திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தராக தாமரை செல்வி நியமனம்
வேலூரில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக எஸ்.தாமரை செல்வி நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை,
வேலூரில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக எஸ்.தாமரை செல்வி நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் பொறுப்பு ஏற்கும் நாளில் இருந்து 3 ஆண்டுகள் அந்த பதவியை வகிப்பார். அதற்கான பணி நியமன ஆணையை கவர்னர் பன்வாரிலால் புரோகித், ராஜ் பவனில் நேற்று எஸ்.தாமரை செல்வியிடம் வழங்கினார். அப்போது கவர்னரின் கூடுதல் தலைமை செயலாளர் ஆர்.ராஜகோபால் உடன் இருந்தார்.
எஸ்.தாமரை செல்வி பயிற்றுவித்தலில் 35 ஆண்டுகால அனுபவம் பெற்றவர். அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்.ஐ.டி. வளாகத்தில் உள்ள கம்ப்யூட்டர் தொழில்நுட்ப துறை பேராசிரியராக இருந்தார். குவைத் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னியில் உள்ள தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் முனைவர் படிப்பு அளவிலான தேர்வராக இருக்கிறார். சர்வதேச அளவில் 133 ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். மேலும் கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் பிரிவில் 7 புத்தகங்களை எழுதியிருக்கிறார்.
சென்னை தொழில்நுட்ப கழகத்தின் டீன் ஆக 3 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியுள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் டிரான்ஸ்பர் மையத்துக்கான இயக்குனர் ஆகவும், பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் செயற்குழு, கல்விக்குழு மற்றும் படிப்பு வாரியங்களில் எஸ்.தாமரை செல்வி சேவையாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கண்ட தகவல் ராஜ்பவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story