கட்டுமான தொழிலாளர்களுக்கு இலவச உணவு திட்டம்; முதல் அமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்
தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி கட்டுமான தொழிலாளர்களுக்கு இலவச உணவு திட்டத்தினை இன்று தொடங்கி வைத்தார்.
சென்னை,
சென்னை சாந்தோம் அம்மா உணவகத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில் தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி கட்டுமான தொழிலாளர்களுக்கு இலவச உணவு திட்டத்தினை இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ஜெயகுமார், வேலுமணி, நிலோபர் கபில், விஜயபாஸ்கர், உதயகுமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதேபோன்று ஏழை தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.2 ஆயிரம் திட்டத்தினையும் முதல் அமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார். இதற்காக தமிழக பட்ஜெட்டில் ரூ.1,200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த நிதி உதவியை பெற தகுதியானவர்களை கணக்கெடுத்து பெயர் பட்டியலை தயாரிக்கும் பணி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சி வாரியாக தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கென தனியாக விண்ணப்ப படிவம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த படிவத்தில் குடும்ப தலைவி பெயர், கணவர்-தந்தை பெயர், குடும்ப தலைவியின் சொந்த ஊர், மாவட்டம், இனம், மதம், குடும்ப அட்டை விவரம், குடும்ப தலைவியின் செல்போன் எண், குடும்ப உறுப்பினர்கள் விவரம், சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரரின் வங்கி கணக்கு எண், வங்கி மற்றும் வங்கி கிளையின் பெயர், ஐ.எப்.எஸ்.சி. எண், ஆதார் எண் ஆகிய விவரங்கள் கோரப்பட்டுள்ளன. இந்த படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பதாரரர்களிடம் இருந்து அரசு அலுவலர்கள் பெற்று வருகின்றனர்.
பயனாளிகள் தேர்வு பணி ஒருபுறம் நடந்து வந்தாலும் இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்துள்ளார். குறிப்பிட்ட சில பயனாளிகளின் வங்கி கணக்கில் சிறப்பு நிதியான ரூ.2 ஆயிரத்தை செலுத்தி இந்த திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது.
Related Tags :
Next Story