மோட்டார் சைக்கிளில் ‘ஹெல்மெட்’ அணியாமல் செல்லும் போலீசார் மீது நடவடிக்கை டி.ஜி.பி. ராஜேந்திரன் எச்சரிக்கை


மோட்டார் சைக்கிளில் ‘ஹெல்மெட்’ அணியாமல் செல்லும் போலீசார் மீது நடவடிக்கை டி.ஜி.பி. ராஜேந்திரன் எச்சரிக்கை
x
தினத்தந்தி 2 Feb 2019 10:30 PM GMT (Updated: 2 Feb 2019 8:20 PM GMT)

மோட்டார் சைக்கிளில் ‘ஹெல்மெட்’ அணியாமல் செல்லும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் டி.ஜி.பி. ராஜேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை,

சாலை விபத்துக்களில் பெரும்பாலும் மோட்டார் சைக்கிளில் ‘ஹெல்மெட்’ (தலைக்கவசம்) அணியாமல் செல்பவர்களே அதிக அளவில் உயிரிழக்கிறார்கள். எனவே தமிழகத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டி செல்பவரும், பின்னால் அமர்ந்து செல்பவரும் கட்டாயம் ‘ஹெல்மெட்’ அணிய வேண்டும் என்ற உத்தரவு அமலில் இருந்து வருகிறது.

இதனை போலீசாரும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று தமிழக போலீஸ் டி.ஜி.பி. ராஜேந்திரன் அறிவுறுத்தி இருந்தார். எனினும் பெரும்பாலான போலீசார் மோட்டார் சைக்கிளில் செல்லும்போது, ‘ஹெல்மெட்’ அணிவது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

போலீசார் மீது நடவடிக்கை

இதையடுத்து ‘ஹெல்மெட்’ அணியாத போலீசார் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.ஜி.பி. ராஜேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு, அவர் வழங்கிய உத்தரவில், போலீசார் ‘ஹெல்மெட்’ அணிந்து பொதுமக்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். தங்களுக்கு கீழ் பணியாற்றும் போலீசார், மோட்டார் சைக்கிளில் செல்லும்போது ‘ஹெல்மெட்’ அணிந்து செல்கிறார்களா? என்பதை கண்காணிக்க வேண்டும். ‘ஹெல்மெட்’ அணியாமல் செல்லும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

‘ஹெல்மெட்’ அணியாமல் சென்று போலீசார் விபத்தில் சிக்கி உயிரிழந்தால், அவருக்கான பொறுப்பு அதிகாரி இடைநீக்கம் செய்யப்படுவார்’ என்று கூறியுள்ளார்.

Next Story