சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர் பிரதமர் மோடி அறிவிப்பு
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.
சென்னை,
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.
பொதுக்கூட்டம்
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயரை சூட்ட வேண்டும் என்று அ.தி.மு.க. நீண்ட காலமாக மத்திய அரசை வற்புறுத்தி வந்தது. இதேபோல் தமிழக அரசின் சார்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில் கிளாம்பாக்கம் பொதுக்கூட்டத்தில் நேற்று பிரதமர் மோடி பேசும் போது, இந்த கோரிக்கையை ஏற்று, சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டப்படும் என்று அறிவித்தார்.
எம்.ஜி.ஆர். பெயர்
நான் இந்த மண்ணின் மைந்தன் எம்.ஜி.ஆரின் சிலையை திறந்து வைத்து இருக்கிறேன். எம்.ஜி.ஆர். தமிழக மக்களின் நெஞ்சங்களில் வாழ்ந்தவர். திரையுலகில் மட்டுமல்ல, மக்கள் மனதிலும் நிலைத்து நின்றவர். ஏழை, எளிய மக்களுக்காக பாடுபட்டவர். அவரின் திட்டங்கள், ஏழ்மையை எதிர்த்து நாம் போராடுவதற்கு வலிமையை சேர்த்தது.
இன்றைய தினம் 2 விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ரெயில் நிலையம் என்று இனி அழைக்கப்படும். நம்முடைய ரெயில்வே துறை மந்திரியும் இங்கே இருக்கிறார். தமிழகத்தில் செல்கின்ற விமானங்கள், வந்து செல்லும் விமானங்கள் என அனைத்திலும் அறிவிப்பினை தமிழ்மொழியில் செய்ய முடிவு எடுத்து இருக்கிறோம்.
அபிநந்தன் மீட்பு
சில ஆண்டுகளுக்கு முன்பு நான் இலங்கைக்கு சென்றேன். அங்கு நான் எம்.ஜி.ஆர். பிறந்த இடத்திற்கும் சென்று வந்தேன். அங்கு வாழும் தமிழர்களுக்கு 14 ஆயிரம் வீடுகளை கட்டி தர இந்தியா தயாராக இருக்கிறது. சமீபத்தில் ஆயிரம் வீடுகளை கட்டி அவர்களிடம் ஒப்படைத்து இருக்கிறோம். மேலும் 3 ஆயிரம் வீடுகள் கட்டும் பணி வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த முழு பணியும் விரைவில் நடத்தி முடிக்கப்படும். நம்முடைய குறிக்கோள் அனைவருடன் இணைந்து, அனைவருக்கும் மேம்பாடு என்பது தான். மானுட பிணைப்பே எல்லா பிணைப்புகளிலும் மேலானது.
அதனால் தான் தமிழர்கள் எங்கு இருந்தாலும், அவர்களுக்கு பிரச்சினை என்றால், உடனடியாக மத்திய அரசு ஓடிப்போய் உதவி செய்து கொண்டு இருக்கிறது.
மத்திய ஆசிய நாடுகளில் தமிழர்கள் பிரச்சினையில் சிக்கி இருந்த போது, மத்திய அரசு அவர்களை மீட்டு கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. பாதிரியார் பிரேம் ஆப்கானிஸ்தானில் சிறை வைக்கப்பட்டு இருந்தபோது, 8 மாதங்கள் இரவும், பகலும் பணியாற்றி அவரை நாம் நாட்டிற்கு கொண்டு வந்து சேர்த்து இருக்கிறோம். எப்படி அபிநந்தனை 2 நாட்களில் மீட்டு, இந்தியா கொண்டு வந்தோம் என்பது இந்த உலகத்திற்கே தெரியும்.
1,900 மீனவர்கள் விடுவிப்பு
இலங்கையில் இருந்து 1,900 மீனவர்கள் விடுவிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதுமட்டுமல்ல தூக்கு தண்டனை அளிக்கப்பட்ட மீனவர்கள், இலங்கை அரசிடம் பேசி மீட்டு கொண்டு வரப்பட்டு இருக்கிறார்கள். அதேபோல், சவுதி அரசாங்கத்தின் இளவரசருடன் பேசி, அங்கு சிறையில் இருக்கும் 850 பேரை விடுதலை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.
யாருக்கெல்லாம் வலி இருக்கிறதோ? பாதிப்பு இருக்கிறதோ? அவர்களின் காயங்களுக்கு மருந்துபோடும் பணியினை எப்போதும் விடாமல் செய்வோம்.
காஞ்சீபுரத்தின் நெசவாளர்கள் இந்த நாட்டின் பெருமைக்குரியவர்கள். ஜவுளித்துறையின் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. இதுவரை ஜவுளித்துறைக்காக 7 ஆயிரம் கோடி ரூபாய் மானியமாக நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. அதேபோல் விசைத்தறியை மேம்படுத்துவதிலும், மத்திய அரசு உதவி வருகிறது. நாடு முழுவதும் 2½ லட்சம் விசைத்தறிகள் மேம்படுத்தப்பட்டு உள்ளன. அதில் ஒரு லட்சத்து 24 ஆயிரம் விசைத்தறிகள் தமிழகத்தில் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.
சுற்றுலாத்துறை மேம்பாடு
காஞ்சீபுரமும், தமிழகமும் சுற்றுலாத்துறையில் வளமிக்க பகுதிகளாக இருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசு சுற்றுலாத்துறையை மேம்படுத்த சிறந்த பணிகளை மேற்கொண்டு வருகிறது. அன்னிய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 42 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. அன்னிய செலவாணி வருமானம் 1½ மடங்கு அதிகரித்து இருக்கிறது.
அன்னிய சுற்றுலா பயணிகள் வருவதற்காக 66 நாடுகளுடன் இணைந்து சிறப்பு வசதியை செய்து கொடுத்து இருக்கிறோம். சுற்றுலா வளரும் போது, பொருளாதாரம் வளரும் வாய்ப்பு உருவாகும். சுற்றுலா வழிகாட்டிகளின் பொருளாதாரம் உயருகிறது. கடைகளின் வருமானம் கூடுகிறது. கைவினை பொருட்களின் வர்த்தகம் கூடுகிறது. தேனீர் விற்பவர்களுக்கு கூட வாய்ப்புகள் அதிகரிக்கிறது.
மேற்கண்டவாறு பிரதமர் மோடி கூறினார்.
Related Tags :
Next Story