தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம்: டெல்லி மேல்-சபைக்கு வைகோ தேர்வாகிறார்
நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சூறாவளி பிரசாரம் செய்யும் வைகோ டெல்லி மேல்-சபைக்கு தேர்வாகிறார்.
சென்னை,
நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சூறாவளி பிரசாரம் செய்யும் வைகோ டெல்லி மேல்-சபைக்கு தேர்வாகிறார்.
சூறாவளி பிரசாரம்
நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க.வுக்கு ஒரு நாடாளுமன்ற தொகுதியும், ஒரு மேல்-சபை இடமும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று கையெழுத்தாகியுள்ளது. இன்னும் ஓரிரு தினங்களில் தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள்? என்பது தொடர்பான அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியாக இருக்கிறது.
அதனைதொடர்ந்து தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தங்களுடைய கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவிக்க உள்ளனர். அதன்பிறகு தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தை தொடங்க இருக்கின்றனர். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி பிரசாரம் செய்ய இருக்கிறார்.
மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
மு.க.ஸ்டாலினை நேற்று வைகோ சந்தித்தபோது, ‘உங்களுடைய தேர்தல் பிரசாரம் ஒரு தொகுதியுடன் நின்றுவிடக்கூடாது. தமிழகம், புதுச்சேரி என 40 தொகுதிகளிலும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய வேண்டும்’ என்று அவரிடம் ஸ்டாலின் கூறியதாக தி.மு.க. வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னதாக திருச்சியில் நடந்த கூட்டத்தில், ‘அண்ணன் வைகோ 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் புயல் வேக பிரசார பயணத்துக்கு தயாராகிவிட்டார்’ என்று மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
வைகோ போட்டியிடவில்லை
நாடாளுமன்ற தேர்தலில் வைகோ போட்டியிடவில்லை. அவரது கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஒரு தொகுதியையும் வழக்கம்போல அவர் தனது கட்சி நிர்வாகிக்கே வழங்க இருக்கிறார். அனேகமாக ஈரோடு தொகுதி அக்கட்சிக்கு ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. பொருளாளர் கணேசமூர்த்தி அந்த தொகுதியில் களம் இறக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.
அதே நேரத்தில் தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு வழங்கப்பட்டுள்ள மேல்-சபை ‘சீட்’டுக்கு வைகோ நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்.
Related Tags :
Next Story