாம் கடைப்பிடிக்க வேண்டியது கட்டாயமாகும். அண்ணாவின் மறைவுக்குப் பிறகு தலைவர் கருணாநிதி நமக்கு வகுத்தளித்த ஐம்பெரும் முழக்கங்களான, “அண்ணா வழியில் அயராது உழைப்போம். ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம். இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம். வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம். மத்தியில் கூட்டாட்சி - மாநிலத்தில் சுயாட்சி” இந்த ஐந்தையும் உள்ளத்தில் ஏந்தி உரக்க ஒலித்து, அதனை நிறைவேற்ற உற்சாகத்துடன் செயலாற்றுவோம்.
வங்கக் கடலோரம் துயில் கொள்ளும் தலைவர்கள் இருவரும் நமக்கு கலங்கரை விளக்குகளாக வழிகாட்டுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 3-ந் தேதி அண்ணாவின் நினைவு நாளையொட்டி கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்திற்கு அமைதிப் பேரணியாகச் சென்று மலரஞ்சலி செலுத்துவதைப் பெருங்கடமையாகக் கடைப்பிடித்தவர் தலைவர் கருணாநிதி.
அவர் வகுத்துத் தந்த வழியில், அண்ணாவின் 50-ம் ஆண்டு நினைவு நாளில், சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்து அண்ணா நினைவிடம் வரையிலான அமைதிப் பேரணியில் அலை அலையாகப் பங்கேற்போம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story