நாளை அல்லது நாளை மறுநாள் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை தொடரும் -விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ்


நாளை அல்லது நாளை மறுநாள் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை தொடரும் -விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ்
x
தினத்தந்தி 6 March 2019 10:48 AM GMT (Updated: 6 March 2019 10:48 AM GMT)

அ.தி.மு.க. கூட்டணியில் நாளை அல்லது நாளை மறுநாள் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை தொடரும் என விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ் கூறினார்

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. தலைமையில் அரசியல் கட்சிகளின் கூட்டணி உடன்பாடுகள் நிறைவடையும் தருவாயை எட்டி உள்ளது. தே.மு.தி.க.வை பொறுத்தவரையில் மதில்போல் பூனை போன்று அ.தி.மு.க. பக்கமும், தி.மு.க. பக்கமும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

தி.மு.க. தலைமையிலான கூட்டணி பேச்சுவார்த்தைகள் நேற்றுடன் நிறைவு பெற்று, கூட்டணி உறுதி செய்யப்பட்டது. இதனால் தே.மு.தி.க.வுக்கான தி.மு.க. கூட்டணி கதவு அடைக்கப்பட்டது. அதே நேரத்தில், சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில், விஜயகாந்த் தலைமையில் கட்சியின் உயர்மட்ட குழு உறுப்பினர்கள், அணி செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் உள்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்தும், எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடலாம் என்பது குறித்தும், தேர்தல் பணியாற்றுவது எப்படி என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. எனினும், கூட்டணி குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் இன்று காலை கட்சி அலுவலகம் வந்தார். அங்கு கூட்டணி தொடர்பாக தேமுதிக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். முன்னதாக தேமுதிக தலைமை அலுவலகத்தில் தொகுதி பங்கீட்டு குழுவுடன், துணை செயலாளர் சுதீஷ் ஆலோசனை நடத்தினார்.

மீனம்பாக்கம் நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ள பியூஷ்  கோயலை தேமுதிக துணை செயலாளர் சுதீஷ்  சந்தித்து பேசினார். அமைச்சர்கள் தங்கமணியும், வேலுமணியும் ஆலோசனை நடத்தினார்கள். பிறகு அனைவரும் புறப்பட்டு சென்றனர்.

பின்னர் தேமுதிக துணை செயலாளர் சுதீஷ்  நிருபர்களிடம் கூறியதாவது:-

பியூஷ் கோயல் மும்பையில் இருந்து தொலைபேசி மூலம் நேற்று பேசினார். அப்போது சென்னை வரும்போது கூட்டணி குறித்து பேசலாம் என்றார். அதன்படி இன்று அவரை சந்தித்து பேசினேன் . பிரதமர் வருகையால் போதிய நேரமில்லை. கூட்டணி தொகுதி எண்ணிக்கை குறித்து பேசினோம். நாளை அல்லது நாளை மறுநாள் கூட்டணி குறித்த பேச்சு தொடரும், தமிழகத்தில் அடுத்த முறை பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்பார் என கூறினார்.

Next Story