தமிழகத்தில் இன்றும், நாளையும் அனல் காற்று வீசும் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்
தமிழகத்தில் இன்றும் (புதன்கிழமை), நாளையும் (வியாழக்கிழமை) அனல் காற்று வீசும் என்றும், அதிகபட்சமாக இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் இன்றும் (புதன்கிழமை), நாளையும் (வியாழக்கிழமை) அனல் காற்று வீசும் என்றும், அதிகபட்சமாக இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அனல் காற்று வீசும்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் கடந்த டிசம்பர் மாதம் முடிவடைந்தது. பருவமழை முடிவடைவதற்குள் பனிக்காலம் தொடங்கியது. கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் வழக்கத்தைவிட பனிப்பொழிவின் தாக்கம் அதிகமாக இருந்தது. மலைப்பகுதிகளில் உறைபனி வாட்டி வதைத்தது.
தற்போது வெயில் வாட்டி வதைக்க தொடங்கி இருக்கிறது. கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பாகவே வெயிலின் கொடுமை அதிகமாக காணப்படுகிறது. இந்தநிலையில் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இன்று (புதன்கிழமை), நாளை(வியாழக்கிழமை) அனல் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.
4 டிகிரி செல்சியஸ்
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது:-
தமிழக பகுதிகளுக்கு இயல்பாக கிழக்கில் இருந்து வரும் காற்று, கொஞ்சம் குளிர்ந்த தன்மையில் இருக்கும். அந்தவகையில் கிழக்கு திசை காற்று நிலப்பரப்பு பகுதிகளுக்கு வருவது குறைந்து, வடக்கு நோக்கி திசை மாறி செல்கிறது. மேலும் வடமேற்கு திசை காற்று வெப்பமான சூழலில் தமிழக பகுதிகளை நோக்கி வருகிறது.
இதனால் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இன்றும், நாளையும் அனல் காற்று வீசக்கூடும். அதிகபட்சமாக இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரித்து காணப்படும். சென்னையை பொறுத்தவரையில் இயல்பை விட 2 அல்லது 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் கூடும்.
மிதமான மழை
பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை இதன் தாக்கம் இருக்கும். இது அவ்வப்போது நிகழும் மாற்றம் தான். எந்த பாதிப்பும் இல்லை. யாரும் அச்சப்படவும் தேவையில்லை.
வருகிற 8, 9 ஆகிய தேதிகளில் கிழக்கு திசையில் இருந்து வரும் மேலடுக்கு சுழற்சியால் உள்மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். இதன்மூலம் கிழக்கு திசை காற்று மீண்டும் நிலப்பரப்புக்கு வந்துவிடும். பின்னர் இயல்பான வெயில் அளவு இருக்கும்.
இந்த ஆண்டு கோடைகாலமான மே, ஜூன் மாதங்களில் இயல்பைவிட 0.5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரித்து காணப்படும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story