எனக்கு எதிரான வெறுப்பு அரசியல் எல்லைகளை தாண்டிச்செல்கிறது கொலை மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன் பிரதமர் மோடி ஆவேச பேச்சு


எனக்கு எதிரான வெறுப்பு அரசியல் எல்லைகளை தாண்டிச்செல்கிறது கொலை மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன் பிரதமர் மோடி ஆவேச பேச்சு
x
தினத்தந்தி 7 March 2019 12:15 AM GMT (Updated: 6 March 2019 7:11 PM GMT)

சென்னை பொதுக்கூட்டத்தில் ஆவேசமாக பேசிய பிரதமர் மோடி, தனக்கு எதிரான வெறுப்பு அரசியல் எல்லைகளை தாண்டிச்செல்வதாகவும், கொலை மிரட்டலுக்கு அஞ்சப்போவது இல்லை என்றும் கூறினார்.

சென்னை, 

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பாரதீய ஜனதா, பா.ம.க., புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடம் பெற்று உள்ளன.

அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளின் முதல் பிரசார பொதுக்கூட்டம் சென்னை வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்துக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை தாங்கினர்.

மத்திய மந்திரிகள் பியூஸ் கோயல், பொன் ராதாகிருஷ்ணன், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் என்.ரங்கசாமி, புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக தலைவர் டாக்டர் என்.சேதுராமன், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு எம்.எல்.ஏ., கொங்குநாடு முன்னேற்ற கழக தலைவர் பெஸ்ட் எஸ்.ராமசாமி, புரட்சி பாரதம் தலைவர் பூவை.ஜெகன்மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். இதற்காக மாலை 4.20 மணிக்கு அவர் மேடைக்கு வந்தார். மேடையில் அணிவகுத்து நின்றிருந்த கூட்டணி கட்சி தலைவர்களில், ஒரு பக்கம் டாக்டர் ராமதாஸ் கையையும், மறுபக்கம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கையையும் உயர்த்திப்பிடித்து, பிரதமர் மோடி தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அதன்பிறகு தலைவர்கள் அனைவரும் ஒன்றாக கைகோர்த்தபடி நின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் சால்வை, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பிரதமர் நரேந்திர மோடிக்கு, நடராஜர் சிலையை ஓ.பன்னீர்செல்வம் பரிசளித்தார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விநாயகர் சிலையை பிரதமருக்கு வழங்கினார். பிரதமர் மோடிக்கு செங்கோலும் நினைவுப்பரிசாக வழங்கப்பட்டது.

மேடையில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த மறைந்த முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் படங்களுக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

கூட்டத்தில் அவர் பேசுகையில் கூறியதாவது:-

காசியின் நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சீபுரம் வந்து உள்ளேன். நம்முடைய உறவு வலிமையானது, பிரிக்க முடியாதது. தமிழக மக்களும், பண்பாடும் சிறப்புக்குரியவர்கள். தமிழ்மொழி மிகவும் அழகானது. இருக்கின்ற மொழிகளில் தமிழ் மொழி முதன்மையானது. தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு பாடுபட்டு வருகிறது. நாம் ஜெயலலிதா கனவு கண்ட முன்னேற்ற பாதையில் சென்று கொண்டு இருக்கிறோம்.

இப்போது எண்ணூர் சமையல் எரிவாயு திட்டத்தை தொடங்கி வைத்து இருக்கிறேன். அதேபோல சேத்தியாதோப்பு-சோழபுரத்தை இணைக்கின்ற சாலையின் மூலமாக தஞ்சாவூருக்கும், கடலூருக்கும் இடையேயான தூரம் மிகப்பெரிய அளவில் குறையும். அதேபோல் ஈரோடு-திருச்சி, சேலம், திண்டுக்கல் இடையே 300 கிலோமீட்டருக்கான ரெயில்வே வழித்தடம் மின்மயமாக்கப்பட்டு உள்ளது.

