வாக்காளர்கள், வேட்பாளர்கள் பயன்பாட்டுக்காக தேர்தல் கமிஷன் உருவாக்கிய செல்போன் செயலிகள் தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்


வாக்காளர்கள், வேட்பாளர்கள் பயன்பாட்டுக்காக தேர்தல் கமிஷன் உருவாக்கிய செல்போன் செயலிகள் தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 1 March 2019 4:30 AM IST (Updated: 1 March 2019 6:48 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தல் நடவடிக்கைகளை எளிமைப்படுத்தும் வகையில் இந்திய தேர்தல் கமிஷன் செல்போன் செயலிகளை உருவாக்கியுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு கூறினார்.

சென்னை, 

இதுதொடர்பாக சத்ய பிரத சாகு நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

மக்கள் பயன்பாட்டுக்காக பல்வேறு செல்போன் (ஆப்) செயலிகளை இந்திய தேர்தல் கமிஷன் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, சி விஜில் ( cV-I-G-IL ) என்ற செல்போன் செயலி மூலம் தேர்தல் நடத்தை விதிகளை அறியலாம். தேர்தல் செலவு தொடர்பான விதிமீறல் நடவடிக்கைகளை புகைப்படம் அல்லது வீடியோவாக எடுத்து பதிவேற்றம் செய்யலாம். இந்த தகவல் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் பெறப்பட்டு 100 நிமிடங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்.

PwD என்ற மாற்றுத்திறனாளிகளுக்கான செல்போன் செயலி மூலம் மாற்றுத்திறனாளி வாக்காளர் தன் உடல்நிலை பற்றி பதிவு செய்யலாம். அதன்படி, அவருக்கான வாக்குச்சாவடியில் வசதிகள் செய்யப்படும்.

suvi-d-h-a-n-o-m-i-n-at-i-on செயலியில், வேட்பாளர்களுக்கான மனுத் தாக்கல் முடிந்து, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, அவர்களுடைய சொத்து அறிக்கை உள்ளிட்ட விபரங்களை இந்த செயலி மூலம் மக்கள் பார்க்கவும், பதிவிறக்கம் செய்யவும் முடியும். இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட 2 நாட்களில் இந்த விவரங்களை செயலியில் பெற முடியும்.

suvi-d-h-a-p-e-r-m-iss-i-on என்ற செல்போன் செயலி மூலம், அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம், பொதுக்கூட்டங்களுக்கான அனுமதிக்கு விண்ணப்பித்தல், உத்தரவுகளை பெறுதல் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரே நாள், ஒரே இடம், ஒரே நேரத்தில் பிரசாரம், பொதுக்கூட்டத்துக்கு வெவ்வேறு கட்சியின் வேட்பாளர்கள் விண்ணப்பித்தால் அந்த விண்ணப்பத்தை செயலி தானாக தள்ளுபடி செய்துவிடும். விண்ணப்பத்தை பதிவு செய்ததும் சம்பந்தப்பட்ட காவல் நிலையம் மற்றும் அதற்கு அனுமதி அளிக்கும் அதிகாரியின் செல்போனுக்கு அதுபற்றிய தகவல் சென்றடையும்.

வேட்பாளர்களுக்காக உருவாக்கப்பட்ட suvi-d-ha என்ற செயலியின் மூலம் வேட்பு மனுவின் நிலை, வேட்பாளர் விவர அறிக்கை, பிரசாரத்துக்கான அனுமதி உத்தரவு, வாக்கு எண்ணிக்கையின் சுற்றுகள் வாரியான நிலவரம் மற்றும் இறுதி முடிவு ஆகியவற்றை கைபேசி எண்ணில் பெறலாம்.

1950 என்ற செல்போன் செயலி மூலம் வாக்காளர் அடையாள அட்டை எண் உதவியுடன், வாக்காளர்கள் தங்களின் விவரங்களை பதிவிறக்கம் செய்யலாம். சுவிதா செயலிகள், நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கை வெளியிடப்பட்டதும் செயல்பாட்டுக்கு வரும். தேர்தல் விழிப்புணர்வு, பிரசார குறும்படம் போன்றவற்றை தயாரிப்பதற்காக நடிகர் விஜய்சேதுபதி மற்றும் நடிகை ஓவியா ஆகியோரை அணுகியிருக்கிறோம். மற்ற நடிகர், நடிகைகளிடம் நேரம் கோரப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story