விஜயகாந்த்-சரத்குமார் சந்திப்பு; அரசியல் பற்றியும் ஆலோசனை நடந்தது என தகவல்


விஜயகாந்த்-சரத்குமார் சந்திப்பு; அரசியல் பற்றியும் ஆலோசனை நடந்தது என தகவல்
x
தினத்தந்தி 3 March 2019 11:59 AM IST (Updated: 3 March 2019 11:59 AM IST)
t-max-icont-min-icon

தே.மு.தி.க. பொது செயலாளர் விஜயகாந்துடனான ச.ம.க. தலைவர் சரத்குமார் சந்திப்பில் அரசியல் பற்றியும் ஆலோசனை நடத்தப்பட்டது.

சென்னை,

சென்னை சாலி கிராமத்தில் உள்ள தே.மு.தி.க. பொது செயலாளர் விஜயகாந்தின் இல்லத்திற்கு ச.ம.க. தலைவர் சரத்குமார் இன்று சென்று சந்தித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெறுவதற்காக தே.மு.தி.க. சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.  ஆனால் இதில் சுமுக முடிவு எட்டப்படவில்லை.  இந்த நிலையில், அவரை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் சந்தித்து பேசினார்.  அவரது உடல்நிலை பற்றி விசாரித்தேன் என சந்திப்பிற்கு பின் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

தொடர்ந்து மு.க. ஸ்டாலினும் விஜயகாந்துடன் சந்தித்து பேசினார்.  இதனால் தே.மு.தி.க. எந்த கூட்டணியில் இடம்பெறுகிறது என்பது தெரியாத நிலை ஏற்பட்டது.  இந்த நிலையில், அ.தி.மு.க. கூட்டணிக்கு தே.மு.தி.க. வரும் என அக்கட்சியினர் கூறி வந்தனர்.  பா.ஜ.க.வும் இதனை உறுதியாக கூறி வந்தது.

இந்நிலையில், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் சென்னை சாலி கிராமத்தில் உள்ள தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் இல்லத்திற்கு இன்று சென்று அவரை சந்தித்து பேசினார்.  இந்த சந்திப்பில் விஜயகாந்தின் உடல்நலம் பற்றி சரத்குமார் விசாரித்துள்ளார் என கூறப்படுகிறது.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், விஜயகாந்தின் உடல்நலம் பற்றி விசாரிக்கவே வந்தேன்.  அவருடன் பழைய கால நினைவுகளை பகிர்ந்து கொண்டேன்.  அவரை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.  அரசியல் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.  அவர் மீண்டும் உடல்நலம் பெற்று வரவேண்டும் என கூறினார்.

Next Story