ஊடகங்கள் மூலம் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு ஆறுமுகசாமி ஆணையம் களங்கம் ஐகோர்ட்டில், மூத்த வக்கீல் வாதம்
அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகத்துக்கு எதிராக கருத்துக்களை ஊடகங்கள் மூலம் வெளியிட்டு ஆறுமுகசாமி ஆணையம் களங்கம் ஏற்படுத்துவதாக ஐகோர்ட்டில் மூத்த வக்கீல் வாதிட்டார்.
சென்னை,
அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகத்துக்கு எதிராக கருத்துக்களை ஊடகங்கள் மூலம் வெளியிட்டு ஆறுமுகசாமி ஆணையம் களங்கம் ஏற்படுத்துவதாக ஐகோர்ட்டில் மூத்த வக்கீல் வாதிட்டார்.
ஆறுமுகசாமி ஆணையம்
ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது. இந்த ஆணையத்தின் விசாரணையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது அப்பல்லோ சார்பில் மூத்த வக்கீல் பி.எஸ்.ராமன் ஆஜராகி வாதிட்டார். அவர் தன் வாதத்தில் கூறியதாவது:-
களங்கம்
ஜெயலலிதாவுக்கு பிரபல டாக்டர்களை கொண்டு தரமான சிகிச்சையை அப்பல்லோ ஆஸ்பத்திரி வழங்கியது. ஆனால் ஆறுமுகசாமி ஆணையம் அப்பல்லோ டாக்டர்களின் விளக்கத்தை பெற போதிய அவகாசம் வழங்கப்படுவது இல்லை. விசாரணைக்கு ஆஜராகாவிட்டால் ஜெயலலிதாவின் சிகிச்சைக்காக பலகோடி ரூபாய் வசூலித்து உள்ளர்கள், டாக்டர்களை ஆஜராக சொல்லுங்கள் என்று கூறி, அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு ஆணையம் கடிதம் அனுப்புகிறது.
அந்த கடிதம் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வருவதற்கு முன்பே ஊடகங்களில் வெளியாகி விடுகிறது. இதுபோன்ற செயல்பாடுகளால் அப்பல்லோ ஆஸ்பத்திரியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுகிறது.
உணவு செலவு
ஆணையத்தின் செயலாளர் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு எதிரான தகவல்களை முன்கூட்டியே ஊடகங்கள் மூலமாக பரப்புகிறார். உதாரணத்துக்கு, ஜெயலலிதாவுக்கு பழரசம், உணவு செலவுக்காக ரூ.1.17 கோடியை அப்பல்லோ ஆஸ்பத்திரி வசூலித்துள்ளதாக செய்தி வெளியானது.
உண்மையில் இவ்வளவு பெரிய தொகை வசூலிக்கவில்லை. அவர் சிகிச்சை பெறும்போது, அனைத்து அரசு செயலாளர், உயர் அதிகாரிகள், 200-க்கும் மேற்பட்ட போலீசார், குடும்ப உறுப்பினர்கள், உதவியாளர்கள் என்று பல நூறு பேர் 76 நாட்கள் தினமும் சாப்பிட்டுள்ளனர். அதற்கான செலவு தொகைத்தான் இது. ஆனால், இந்த விவரங்கள் எதுவும் இல்லாமல், தகவல் பரப்புகின்றனர்.
மருத்துவ குழு
மருத்துவ ரீதியான வாக்குமூலங்களை பிழைகளுடன் பதிவு செய்கின்றனர். இதுபோன்ற காரணங்களுக்காகத்தான் விசாரணைக்கு தடை கேட்கப்படுகிறது. சிறப்பு மருத்துவ குழு அமைத்து, அதன்பிறகு இந்த ஆணையம் எங்களது டாக்டர்களிடம் விசாரிக்கலாம்.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதிகள் விசாரணையை இன்று (புதன்கிழமைக்கு) தள்ளிவைத்தனர்.
Related Tags :
Next Story