தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் சிறுத்தை குட்டி கடத்தல் சுங்க இலாகா சோதனையில் பிடிபட்டது


தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் சிறுத்தை குட்டி கடத்தல் சுங்க இலாகா சோதனையில் பிடிபட்டது
x
தினத்தந்தி 3 Feb 2019 4:30 AM IST (Updated: 3 Feb 2019 2:02 AM IST)
t-max-icont-min-icon

தாய்லாந்தில் இருந்து விமானத்தில் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட சிறுத்தை குட்டியை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு தாய்லாந்தில் இருந்து விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் ‘ஸ்கேனிங்’ செய்தனர்.

அப்போது தாய்லாந்து நாட்டுக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பி வந்த சென்னையை சேர்ந்த காஜாமொய்தீன் (வயது 45) என்பவரது உடைமைகளை ‘ஸ்கேனிங்’ செய்தபோது, அவரிடம் இருந்த ஒரு பிளாஸ்டிக் கூடைக்குள் உயிருள்ள பொருள் அடைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர்.

சிறுத்தை குட்டி

உடனே சுங்க இலாகா அதிகாரிகள், அந்த பிளாஸ்டிக் கூடையை திறந்து பார்த்தபோது அதில் 1 மாத சிறுத்தை குட்டி வைக்கப்பட்டு அதன்மேல் துணியை கொண்டு மூடி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அப்போது அந்த சிறுத்தை குட்டி பசியால் கத்திக்கொண்டே இருந்தது. உடனடியாக அந்த சிறுத்தை குட்டிக்கு சுங்க இலாகா அதிகாரிகள் பாட்டில் மூலம் பால் வழங்கினர்.

இதுபற்றி காஜாமொய்தீனிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்தனர். சென்னையில் ஒருவர் சிறுத்தை குட்டி கேட்டதால் வாங்கி வந்ததாகவும், பார்ப்பதற்கு பூனை போல் உள்ளதால் அதை வளர்ப்பு பிராணி என நினைத்து அதிகாரிகள் கண்டுகொள்ள மாட்டார்கள் என்று கருதியதாகவும் அவர் கூறினார்.

வனத்துறையிடம் ஒப்படைப்பு

சிறுத்தை குட்டியை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இதுபற்றி வண்டலூர் உயிரியல் பூங்கா அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக வண்டலூர் பூங்கா வனத்துறை அதிகாரிகள் சென்னை விமான நிலையம் வந்து சிறுத்தை குட்டியை பார்வையிட்டனர்.

அதில் அது, பிறந்து ஒரு மாதமே ஆன பெண் சிறுத்தை குட்டி என்பதும், 1 கிலோ 100 கிராம் எடைகொண்டது என்பதும் தெரிந்தது. இதையடுத்து மேல் நடவடிக்கைக்காக சிறுத்தை குட்டி மற்றும் அதை விமானத்தில் கடத்தி வந்த காஜாமொய்தீனை வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

வனச்சட்டத்தின் கீழ் காஜாமொய்தீன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்த வனத்துறை அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

முதல் முறையாக...

வெளிநாடுகளில் இருந்து தங்கம், எலக்ட்ரானிக் பொருட்கள், போதை பொருட்கள், நட்சத்திர ஆமைகள் ஆகியவை கடத்தி வருவதை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். ஆனால் சென்னை விமான நிலையத்துக்கு முதல் முறையாக சிறுத்தை குட்டி விமானத்தில் கடத்தி வரப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் பிடிபட்ட சிறுத்தை குட்டியை மீண்டும் தாய்லாந்து நாட்டுக்கே திரும்பி அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story