போராட்டங்களை தூண்டி ஆட்சியை கவிழ்க்க சதி மு.க.ஸ்டாலின் மீது எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு


போராட்டங்களை தூண்டி ஆட்சியை கவிழ்க்க சதி மு.க.ஸ்டாலின் மீது எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு
x
தினத்தந்தி 3 Feb 2019 5:15 AM IST (Updated: 3 Feb 2019 1:59 AM IST)
t-max-icont-min-icon

போராட்டங்களை தூண்டி ஆட்சியை கவிழ்க்க சதி செய்வதாக மு.க.ஸ்டாலின் மீது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி உள்ளார்.

சேலம்,

சேலம் செவ்வாய்பேட்டையில் இருந்து இளம்பிள்ளை செல்லும் சாலையில் கந்தம்பட்டி சந்திப்பில் ரூ.33 கோடியில் புதிய மேம்பாலம் உள்பட ரூ.40 கோடியில் 3 புதிய மேம்பாலங்கள் கட்டப்படுகின்றன. இந்த பணிகளுக்காக அடிக்கல் நாட்டு விழா மற்றும் பல்வேறு துறைகள் மூலம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சேலம் கந்தம்பட்டியில் நேற்று நடந்தது.

விழாவில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு புதிய மேம்பாலம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டியும், ரூ.12 கோடியே 26 லட்சம் மதிப்பில் 4 ஆயிரத்து 49 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

ஆட்சியை பற்றி விமர்சனம்

தேர்தலின் போது அளித்த வாக்குறுதி மட்டுமில்லாமல் மக்களுக்கு தேவையான திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களும் ஏழை, எளிய மக்களின் மேம்பாட்டுக்காகவே பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினார்கள். அவர்களை தொடர்ந்து இந்த அரசும் மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

ஆனால் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு பஞ்சாயத்தில் உட்கார்ந்து கொண்டு கிராமசபை கூட்டம் என்று, இவர் தனியாக ஒரு கூட்டத்தைக் கூட்டி பேசுகிறார்.

அப்போது, பல்வேறு குற்றச்சாட்டுகளை அரசின் மீது சுமத்துகிறார். இந்த ஆட்சியை பற்றி விமர்சனம் செய்கிறார். இந்த ஆட்சியில் எதுவும் நடக்கவில்லை என்று ஒரு தவறான குற்றச்சாட்டை கூறிக்கொண்டிருக்கிறார். ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த காலத்தில், என்னென்ன திட்டங்கள் அறிவிக்கப்பட்டதோ, நடைமுறைப்படுத்தப்பட்டதோ அந்த திட்டங்களை இந்த அரசு தொடர்ந்து நடைமுறைப்படுத்தி, மக்கள் வரவேற்பை பெற்றிருக்கிறது.

தூங்கும்போதும் கூட...

அதைப் பொறுத்துக்கொள்ள முடியாத மு.க.ஸ்டாலின் கிராமசபை கூட்டி பேசுகின்ற போது, கிராமம் தான் கோவில் என்று பேசுகிறார். இது ஏற்கனவே நமக்கு தெரியும். நான் கிராமத்தில் பிறந்து வாழ்ந்தவன். அவர் நகரத்தில் இருந்ததால், கிராமம் ஒரு கோவில் என்று இப்பொழுதுதான் புதிதாக கண்டுபிடித்திருக்கிறார். அவரது புது கண்டுபிடிப்பிற்கு, கின்னஸ் சாதனை கிடைத்தது மாதிரி, அவர் அந்த சாதனையை படைத்திருக்கிறார். ஏழை, எளிய குடும்பத்தில் பிறந்த பெண் குழந்தைகள் திருமண உதவி திட்டத்தில் பயன்பெற வேண்டும் என்பதற்காக தான் தாலிக்கு தங்கம் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறோம். அவருக்கு புள்ளி விவரங்கள் தெரியாது.

