தினகரன் கூறும் கருத்துகள் கானல் நீராகத்தான் இருக்கும் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
டி.டி.வி. தினகரன் கூறும் கருத்துகள் கானல் நீராகத்தான் இருக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
அடையாறு,
சென்னை மெரினா கலங்கரை விளக்கம் அருகே நேற்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
நல்லது செய்தால் வரவேற்பு
மத்திய அரசு நல்லது செய்தால் வரவேற்பதும், எதிரான திட்டங்களை கொண்டு வந்தால் அதை எதிர்ப்பதும் என அன்னப்பறவை போல அ.தி.மு.க. செயல்பட்டு வருகிறது. தமிழகத்துக்கு வருகிற பல திட்டங்களில் மக்களுக்கு எதிரான திட்டங்கள் இருக்கும் பட்சத்தில் அவற்றை வேரோடு வேராக அறுத்து எறியப்படும்.
தி.மு.க. ஒரு ஒட்டுண்ணி கட்சி. அவர்கள் பசை இருக்கும் இடத்தில் ஒட்டிக்கொண்டு உள்ளனர். ஆனால் அ.தி.மு.க.வின் ஒரே எண்ணம் தமிழக மக்களுக்கு யார் நல்லது செய்கிறார்கள் என்பதை பொறுத்தே கூட்டணி அமையும்.
தேர்தல் நேரத்தில் அறிவிப்பு
அ.தி.மு.க.வில் யார் கூட்டணிக்கு வந்தாலும் எங்கள் தலைமையில், எங்கள் கட்டுப்பாட்டில்தான் அமைத்துக்கொள்வோம். யாருடன் கூட்டணி என்பது குறித்து தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்படும். தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க.வின் கூட்டணி குறித்து கட்சி தலைமை அதிகாரப்பூர்வமாக வெளியிடும்.
கானல் நீராகத்தான் இருக்கும்
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் குறித்த எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை மக்கள் வரவேற்று உள்ளார்களா? என்பது நாடாளுமன்ற தேர்தலின் முடிவில்தான் தெரியவரும்.
அ.தி.மு.க. அரசும், கட்சியும் தமிழகத்தில் இருக்கக்கூடாது என்பது மட்டுமே டி.டி.வி. தினகரனின் ஒரே எண்ணம். அவரது உடம்பில் அ.தி.மு.க. ரத்தம் ஓடாததால் அவ்வாறு தேவையில்லாத கருத்துகளை தெரிவித்து வருகிறார். ஆனால் அதே நேரத்தில் டி.டி.வி.தினகரன் கூறும் கருத்துகள் கானல் நீராகத்தான் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story