சட்டவிரோத ‘பார்களை’ தடுக்க அதிகபட்ச தண்டனை சட்டத்திருத்தம் கொண்டு வர ஐகோர்ட்டு உத்தரவு


சட்டவிரோத ‘பார்களை’ தடுக்க அதிகபட்ச தண்டனை சட்டத்திருத்தம் கொண்டு வர ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 1 March 2019 4:15 AM IST (Updated: 1 March 2019 1:34 AM IST)
t-max-icont-min-icon

சட்டவிரோத பார்களை தடுக்க அதிகபட்ச தண்டனை வழங்க சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

சென்னை, 

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத பார்கள் ஏராளமாக நடத்தப்படுவதாகவும், அவற்றை மூட உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் பிரபாகரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு தமிழகத்தில் சட்டவிரோதமாக நடத்தப்படும் சுமார் 3 ஆயிரம் பார்களை மூடுமாறு உத்தரவிட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

சட்டங்களை இயற்ற வேண்டும் என்று அரசுக்கு பொதுவாக ஐகோர்ட்டு உத்தரவிடாது. தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை சட்டத்தின் கீழ் சட்டவிரோத பார்களை நடத்துபவர்களுக்கு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு தண்டனையும், அபராதமும் விதிக்கின்றன.

ஆனால் சட்டவிரோத பார்கள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. இந்த குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபடுபவர்கள் மீது அதிகபட்ச தண்டனை வழங்குவதற்கு சட்டத்திருத்தம் கொண்டுவர தமிழக அரசு தீவிரமாக பரிசீலனை செய்யவேண்டும். அப்போதுதான் சட்டவிரோத பார்கள் செயல்படுவதை தடுக்க முடியும்.

சட்டவிரோத பார்கள் இருப்பது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக அந்த பார்களை மூட வேண்டும். அதேநேரத்தில், இந்த நடவடிக்கையில் யாராவது பாதிக்கப்பட்டு இருந்தால் அவர்கள் மேல்முறையீடு செய்வதற்கான விதிகளையும் தமிழக அரசு உருவாக்க வேண்டும்.

சட்டவிரோத பார்கள் நடத்துபவர்களின் வாகனங்கள், உபகரணங்களை அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யவேண்டும். இந்த வழக்கை 28-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story