மு.க.ஸ்டாலின் பிறந்த நாளில் இனிப்பான தகவலை தே.மு.தி.க. வெளியிடுமா?
அ.தி.மு.க.வை விட கூடுதல் தொகுதிகள் தருவதாக தி.மு.க. பேச்சு வார்த்தை நடத்துவதால், மு.க.ஸ்டாலின் பிறந்த நாளான இன்று (வெள்ளிக்கிழமை) இனிப்பான தகவலை தே.மு.தி.க. வெளியிடுமா? என்று அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
சென்னை,
நாடாளுமன்ற தேர்தலை அதீத பலத்துடன் எதிர்கொள்ள தமிழகத்தில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் பிற கட்சிகளுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தி வரும் நிலையில், தே.மு.தி.க. இரண்டு பக்கமும் போக்குகாட்டுவதால், கூட்டணியை இறுதி செய்ய முடியாத நிலையில் இரு கட்சிகளும் இருந்து வருகின்றன.
மார்ச் 1-ந் தேதியை (இன்று) தி.மு.க.வும், மார்ச் 5-ந் தேதியை அ.தி.மு.க.வும் சுட்டிக்காட்டி, அதற்குள் கூட்டணி முடிவை அறிவிக்குமாறு தே.மு.தி.க.வுக்கு கெடு விதித்துள்ளன. தி.மு.க.வின் கெடு இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், தே.மு.தி.க. நல்ல முடிவை எடுத்து அறிவிக்கும் என்று அக்கட்சியினர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
காரணம், தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 4 தொகுதிகளும், ஒரு ராஜ்ய சபா ‘சீட்’டும் தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே அளவு தொகுதிகளை அ.தி.மு.க.வும் வழங்குவதாக ஏற்கனவே தெரிவித்திருந்ததால், இந்தப் பக்கமா?, அந்தப் பக்கமா? என்று தே.மு.தி.க. யோசித்துக் கொண்டிருந்தது. ஆனால், அ.தி.மு.க. திடீரென தொகுதிகளின் எண்ணிக்கையை 3 ஆக குறைத்துக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அதிருப்தி அடைந்த தே.மு.தி.க., தி.மு.க.வோடு கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளான இன்று (வெள்ளிக்கிழமை) இனிப்பான தகவலை தே.மு.தி.க. வெளியிடுமா? என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது. நாளை (2-ந் தேதி) கூட்டணியை இறுதி செய்து, கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கவும் தி.மு.க. திட்டமிட்டுள்ளது.
தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்தால், காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 10 தொகுதிகளில் 2 தொகுதிகளை அக்கட்சி இழக்க நேரிடும் என்று கூறப்படுகிறது.
அதேபோல், தி.மு.க.வும் தங்களுக்கான தொகுதிகளில் இருந்து 2 தொகுதிகளை தே.மு.தி.க.வுக்காக விட்டுக்கொடுக்கும் என்றும் தெரிகிறது. ஆனால், 2 தொகுதிகளை இழக்க காங்கிரஸ் கட்சி தயாராக இல்லை என்றும் கூறப்படுகிறது.
அதே நேரத்தில், அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெற வேண்டும் என்று அ.தி.மு.க. விரும்பியதைவிட, கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்றொரு கட்சியான பா.ஜ.க.வே அதிகம் விரும்பியது. எனவே, எப்படியும் தே.மு.தி.க.வை அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெறச் செய்து, வரும் 6-ந் தேதி பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் சென்னையில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், அக்கட்சி தலைவர்களையும் பங்கேற்க செய்துவிட வேண்டும் என்று பா.ஜ.க. இறுதிக்கட்ட முயற்சியில் இறங்கியுள்ளது.
Related Tags :
Next Story