மத்தியில் நீங்கள் அமரச் செய்துள்ள இந்த அரசாங்கம், நாட்டின் பாதுகாப்பு மற்றும் திட்டங்களில் முக்கிய கவனம் செலுத்தி வருகிறது. நாட்டின் பாதுகாப்பு தளவாடங்களை உற்பத்தி மையமாக மாற்ற வேண்டும் என்பது தான் இந்த அரசின் நோக்கம். இதற்காக நாம் 2 பாதுகாப்பு தொழில்நுட்ப பூங்காக்களை உருவாக்கி இருக்கிறோம். அதிலே ஒன்று தமிழகத்தில் அமைந்து உள்ளது. இதன்மூலம் நாட்டின் தொழில் வளர்ச்சியும், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பும் அதிகரித்து இருக்கிறது.

நாட்டின் பாதுகாப்பு பற்றி எதிர்க்கட்சிகள் கடைப்பிடிக்கும் அலட்சிய போக்கு, அவர்கள் சுயநலத்திற்காகவும், அரசியலுக்காகவும் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். வலிமையான இந்தியாவை அவர்கள் விரும்பவில்லை. வலிமையான ராணுவத்தையும் விரும்பவில்லை. இந்தியா பன்முகத்தன்மை கொண்டது.

மாநிலங்களின் தேவைகளை பூர்த்தி செய்யாமல் நாடு முன்னேற முடியாது. காங்கிரஸ் ஆட்சியால் அதனை பூர்த்தி செய்ய முடியாது. ஏனென்றால் அவர்கள் குடும்ப நலனை மையமாக வைத்து முடிவு எடுக்கிறார்கள். காங்கிரசை ஆதரிப்பது என்பது, டெல்லியில் குளிர்சாதன அறையில் முடிவு எடுக்கும் நிலையை உருவாக்கும். தமிழகத்தில், கிராமங்களில் முடிவு எடுக்கும் சூழ்நிலை இருக்காது.

வலிமைமிக்க காங்கிரஸ் மாநில தலைவர்களை மத்திய காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அவமானப்படுத்தி வருகிறது. வலிமையான காமராஜர் காங்கிரஸ் கட்சியால் எப்படி அவமானப்படுத்தப்பட்டார் என்பதை அறிவீர்கள். அவர் செய்த குற்றம் என்ன?. மக்களுக்காகவும், ஜனநாயகத்திற்காகவும் காமராஜர் குரல் கொடுத்தார். அவரை காங்கிரஸ் தலைமை அவமானப்படுத்தியது. டெல்லியில் இருக்கிற ஊழல் மற்றும் சர்வாதிகாரம், ஒரு குடும்பத்தின் ஆதிக்கத்தை எதிர்த்த காரணத்தால் மீண்டும், மீண்டும் அவர்களால் அவமானப்படுத்தப்பட்டார்.

அதேபோல், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.ஜி.ஆர். அரசை மத்திய காங்கிரஸ் அரசு கலைத்தது. அவர்கள் நெருக்கடி நிலையை கொண்டு வந்தவர்கள். அரசியலில் கருத்து வேறுபாட்டுக்காக மாநில அரசுகளை கலைக்கும் பழக்கம் காங்கிரஸ் அரசுக்கு இருந்தது. அரசியல் சட்டத்தின் 356-வது பிரிவை பயன்படுத்தி ஆட்சியை கலைத்தது யார் என்றால், அது காங்கிரஸ் அரசாங்கம்தான். இந்த சட்டப்பிரிவை அவர்கள் 100 முறைக்கு மேல் பயன்படுத்தி இருக்கிறார்கள். அதில் 50 சதவீதம் இந்திராகாந்தி பயன்படுத்தி இருக்கிறார்.

இன்னும் சொல்ல வேண்டும் என்றால், தி.மு.க. ஆட்சியை கூட காங்கிரஸ் அரசு கலைத்து இருக்கிறது. தி.மு.க.வும் இதில் பாதிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், இன்றைக்கு தி.மு.க.வுக்கு கொள்கைகளை விட சந்தர்ப்பவாதம் முக்கியமாக போய் விட்டது. இதையெல்லாம் மறந்து காங்கிரசுடன் சந்தர்ப்பவாத கூட்டணியை அமைத்து இருக்கிறது.

