கடலூர் பஸ் நிலையத்தில் ரூ.70 ஆயிரம் கள்ளநோட்டுகளுடன் பட்டதாரி பெண் சிக்கினார்


கடலூர் பஸ் நிலையத்தில் ரூ.70 ஆயிரம் கள்ளநோட்டுகளுடன் பட்டதாரி பெண் சிக்கினார்
x
தினத்தந்தி 4 March 2019 2:30 AM IST (Updated: 4 March 2019 2:11 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் பஸ் நிலையத்தில் ரூ.70 ஆயிரம் கள்ளநோட்டுகளுடன் பட்டதாரி பெண் சிக்கினார். மேலும் தப்பி ஓடிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கடலூர்,

கடலூர் அருகே உள்ள பழைய வண்டிப்பாளையத்தை சேர்ந்த கொளஞ்சி மனைவி தமிழரசி(வயது 36). கடலூர் சேடப்பாளையத்தை சேர்ந்த ரஜினி மனைவி குமுதா. இவர்கள் இருவரும் கடலூர் பஸ்நிலையத்தில் பழ வியாபாரம் செய்து வருகிறார்கள். நேற்று நண்பகல் டிப்டாப் உடையணிந்து வந்த ஒரு பெண் தமிழரசியிடம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை கொடுத்து சில்லரை கேட்டார்.

அந்த ரூபாய் நோட்டை வாங்கி பார்த்தபோது அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே தமிழரசி அந்த பெண்ணிடம் தனக்கு தெரிந்த நபரிடம் சில்லரை வாங்கி வருவதாக கூறிவிட்டு குமுதாவுடன் அங்குள்ள புறக்காவல் நிலையத்துக்கு சென்றார். போலீஸ்காரர்களிடம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை காண்பித்தார். அதனை பார்த்த போலீசார், அது கள்ளரூபாய் நோட்டு என்பதை கண்டு பிடித்தனர்.

இதுபற்றி அறிந்ததும் அந்த பெண்ணை பிடிக்க திருப்பாதிரிப்புலியூர் போலீசார் உடனடியாக பஸ் நிலையத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது கடலூரில் இருந்து பண்ருட்டி செல்லும் டவுன் பஸ்சில் அமர்ந்திருந்த அந்த பெண்ணை போலீசார் பிடித்தனர்.

விசாரணையில், அவர் சிதம்பரம் மாரியப்பா நகரை சேர்ந்த நந்தகுமார் மனைவி பரணிகுமாரி (வயது 35) என்பதும், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட்டப்படிப்பு படித்துள்ளதும் தெரியவந்தது. இவருக்கு ரூபிகா, சிவப்பிரியா என்ற 2 மகள்கள் உள்ளனர்.

பரணிகுமாரியிடம் கட்டுக்கட்டாக ரூ.70 ஆயிரத்து 500-க்கு கள்ள நோட்டுகள் இருந்தன. அவை 2 ஆயிரம் ரூபாய், 500 ரூபாய், 200 ரூபாய் நோட்டுகளாக இருந்தது. மேலும் 15 ஏ.டி.எம். கார்டுகளும் இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்து பரணிகுமாரியை கைது செய்தனர்.

பரணிகுமாரியுடன் மேலும் 2 பெண்களும், ஒரு ஆணும் கடலூருக்கு வந்துள்ளனர். அவர்களும் பல ஆயிரம் மதிப்பிலான கள்ளரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடுவதற்காக வைத்துள்ளனர். பரணிகுமாரி போலீசாரிடம் பிடிபட்ட தகவல் அறிந்ததும் அவர்கள் தலைமறைவாகி விட்டனர். அவர்களை வலைவீசி தேடி வரும் போலீசார், பரணிகுமாரி இதுபோல் வேறு எங்கும் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளாரா? என்பது பற்றி விசாரித்து வருகின்றனர்.

Next Story