அமைதியை விரும்பும் இந்தியா, தேவைப்படும்போது முழுவலிமையையும் பயன்படுத்த தயங்காது - ராம்நாத் கோவிந்த்


அமைதியை விரும்பும் இந்தியா, தேவைப்படும்போது முழுவலிமையையும் பயன்படுத்த தயங்காது - ராம்நாத் கோவிந்த்
x
தினத்தந்தி 4 March 2019 6:17 AM GMT (Updated: 4 March 2019 6:17 AM GMT)

அமைதியை விரும்பும் இந்தியா, தேவைப்படும்போது முழுவலிமையையும் பயன்படுத்த தயங்காது என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.

கோவை,

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று பகல் 12.35 மணியளவில் டெல்லியில் இருந்து விமானப்படை விமானம் மூலம் புறப்பட்டு பிற்பகல் 3.25 மணிக்கு கோவை வந்தார். விமான நிலையத்தில் அவரை கவர்னர் பன்வாரிலால் புரோகித், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, போலீஸ் டி.ஜி.பி. ராஜேந்திரன், கலெக்டர் ராஜாமணி, கோவை மாநகராட்சி தனி அதிகாரி ஸ்ரவன்குமார் ஜடாவத் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

இதையடுத்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கார் மூலம் கோவை ரேஸ்கோர்சில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு 3.50 மணிக்கு வந்து சேர்ந்தார். அங்கு தங்கிய அவர் மாலை 6 மணி முதல் 7 மணி வரை முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேசினார். அதைத்தொடர்ந்து ஜனாதிபதி இரவில் தங்கினார்.

கோவையை அடுத்த சூலூர் விமானப்படை தளத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.  போர் காலங்களிலும், அமைதி நிலவும் காலங்களிலும் முக்கிய பங்காற்றி சிறப்பாக செயல்படும் விமானப் படை பிரிவுகளுக்கு பிரசிடெண்ட் கலர்ஸ் என்ற உயரிய விருது வழங்கும் விழா நடைபெற்றது. 

அவருக்கு 583 விமானப் படை வீரர்கள் அணிவகுப்பு மரியாதை செய்தனர். இந்திய போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஆகியவை அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. வீரர்கள் அணிவகுப்பை வாகனத்தில் சென்ற படி, ஜனாதிபதி  ராம்நாத் கோவிந்த் பார்வையிட்டார்.

இதைத் தொடர்ந்து ஆகாஷ் கங்கா அணி நிகழ்த்திய பாராகிளைடிங் சாகசம் நடைபெற்றது. போர் விமானங்களின் சாகசமும் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசும்போது,  தீவிரவாதிகளின் முகாமை அழித்த தாக்குதலில் விமானப் படை தீரத்துடன் சிறப்பாக செயல்பட்டது.  பேரிடர் காலங்களில்  விமானப்படையின் பணி மகத்தானது. அமைதியை விரும்பும் இந்தியா, தேவைப்படும் போது முழுவலிமையையும் பயன்படுத்த தயங்காது   என கூறினார்

சூலூர் விமானப்படை தள பழுது பார்க்கும் பிரிவு மற்றும் தெலங்கானா மாநிலம் ஹகிம்பேட் விமானப்படை தளத்திற்கு பிரசிடெண்ட்ஸ் கலர்ஸ் விருது வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்,  விமானப்படை தலைமை தளபதி பி.எஸ். தனோவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 நிகழ்ச்சியை முடித்து கொண்டு ஜனாதிபதி கார் மூலம்  கோவை வருகிறார். மதியம் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கும் அவர் மாலை 4.40 மணிக்கு கார் மூலம் கோவை விமான நிலையம் செல்கிறார்.

அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் 5.25 மணிக்கு ஈஷா யோகா மையம் செல்கிறார். அங்கு நடக்கும் மகாசிவராத்திரி விழாவில் கலந்து கொண்ட பின்னர் இரவு 7 மணிக்கு புறப்பட்டு 7.45 மணிக்கு கோவை வந்தடைகிறார். இரவில் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கும் ஜனாதிபதி நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு தனி விமானம் மூலம் டெல்லி திரும்புகிறார்.

Next Story