ராகுல்காந்தி கலந்து கொள்ளும் கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் நிச்சயம் பங்கேற்போம் மு.க.ஸ்டாலின் பேட்டி


ராகுல்காந்தி கலந்து கொள்ளும் கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் நிச்சயம் பங்கேற்போம் மு.க.ஸ்டாலின் பேட்டி
x
தினத்தந்தி 6 March 2019 3:15 AM IST (Updated: 6 March 2019 1:37 AM IST)
t-max-icont-min-icon

ராகுல்காந்தி கலந்து கொள்ளும் கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் நிச்சயம் பங்கேற்போம் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை, 

ராகுல்காந்தி கலந்து கொள்ளும் கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் நிச்சயம் பங்கேற்போம் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

ம.தி.மு.க.வுக்கு எந்த சின்னம்?

சென்னை அண்ணா அறிவாலயத்தில் ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளுடனான தொகுதி பங்கீடு முடிந்ததும், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்:-

அப்போது மு.க.ஸ்டாலினிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- ம.தி.மு.க எந்த சின்னத்தில் போட்டியிட போகின்றது?

பதில்:- எங்களுடைய உணர்வை சொல்லி இருக்கின்றோம். எங்களுடைய எண்ணத்தை, யோசனையை சொல்லி இருக்கின்றோம். அதை அவர்கள் யோசித்து, முடிவு எடுப்பார்கள்.

கேள்வி:- மனித நேய மக்கள் கட்சிக்கு தொகுதி ஒதுக்குவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றதா?

பதில்:- மனித நேய மக்கள் கட்சித்தலைவரும் இன்று (நேற்று) வந்து எங்களை சந்தித்தார். இந்த முறை தேர்தல் களத்தில் நின்று போட்டியிடுவதற்கு வாய்ப்பில்லை. எனவே, தி.மு.க. கூட்டணிக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள். வரக்கூடிய காலகட்டங்களில் வாய்ப்பு வருகின்றபோது நிச்சயமாக உங்களை நாங்கள் பயன்படுத்தி கொள்வோம் என்ற உறுதியை நாங்கள் தந்திருக்கின்றோம்.

தேர்தல் அறிக்கை எப்போது?

கேள்வி:- விருதுநகர் பொதுக்கூட்டத்தில், கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு இருக்கின்றதா? இதனை முதல் பிரசார கூட்டமாக எடுத்துக்கொள்ளலாமா?

பதில்:- இது ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்ட கூட்டம். கூட்டணி கட்சியில் இருக்கக்கூடிய தலைவர்கள், வேறு மாவட்டங்களுக்கு வெவ்வேறு நிகழ்ச்சிகளுக்கு செல்ல இருக்கின்றனர். எனவே, தலைவர்களை பொறுத்தவரையில் அந்த கூட்டத்திற்கு வருவதற்கு வாய்ப்பில்லை. இருந்தாலும், அந்தந்த கட்சியினுடைய மாவட்ட நிர்வாகிகள் அந்த கூட்டத்தில் பங்கேற்க இருக்கின்றனர்.

கேள்வி:- தேர்தல் அறிக்கையை எப்போது வெளியிடப்படும்?

பதில்:- தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதற்கு பிறகு முறைப்படி தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்.

அனைவரும் பங்கேற்போம்

கேள்வி:- தமிழகத்தில் ராகுல்காந்தி கலந்து கொள்ளும் கூட்டத்தில் கூட்டணியை சேர்ந்தவர்கள் அனைவரும் ஒரே மேடையில் இருக்கும் வாய்ப்பு இருக்கின்றதா?

பதில்:- காங்கிரஸ் கட்சியினுடைய தலைவர் அழகிரி, என்னை வந்து சந்தித்து அந்த கூட்டத்திற்கு வரவேண்டும் என்று கேட்டிருக்கிறார். நிச்சயமாக வருவேன் என்று நானும் சொல்லி இருக்கிறேன். எல்லா கட்சித்தலைவர்களையும் அழைக்க இருப்பதாக சொல்லி இருக்கின்றார். எனவே, ராகுல்காந்தி பங்கேற்கும் கூட்டத்தில் நிச்சயமாக அனைவரும் பங்கேற்போம்.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

Next Story