பயங்கரவாதத்திற்கு எதிராக வட்டியும் முதலுமாக திருப்பி தரப்படும் -பிரதமர் மோடி


பயங்கரவாதத்திற்கு எதிராக வட்டியும் முதலுமாக திருப்பி தரப்படும் -பிரதமர் மோடி
x
தினத்தந்தி 1 March 2019 5:26 PM IST (Updated: 1 March 2019 5:26 PM IST)
t-max-icont-min-icon

பயங்கரவாதத்திற்கு எதிராக வட்டியும் முதலுமாக திருப்பி தரப்படும் என பிரதமர் மோடி பேசினார்.

கன்னியாகுமரி,

ரூ.40 ஆயிரம் கோடி குமரி மாவட்ட மக்களுக்கான பல்வேறு நல திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திரமோடி இன்று குமரி மாவட்டம்  வந்தார். இதற்கான விழா அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் பங்கேற்றனர்.

முன்னதாக பிரதமர் மோடி திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகை தந்தார். அவரை ஆளுநர் பன்வாரி லால்,  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும்  அதிகாரிகள் நேரில் வரவேற்றனர்.

ராமேஸ்வரம் - தனுஷ்கோடி இடையே ரயில் இணைப்பை புதுப்பித்தல் மற்றும் புதிய பாம்பன் இணைப்பு பாலம் கட்டுவதற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். மார்த்தாண்டபுரம் - பார்வதிபுரம் மேம்பாலங்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. சென்னை எழும்பூர் - மதுரை இடையே தேஜஸ் ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் விழா தொடங்கியது. விழாவில் பிரதமர் மோடிக்கு பொன்னாடை போர்த்தி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நினைவுப்பரிசு வழங்கினார்.

ஆளுநர், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் விழா மேடையில் உள்ளனர்.

விழாவில் பிரதமர் மோடி பேசினார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதார நாடு இந்தியா. மக்கள் விரும்புவது முன்னேற்றத்தை, வாக்கு வங்கி அரசியலை அல்ல.

* மக்கள் குடும்ப அரசியலை விரும்பவில்லை, முன்னேற்றத்தையும், நேர்மையான அரசியலையும் விரும்புகிறார்கள். மக்களின் வாக்குகளை பெற்ற முந்தைய அரசு எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை.

* விவசாயிகளுக்கு எதுவும் செய்யாமல், தேர்தல் நேரத்தில் கடனை தள்ளுபடி செய்வோம் என்கிறார்கள். லீப் ஆண்டு வருவது போல், விவசாயிகளுக்கான காங்கிரசின் திட்டமும் உள்ளது.

* ராமேஸ்வரம் - தனுஷ்கோடி இடையே ரயில் பாதைக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. 1964 பேரிடரில் இந்த ரயில்பாதை சேதமடைந்தது. 50 ஆண்டுகளாக யாரும் இதில் கவனம் செலுத்தவில்லை.

* மதுரை - சென்னை இடையே இயக்கப்படும் தேஜஸ், மேக் இன் இந்தியா திட்டத்தில் தயாரிக்கப்பட்டது. வரும் தலைமுறைக்காக உள்கட்டமைப்பு வசதிகளை துரிதமாகச் செய்து வருகிறோம்.

* சிறு விவசாயிகளுக்கு வாழ்வாதார திட்டத்தை செயல்படுத்தி உள்ளோம், 1.10 கோடி விவசாயிகளுக்கு முதல் தவணையாக ரூ.2000 வழங்கப்பட்டுள்ளது . மத்திய அரசின் திட்டம் 24 நாட்களுக்குள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

* பாம்பன் ரயில் மேம்பாலம் புதியதாகவும் தற்போது அமைக்கப்பட இருக்கிறது. 

* மக்களுக்கான மிகப்பெரிய காப்பீடான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை அரசு செயல்படுத்தியுள்ளது. பிப்ரவரியில் அறிவிக்கப்பட்ட திட்டம், அதே மாதத்தில் நடைமுறைக்கு வந்திருக்கிறது. 1.10 கோடி விவசாயிகள் நேரடியாக வங்கிக் கணக்கில் முதல் தவணை தொகையை பெற்றுள்ளனர். 

* தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மிக வேகமாகச் செயல்படுகிறது.  தேர்தலின்போது விவசாயக்கடனை தள்ளுபடி செய்யும் காங்கிரஸ் அதன்பிறகு அவர்களை பற்றி கவலைப்படாது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு  பெரும்பான்மையோடு இந்த அரசு 2014-ல் அமைந்தது. துணிச்சலாக கடுமையான நடவடிக்கை எடுக்கும் அரசு தேவை என்பதை மக்கள் தெளிவாகத் தெரிவித்திருந்தனர்.

* மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழக மக்களுக்கு செய்த நற்பணிகள் என்றும் நினைவில் வைத்து போற்றக்கூடியவை.

* இந்தியாவின் முதல் பெண் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டில் இருந்து வந்தவர் என்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன்.

* தமிழ்நாட்டிலிருந்து சென்றவர் தைரியமுள்ள விங் கமாண்டர் அபிநந்தன் என்பதால் ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்ள வேண்டும்.

* ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்காக, ஒரே ரேங்க், ஒரே ஓய்வூதியம் எனும் திட்டத்தை இந்த அரசு செயல்படுத்தியது.

* அண்மையில் ராணுவத்தின் செயல்பாடுகள் அதன் வலிமையை  எடுத்து காட்டுவதாக உள்ளது. பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக நமது ராணுவத்திற்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டு உள்ளது.

* நாடே பாராட்டினாலும் சிலர் ராணுவத்தின் நடவடிக்கைகளை சந்தேகிக்கிறார்கள்.

* நடுத்தர மக்களை பற்றி முந்தைய அரசு சிந்திக்கவில்லை. 

* பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில், மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப முந்தைய அரசு எதையும் செய்யவில்லை.

* நான் இன்று இருப்பேன் நாளை சென்று விடுவேன். இந்தியா எப்போதும் இருக்கும்.

* தற்போது தீவிரவாதத்திற்கு பயந்தவர்களாக நாம் இருக்கவேண்டியதில்லை, பயங்கரவாதத்திற்கு எதிராக வட்டியும் முதலுமாக திருப்பி தரப்படும்.  அரசியலுக்காக நாட்டின் பாதுகாப்பினை பலவீனம் அடைய செய்து விடாதீர்கள்.

* ராணுவ வீரர்களின் ஒரே தகுதி, ஒரே ஓய்வூதியம் பற்றி முந்தைய அரசு கண்டுகொள்ளவில்லை. சிந்தித்துகூட பார்க்கவில்லை. ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்காக, ஒரே ரேங்க், ஒரே ஓய்வூதியம் எனும் திட்டத்தை இந்த அரசு செயல்படுத்தியது.

* தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்களுக்கான முத்ரா திட்டத்தின் மூலம் தமிழகத்தில் தான் அதிகம் பேர் பயன் பெற்றுள்ளனர்.

* ஆழ்கடல் மீன்பிடி திட்டத்திற்காக ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது,  மீனவர்களுக்கு தகவல் தொடர்பு சாதனங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

*  முந்தைய அரசு மீனவர்களின் வாக்கை பெற்றுக்கொண்டு அவர்களுக்கு எதுவும் செய்யவில்லை. தற்போது உள்ள அரசு இஸ்ரோ உற்பத்தி செய்த கடல்சார் சாதனங்கள் மீன்வர்களுக்குத் தந்துள்ளது. ரூ.300 கோடியை ஆழ்கடலில் மீன் பிடிக்கும் மீனவர்களுக்காக ஒதுக்கியிருக்கிறோம். விவசாய கடன் அட்டை திட்டமானது மீனவர்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

*  நாட்டில் ஊழல் செய்தவர்கள் மக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறார்கள். இந்திய மக்கள்தான் என் குடும்பம், அவர்களுக்காக வாழ்வேன் என கூறினார்.

Next Story