நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக 13-ம் தேதி தமிழகம் வருகிறார் ராகுல்காந்தி


நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக 13-ம் தேதி தமிழகம் வருகிறார் ராகுல்காந்தி
x

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வருகிற 13-ந்தேதி தமிழகம் வருகிறார்.

சென்னை,

நாடாளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என்பதால், தேர்தலை சந்திப்பதற்கான ஆயத்த பணிகளில் அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன.

இந்த நிலையில் பா.ஜனதாவும், காங்கிரசும் தொகுதி பங்கீடுகளை முடித்து விட்டு தேர்தல் பிரசாரத்தை தீவிரமாக தொடங்க திட்டமிட்டுள்ளன. இதற்கிடையே இரு கட்சிகளின் தலைவர்களும் மாநில வாரியாக சென்று பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார்கள்.

பிரதமர் நரேந்திரமோடி கடந்த மாதமே தனது சூறாவளி சுற்றுப்பயணத்தை தொடங்கி விட்டார். இதுவரை அவர் தமிழ்நாட்டுக்கு 2 முறை வந்து சென்று விட்டார்.

அடுத்த கட்டமாக வருகிற 6-ந்தேதி மீண்டும் தமிழகம் வர உள்ளார். சென்னையில் நடக்கும் பிரமாண்ட கூட்டத்தில் கலந்து கொண்டு பேச உள்ளார். அப்போது அ.தி.மு.க-பா.ஜனதா கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் அந்த மேடையில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும், தென் மாநிலங்களில் தேர்தல் பிரசார பயணங்களை தொடங்க தயாராகி வருகிறார். அதன் ஒரு கட்டமாக அவர் வருகிற 13-ந் தேதி (புதன்கிழமை) தமிழ்நாட்டுக்கு வர உள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக ராகுல் காந்தி தமிழகத்துக்கு வருவது இதுவே முதல்முறையாகும். எனவே அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க தமிழக காங்கிரஸ் தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

ராகுல்காந்தி பங்கேற்கும் கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த பிரசார கூட்டத்தில் தமிழக வாக்காளர்களை கவரும் வகையில் ராகுல் புதிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் தி.மு.க- காங்கிரஸ் தலைமையில் அமைந்துள்ள கூட்டணிக்கு புதிய எழுச்சியை ஏற்படுத்தும் வகையில் ராகுலின் பயணம் அமையும் என்று காங்கிரஸ் தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

வருகின்ற 13ம் தேதி தேர்தல் பிரச்சார கூட்டம் நடத்துவதற்காக ராகுல்காந்தி வருகிறார். அவர் பிரசாரம் செய்யும் இடம் பற்றி கட்சியின் மூத்த தலைவர்களுடனும், நிர்வாகிகளுடனும் கலந்து பேசி முடிவு செய்வோம். பிரச்சாரம் நடத்தப்படும் இடம் எது என்பது இன்று மாலை அல்லது நாளை அறிவிக்கப்படும். 

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story