ஏழை தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.2 ஆயிரம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்


ஏழை தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.2 ஆயிரம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்
x
தினத்தந்தி 4 March 2019 5:15 AM IST (Updated: 4 March 2019 5:01 AM IST)
t-max-icont-min-icon

ஏழை தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதி வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்.

சென்னை,

தமிழகத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ் இருக்கும் 60 லட்சம் ஏழை தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதி உதவி வழங்கப்படும் என்று சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 11-ந் தேதி அறிவிப்பு வெளியிட்டார். இதற்காக தமிழக பட்ஜெட்டில் ரூ.1,200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ‘அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது’ என்று கூறி நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்தனர்.

இதையடுத்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், ‘ஏழை தொழிலாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக ரூ.2 ஆயிரம் செலுத்தப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டது. இதனை கண்காணிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர்கள் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இந்த நிதி உதவியை பெற தகுதியானவர்களை கணக்கெடுத்து பெயர் பட்டியலை தயாரிக்கும் பணி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சி வாரியாக தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கென தனியாக விண்ணப்ப படிவம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த படிவத்தில் குடும்ப தலைவி பெயர், கணவர்-தந்தை பெயர், குடும்ப தலைவியின் சொந்த ஊர், மாவட்டம், இனம், மதம், குடும்ப அட்டை விவரம், குடும்ப தலைவியின் செல்போன் எண், குடும்ப உறுப்பினர்கள் விவரம், சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரரின் வங்கி கணக்கு எண், வங்கி மற்றும் வங்கி கிளையின் பெயர், ஐ.எப்.எஸ்.சி. எண், ஆதார் எண் ஆகிய விவரங்கள் கோரப்பட்டுள்ளன. இந்த படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பதாரரர்களிடம் இருந்து அரசு அலுவலர்கள் பெற்று வருகின்றனர்.

பயனாளிகள் தேர்வு பணி ஒருபுறம் நடந்து வந்தாலும் இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று(திங்கட்கிழமை) தொடங்கி வைக்கிறார். குறிப்பிட்ட சில பயனாளிகளின் வங்கி கணக்கில் சிறப்பு நிதியான ரூ.2 ஆயிரத்தை செலுத்தி இந்த திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது.

‘கணக்கெடுப்புகளின் அடிப்படையில் பயனாளிகளின் வங்கி கணக்குகளில் ரூ.2 ஆயிரம் நிதி தொடர்ந்து செலுத்தப்படும். குடும்ப தலைவியின் வங்கி கணக்கிலேயே இந்த சிறப்பு நிதி செலுத்தப்பட உள்ளது. குடும்ப தலைவியை முன்னிறுத்தியே இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதால் ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள பெண்ணின் அடிப்படை விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. குடும்ப தலைவி இல்லாவிட்டால் மட்டுமே குடும்ப தலைவரின் விவரங்கள் கோரப்படுகின்றன’ என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story