மு.க.ஸ்டாலினுக்கு எப்போதும் என்னை பற்றிய நினைப்பு தான் இருக்கிறது. தூங்கும்போது கூட என்னை நினைத்து கொண்டுதான் தூங்குவார் என்று நினைக்கிறேன். எப்போது இந்த எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சர் பதவியிலிருந்து அகற்ற வேண்டும்? அந்த பதவியிலிருந்து அகற்றுவதற்கு எவ்வித தில்லுமுல்லு செய்யணும்? எவ்வித சூழ்ச்சி செய்யணும், யார் யாரையெல்லாம் போராடுவதற்கு தூண்டிவிடுவது. இந்த நாட்டிலே எப்படியெல்லாம் சட்டம், ஒழுங்கு சீர் குலைவதற்கு என்னென்ன சூழ்ச்சி செய்ய வேண்டுமோ? அத்தனையையும் அவர் செய்து கொண்டிருக்கிறார். போராட்டங்களை தூண்டி இந்த ஆட்சியை கவிழ்க்க சதி நடக்கிறது. ஆனால் அத்தனையும் மக்களுடைய ஆதரவோடு முறியடிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க. ஆட்சியில் என்ன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது? அ.தி.மு.க. ஆட்சியில் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது? என்பதை பொதுமக்கள் தெரிந்து கொள்ளவேண்டும். ஊர், ஊராக சென்று இந்த ஆட்சியிலே எதுவும் செய்யவில்லை. மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை என்று தவறான தகவலை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து வருகிறார். இதெல்லாம் உண்மைக்கு புறம்பானது. அவரால் அரசியல் ரீதியாக எங்களை எதிர்க்க முடியவில்லை. ஆகவே, குறுக்கு வழியை கையாண்டு பொய்யான தகவலை மக்களிடத்தில் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் அதை பொதுமக்கள் நம்பாமல் எப்போதும் அ.தி.மு.க. அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.


ஏழைகள், விவசாயிகளுக்கு பொங்கல் போனஸ்
எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு 

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விழாவில் மேலும் பேசும்போது, ஏழை மக்களும் பொங்கலை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக தான் பொங்கல் பரிசாக ரூ.1,000 வழங்கப்பட்டது. இதுவரை எந்த ஆட்சியிலும், எந்த மாநிலங்களிலும் இதுபோன்று வழங்கியது கிடையாது. எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், அவருடைய கட்சியை சேர்ந்த வக்கீலை தூண்டிவிட்டு உயர்நீதிமன்றத்தில் வழக்குபோட்டு, தடையாணை வாங்க முயற்சி செய்தார். ஆனால், மக்கள் தான் எஜமானர்கள். மக்கள் தான் நீதிபதிகள். ஆகவே, நீதிமன்றத்தில் நீதி வென்றது. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அனைத்து ஏழை மக்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கி, எல்லா இல்லங்களிலும் பொங்கல் பொங்குகின்ற காட்சியை பார்க்க முடிந்தது.

பல்வேறு தொழிற்சாலைகளில் பணிபுரிகின்றவர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் பொங்கல் போனஸ் மற்றும் தீபாவளி பண்டிகை போனஸ் கொடுக்கின்றார்கள். அதைப்போல நம் முடைய ஏழை மக்களுக்கு ஏன் கொடுக்கக்கூடாது?. அதற்கு எந்த தடை வந்தாலும் இந்த அரசு உடைத்தெறிந்து அவர்களுக்கு கொடுக்கும். ஏனென்றால், அவர்கள் உழைத்தால் தான் மற்றவர்கள் சிறப்பாக வாழமுடியும். அவர்கள் வேர்வையாக சிந்துகிற ரத்தம் இந்த நாட்டின் வளர்ச்சிக்காக சிந்துகின்ற வேர்வை என்பதை எண்ணி பார்க்க வேண்டும். ஆகவே, அந்த ஏழைகளுக்கு எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வாரிவாரி கொடுத்தார்கள். அந்த வழியிலே இந்த அரசும் வாரிவாரி வழங்கும் என்று தெரிவித்துக்கொள்கிறேன். எதிர்காலத்தில் விவசாயிகளுக்கும், ஏழை தொழிலாளர்களுக்கும் பொங்கல் போனஸ் வழங்கும் திட்டம் விரைவில் கொண்டுவரப்படும் என்று கூறினார்.

Next Story