சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்றும் எண்ணம் இல்லை ஐகோர்ட்டில், தமிழக அரசு தகவல்


சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்றும் எண்ணம் இல்லை ஐகோர்ட்டில், தமிழக அரசு தகவல்
x
தினத்தந்தி 4 Feb 2019 11:00 PM GMT (Updated: 2019-02-05T02:51:31+05:30)

சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்றும் எண்ணம் எதுவும் தற்போது இல்லை என்று ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை,

கோவை மாவட்டத்திலுள்ள பெரியதடாகம் வனப்பகுதியில் விவசாய நிலங்களை காட்டு யானை ஒன்று சேதப்படுத்துவதாக வனத்துறையிடம் விவசாயிகள் புகார் செய்தனர். அந்த யானைக்கு ‘சின்னத்தம்பி’ என்ற பெயரையும் சூட்டினர்.

இதனையடுத்து மிகப்பெரிய போராட்டத்துக்கு பிறகு சின்னத்தம்பி யானையை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர். பின்னர், அதை வாகனத்தில் ஏற்றி, ‘டாப்சிலிப்’ வனப்பகுதியில் விட்டனர்.

அந்த யானையின் நடமாட்டத்தை கண்டறிய, அதன் காதில் ஜி.பி.எஸ். கருவியையும் பொருத்தினர். ஆனால், ‘டாப்சிலிப்’ வனப்பகுதியில் விடப்பட்ட அந்த யானை மீண்டும் ஊருக்குள் புகுந்தது. அந்த யானையை வனத்துறையினரால் காட்டுக்குள் விரட்ட முடியவில்லை.

இந்த நிலையில், இந்த யானையை கும்கி யானையாக மாற்றப்படும் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில், விலங்குகள் நல ஆர்வலர் அருண் பிரசன்னா பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அவசர வழக்காக நேற்று விசாரித்தனர்.

அந்த வழக்கு மனுவில், ‘யானை-மனிதர் மோதலை தடுக்கவும், இதற்கு நிரந்தர தீர்வு காணவும் ஒரு குழு அமைக்கவேண்டும். ஊருக்குள் நுழையும் யானைகளை வேறு இடத்துக்கு கொண்டு செல்வது தொடர்பாக விதிகளை உருவாக்கவேண்டும். காட்டு யானை சின்னத்தம்பியை கும்கி யானையாக மாற்றாக்கூடாது. இதற்கு தடை விதிக்க வேண்டும். வன விலங்குகளை பாதுகாக்கும் வகையில் ஊருக்குள் நுழையும் யானைகளை பிடித்து, வனப்பகுதிக்குள் விடுவதற்கு மாற்று வழிகளை பின்பற்ற அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்ததும், அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் கூறுகையில், ‘சின்னதம்பி யானையைப் பிடித்து கும்கியாக மாற்றும் திட்டம் ஏதும் இப்போது இல்லை. தற்போது அமராவதியில் நடமாடும் யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் அனுப்ப இரு கும்கி யானைகளுடன் வனத்துறை அதிகாரிகள் காட்டுக்குள் சென்றுள்ளனர். அவர்களுடன், யானைகள் நிபுணர் அஜய்தேசாயும் சென்றுள்ளார். எல்லா யானைகளையும் கும்கியாக மாற்ற முடியாது. முதலில் முதுமலை வனப்பகுதிக்கு அனுப்ப திட்டமிட்டோம். சிறைபிடிப்பது கடைசி வாய்ப்பாக பயன்படுத்துவோம். வனப்பகுதிக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம். இரு யானைகள் குட்டியுடன் வந்தன. அவற்றை திருப்பி அனுப்பியபோது, சின்னத்தம்பி யானை மட்டும் திரும்பி ஊருக்கு வந்து விட்டது. மக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளே தற்போது மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் தற்போது சின்னத்தம்பியை கும்கியாக மாற்ற எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை’ என்று கூறினார்.

பின்னர் நீதிபதிகள், இந்த வழக்கிற்கு விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற 11-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Next Story