அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வின் உள்ளே?, வெளியே? ஆட்டம் மோடி கூட்டத்தில் பங்கேற்க வைக்க நடந்த கடைசிநேர முயற்சி தோல்வி


அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வின் உள்ளே?, வெளியே? ஆட்டம் மோடி கூட்டத்தில் பங்கேற்க வைக்க நடந்த கடைசிநேர முயற்சி தோல்வி
x
தினத்தந்தி 6 March 2019 8:30 PM GMT (Updated: 6 March 2019 7:46 PM GMT)

கூட்டணி தொடர்பாக தே.மு.தி.க.வின் உள்ளே?, வெளியே? ஆட்டத்தால் மோடி பிரசார கூட்டத்தில் பங்கேற்க வைக்க நடந்த கடைசி நேர முயற்சி தோல்வி அடைந்தது.

சென்னை, 

கூட்டணி தொடர்பாக தே.மு.தி.க.வின் உள்ளே?, வெளியே? ஆட்டத்தால் மோடி பிரசார கூட்டத்தில் பங்கேற்க வைக்க நடந்த கடைசி நேர முயற்சி தோல்வி அடைந்தது.

கூட்டணி

நாடாளுமன்ற தேர்தலையொட்டி கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு இறுதி செய்யும் விஷயத்தில் தமிழக அரசியல் கட்சிகள் பரபரப்பாக இயங்கி வருகின்றன. கடந்த முறை தனித்து போட்டியிட்ட அ.தி.மு.க. இந்த முறை, பா.ஜ.க., பா.ம.க., புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து விறுவிறுப்பான அரசியல் கூட்டணி கணக்கை தொடங்கியது. சூட்டோடு, சூடாக பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், பா.ஜ.க.வுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டது.

தொடர்ந்து தே.மு.தி.க., த.மா.கா. ஆகிய கட்சிகளுடன் அ.தி.மு.க. பேச்சுவார்த்தையை முன்னெடுத்தது. தே.மு.தி.க.வை கூட்டணிக்குள் கொண்டு வர தமிழக பா.ஜ.க. பொறுப்பாளரும், மத்திய மந்திரியுமான பியூஸ்கோயல் முயற்சியை முன்னெடுத்தார். அ.தி.மு.க. சார்பில் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், விஜயகாந்த் இல்லத்திற்கே சென்று கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடுக்கான பேச்சுவார்த்தை நடத்தினார்.

வருமா? வராதா?

தங்களுக்கு 7 தொகுதிகள் வேண்டும் என்று கேட்ட தே.மு.தி.க.வுக்கு, அ.தி.மு.க. தரப்பில் 4 விரல்கள் மட்டுமே காண்பிக்கப்பட்டது. இதனால் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைவதில் சுணக்கம் ஏற்பட்டது. இதற்கிடையே, பிரதமர் பங்கேற்கும் பிரசார கூட்டத்தில் தே.மு.தி.க.வை பங்கேற்க செய்யும் வகையில் கூட்டணிக்கான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நேற்று காலை முதலே அ.தி.மு.க. தரப்பில் மேற்கொள்ளப்பட்டன. அ.தி.மு.க. கூட்டணிக்கு தே.மு.தி.க. வருமா? வராதா? என்று ஒவ்வொரு மணித்துளியும் பரபரப்பு நொடிகளாகவே இரு கட்சிகளின் தொண்டர்களுக்கு அமைந்தது.

தே.மு.தி.க. அலுவலகத்தில் நேற்று காலை 10 மணிக்கு நிர்வாகிகளுடன் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த், துணை பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். அதேநேரத்தில் கிரீன்வேஸ் சாலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். இருவேறு ஆலோசனைகளின்போதும், செல்போன் வழியாக தொகுதி பங்கீடு குறித்து காரசாரமாக விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

விஜயகாந்த் அதிருப்தி

அப்போது, தே.மு.தி.க.வுக்கு நீலகிரி, தூத்துக்குடி, நாகை மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு தொகுதி என 4 தொகுதிகள் ஒதுக்க அ.தி.மு.க. முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தொகுதிகள் மற்றும் தொகுதிகளின் எண்ணிக்கையில் அதிருப்தி அடைந்த விஜயகாந்த், அ.தி.மு.க.வுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை விவரங்களை நிர்வாகிகளிடம் தெரிவித்தார்.

இதைக்கேட்டு ஆவேசம் அடைந்த நிர்வாகிகள், நமக்கு 4 தொகுதிகள் தானா? வேண்டாம், வேண்டாம் கூட்டணி வேண்டாம், தனித்து களம் காண்போம் என்று வலியுறுத்தியதாக தெரிகிறது. 7 தொகுதிகளில் இருந்து தே.மு.தி.க. இறங்கி வர விரும்பவில்லை என்பதாலும், அ.தி.மு.க. தரப்பில் 4 தொகுதிகளுக்கு மேல் தர இயலாது என்று கையை விரித்து விட்டதாலும் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணையவதற்கான சாத்திய கூறுகள் மெல்ல மெல்ல மறைய தொடங்கியுள்ளது.

எல்.கே.சுதீஷ் சந்திப்பு

தே.மு.தி.க.வின் உள்ளே, வெளியே ஆட்டத்தால் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு நிலவி வந்த நிலையில், நேற்று பிற்பகல் 2 மணிக்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்த துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தே.மு.தி.க. நிர்வாகிகள் தன்னை சந்திக்க வருவதாகவும், அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. நிச்சயமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், மதியம் 2.30 மணியளவில் மத்திய மந்திரி பியூஸ்கோயலுடன், தமிழக அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் மீனம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் கூட்டணி தொடர்பாக ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக தே.மு.தி.க. துணை பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் தலைமையில் தே.மு.தி.க. தொகுதி பங்கீட்டு குழுவினர் வந்தனர். அவர்கள் சுமார் 1 மணிநேரத்திற்கு மேலாக ஆலோசனை நடத்தினர்.

தோல்வி

இந்த பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்த்த நிலையில், புஸ்வாணமாகி போனது. பேச்சுவார்த்தையை முடித்து விட்டு வெளியே வந்த மத்திய மந்திரி பியூஸ்கோயல் பத்திரிகையாளர்களை சந்திக்காமல் வேகமாக ஓட்டலை விட்டு வெளியேறினார். தே.மு.தி.க. துணை பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ், ‘நாங்கள் தொடர்ந்து பேசி வருகிறோம். தற்போது நடந்த கூட்டத்தில் முடிவு எட்டப்படவில்லை. தொடர்ந்து பேசுவோம்’ என்றார்.

இதற்கிடையே, விஜயகாந்தின் கூட்டணி வருகையை எதிர்பார்த்து, அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளின் முதல் பிரசார பொதுக்கூட்டத்தில் கூட்டணி தலைவர்களின் கட் அவுட்களுக்கு மத்தியில் விஜயகாந்த் கட்-அவுட் வைக்க இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. பொதுக்கூட்டத்தில் கொடி கம்பங்களில் பறக்க விடுவதற்காக தே.மு.தி.க. கொடிகளும் வைக்கப்பட்டு இருந்தது. அ.தி.மு.க.-தே.மு.தி.க. கூட்டணிக்கான கடைசிநேர முயற்சி தோல்வியில் முடிந்ததால், பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் கட் அவுட் வைக்கப்படவில்லை. அவருக்கென்று ஒதுக்கப்பட்ட இடத்தில் பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனின் கட் அவுட் வைக்கப்பட்டது.

Next Story