திருநாவுக்கரசர் மாற்றப்பட்டார் தமிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி நியமனம்


திருநாவுக்கரசர் மாற்றப்பட்டார் தமிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி நியமனம்
x
தினத்தந்தி 3 Feb 2019 12:00 AM GMT (Updated: 2 Feb 2019 8:36 PM GMT)

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து திருநாவுக்கரசர் மாற்றப்பட்டார். புதிய தலைவராக கே.எஸ்.அழகிரி நியமிக்கப்பட்டுள்ளார்.

புதுடெல்லி,

தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர், 2016-ம் ஆண்டு செப்டம்பர் 13-ந் தேதி நியமிக்கப்பட்டார். 2 ஆண்டுகளுக்கு மேலாக, அவர் இப்பதவியை வகித்து வந்தார்.

இந்த ஆண்டு, நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முன்பு, திருநாவுக்கரசரை மாற்ற வேண்டும் என்று தமிழக காங்கிரசில் உள்ள இதர கோஷ்டி தலைவர்கள் வற்புறுத்தி வந்தனர்.

ஆனால், “என் தலைமையில்தான் நாடாளுமன்ற தேர்தலை தமிழக காங்கிரஸ் சந்திக்கும். தலைவர் மாற்றம் கிடையவே கிடையாது” என்று தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் முன்னிலையில் திருநாவுக்கரசர் சமீபத்தில் பேசி இருந்தார். அதனால், எதிர்கோஷ்டி தலைவர்கள் அதிருப்தி அடைந்தனர்.

மாற்றம்

திருநாவுக்கரசரை மாற்றியே தீர வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை வற்புறுத்தி வந்தனர். மேலும், நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக திருநாவுக்கரசர் அமைக்க திட்டமிட்டிருந்த குழுக்களில் எதிர்கோஷ்டிகளின் ஆதரவாளர்கள் பெயர் இடம்பெறவில்லை. அதுவும், அதிருப்தி அதிகரிக்க காரணமானது.

திருநாவுக்கரசரை மாற்ற வலியுறுத்துவதற்காக, எதிர்கோஷ்டி தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டனர். அதே சமயத்தில், டெல்லிக்கு வருமாறு திருநாவுக்கரசருக்கு காங்கிரஸ் மேலிடம் அவசர அழைப்பு விடுத்தது. அதை ஏற்று கடந்த 31-ந் தேதி அவர் டெல்லி சென்றார்.

இந்நிலையில், டெல்லியில் நேற்று மேலிட தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில், தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் மாற்றம் செய்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

ஆலோசனையின் இறுதியில், தலைவர் பதவியில் இருந்து திருநாவுக்கரசரை மாற்றுவது என்று முடிவு செய்யப்பட்டது.

கே.எஸ்.அழகிரி

தமிழக காங்கிரஸ் கட்சி புதிய தலைவராக கே.எஸ். அழகிரி நியமிக்கப்பட்டார்.

மேலும், தமிழக காங்கிரஸ் செயல் தலைவர்களாக எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜெயக்குமார், விஷ்ணு பிரசாத், மயூரா ஜெயக்குமார் ஆகியோரை கட்சி மேலிடம் நியமித்துள்ளது.

“தமிழக காங்கிரஸ் தலைவராக சிறப்பாக செயல்பட்ட திருநாவுக்கரசருக்கு பாராட்டுகள்” என்று டெல்லியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறினார்.

புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கே.எஸ்.அழகிரி, கடந்த 1991, 1996 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் சிதம்பரம் தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக பணியாற்றி உள்ளார். 1996-ம் ஆண்டு தேர்தலில், அவர் த.மா.கா. சார்பில் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2009-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் கடலூர் தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி.யாக இருந்தார்.

பேட்டி

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டது குறித்து கே.எஸ்.அழகிரி கூறியதாவது:-

நான் காங்கிரஸ் இயக்கத்தில் அரை நூற்றாண்டு காலமாக அடிமட்ட தொண்டனாக இருக்கிறேன். எங்கள் தலைவர் ராகுல் காந்தி என்னை கண்டறிந்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமித்துள்ளார்.

ப.சிதம்பரத்துக்கு நன்றி

இதற்காக தலைவர் ராகுல்காந்திக்கும், ப.சிதம்பரத்துக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

பெருந்தலைவர் காமராஜரும், மக்கள் தலைவர் ஜி.கே.மூப்பனாரும் அமர்ந்த பதவியில் அமரும் நான், அவர்களின் புகழுக்கு மகுடம் சூட்டும் வகையில் பணியாற்றுவேன். காங்கிரசின் உயர்ந்த கொள்கைகளை தூக்கிப்பிடிப்பேன். மதசார்பற்ற சக்திகளின் பலத்தை தமிழகத்தில் நிரூபிப்பேன். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மதவாத சக்திகளை தோற்கடிக்க தி.மு.க. தலைமையிலான கூட்டணியுடன் இணைந்து 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற பாடுபடுவேன். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை அமைப்பு ரீதியாக மேம்படுத்தும் வகையில் பணியாற்றுவேன்.

இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறினார்.

Next Story