ஜனநாயகத்தில் சரியான கேள்விகளை கேட்பதற்கு மக்களுக்கு முழு உரிமை இருக்கிறது. ஆகவே தமிழ்நாட்டு மக்கள் இந்த குறிக்கோள் இல்லாத கலப்பட கூட்டணியிடம் உங்கள் குறிக்கோள் என்ன?, உங்கள் செயல் திட்டம் என்ன? உங்கள் தலைமை யார்? என்பதை கேட்க வேண்டும். மோடியை தடுக்க வேண்டும் என்பதற்காக மட்டும் தான் அவர்கள் ஒன்று கூடி இருக்கிறார்கள்.

நாட்டை வளர்ச்சி பாதையில் அழைத்துச் செல்வதற்காக உங்களின் செயல் திட்டம் என்ன என்பதை மக்களிடம் நீங்கள் சொல்ல வேண்டும்.

மோடி வெறுப்பு என்பது எல்லைகளை தாண்டிச் சென்று கொண்டு இருக்கிறது. யாரை அதிகமாக வசைப்பாட வேண்டும் என்பதில் அவர்களுக்குள் ஒரு போட்டி இருக்கிறது. சிலபேர் என்னை வசைபாடுவார்கள். சிலபேர் என்னுடைய ஏழ்மையையும், என் குடும்பத்தையும் விமர்சனம் செய்வார்கள். சிலர் என்னுடைய பிற்படுத்தப்பட்ட சமுதாய பின்னணியை வசைபாடுவார்கள்.

இப்போது ஒரு காங்கிரஸ் தலைவர் என்னை கொலை செய்ய வேண்டும் என்று சொல்கிறார். அவர்களை பார்த்து சொல்கிறேன், நீங்கள் என்னை விமர்சனம் செய்தாலும், வசைபாடினாலும் அது என்னை கவலை கொள்ளச் செய்யாது. கொலை மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன். நான் மக்களுக்காக உழைக்க விரும்புகிறேன். என்னிடம் இருப்பதை எல்லாம் இந்தியாவை வலிமைமிக்க நாடாக மாற்ற பயன்படுத்தவே விரும்புகிறேன். என் உடலில் இருக்கும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும், என் மூச்சு காற்று, என் வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் நான் இந்த நாட்டில் உள்ள 130 கோடி மக்களுக்காக செலவிட விரும்புகிறேன்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் செயல்பாடு என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். நமது அரசாங்கம் ஏழை மக்களின் நலனில் அக்கறை கொண்டு உள்ளது. அடுத்த தலைமுறைக்கான வழிக்காட்டும் செயல்முறைகளுக்காக தொலைநோக்கில் செயல்பட்டு கொண்டு இருக்கிறோம்.

விவசாயிகளின் நலனுக்காக திட்டமிட்டு செயலாற்றி கொண்டு இருக்கிறோம். நியாயமான உணர்வோடு செயல்படுகிறோம், ஊழல்களை களைவதில் உறுதியாக இருக்கிறோம். இதில் எவ்விதமான சம்மரசமும் செய்து கொள்ளாமல் செயல்படுகிறோம். தேசிய பாதுகாப்பில் இந்தியாவின் வலிமையை காட்டிக்கொண்டு இருக்கிறோம்.

பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுப்பதில் எந்த விதமான மன்னிப்பு போக்கும் நம்மிடம் இருக்காது. நம்முடைய முன்னுரிமை என்பது நாடு முதன்மையானது. கடந்த 4½ ஆண்டுகளில் மக்கள் நல திட்டங்களை நிறைவேற்றி வந்திருக்கிறோம். மக்களின் ஆசீர்வாதத்துடன் நாம் இன்னும் நிறைய செய்ய காத்திருக்கிறோம். தமிழக மக்களை வேண்டி கேட்டுக்கொள்கிறேன். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஒரு வாய்ப்பை தாருங்கள். எங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை தாருங்கள். உங்கள் கனவுகளை நனவாக்கி தருவதற்காக, இந்திய நாட்டின் சுதந்திர போராட்ட வீரர்கள், இந்த நாட்டிற்காக தியாகம் செய்தவர்களின் கனவுகளை நிறைவேற்ற வாய்ப்பு தாருங்கள். நாற்பதும், நமதே, நாடும் நமதே.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

Next Story