மாநாட்டுக்கு தடை கேட்டு பொதுநல வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் ஐகோர்ட்டு உத்தரவு
நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறும் மாநாட்டுக்கு தடை கேட்டு வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தைச் சேர்ந்த சி.சரவணன் என்பவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘நாமக்கல்லில் நாளை (3-ந் தேதி) கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் 2-வது கொங்கு உலக தமிழ் மாநாடு நடத்தப்படவுள்ளது.
சேலம்-கரூர் தேசிய நெடுஞ்சாலை அருகில் பொம்மைகுட்டை மேடு என்ற பகுதியில் இந்த மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும். எனவே இந்த மாநாட்டுக்கு தடை விதிக்க வேண்டும்’ என அதில் கோரியிருந்தார்.
அபராதம்
இந்த மனுவை நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோர் விசாரித்தனர். அப்போது, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் ஆஜரான வக்கீல், ‘மனுதாரர், எம்.எல்.ஏ. தனியரசு நடத்தும் கொங்கு இளைஞர் பேரவையை சேர்ந்தவர். அதை மனுவில் குறிப்பிடவில்லை. மேலும், தனியார் இடத்தில் நடத்தவுள்ள மாநாட்டுக்கு உரிய முன் அனுமதி பெறப்பட்டுள்ளது. எனவே, உள்நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த பொதுநல வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும்’ என்று வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதிகள், ‘இந்த வழக்கு தள்ளுபடி செய்கிறோம். விவரங்களை மறைத்து வழக்கு தொடர்ந்து, கோர்ட்டு நேரத்தை வீணடித்த மனுதாரர் சரவணனுக்கு ரூ.25 ஆயிரம் வழக்கு செலவு (அபராதம்) விதிக்கிறோம். இந்த தொகையை ஐகோர்ட்டு சமரச மையத்துக்கு செலுத்தவேண்டும். இந்த மாநாடு தொடர்பான விரிவான அறிக்கையை வருகிற 19-ந் தேதி வருவாய் கோட்டாட்சியர், நல்லிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர் தாக்கல் செய்யவேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story