நாடாளுமன்ற தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டி ஆர்.சரத்குமார் அறிவிப்பு


நாடாளுமன்ற தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டி ஆர்.சரத்குமார் அறிவிப்பு
x
தினத்தந்தி 7 March 2019 2:45 AM IST (Updated: 7 March 2019 1:45 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிடும் என்று ஆர்.சரத்குமார் அறிவித்து உள்ளார்.

சென்னை, 

நாடாளுமன்ற தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிடும் என்று ஆர்.சரத்குமார் அறிவித்து உள்ளார்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ஆர்.சரத்குமார் சென்னை தியாகராயநகரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தனித்து போட்டி

கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் நடத்தப்பட்ட பலகட்ட ஆலோசனை கூட்டங்கள் முடிவடைந்த நிலையில், எங்கள் இயக்கத்தின் முக்கிய முடிவினை தற்போது அறிவிக்கிறேன். நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி தமிழகத்தில் தனித்து போட்டியிட முடிவு செய்து, எங்களது அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிடுகிறேன்.

வெற்றி தோல்வி குறித்து கவலைப்படாமல் கொள்கையின் அடிப்படையில் தூய்மையான மக்கள் பணியிலும், பொதுவாழ்விலும் ஈடுபடுவதற்கு இளைஞர்கள் பெருமளவில் முன் வருவதற்கு இன்றைய தலைவர்கள் வழிகாட்டுதலாகவும், முன்னுதாரணமாகவும் விளங்க வேண்டும். 23 ஆண்டு அரசியல் அனுபவத்துடன், கட்சி நிறுவி 11 ஆண்டுகளாக இந்திய அரசியல் நிகழ்வுகளை கூர்ந்து கவனித்து பணியாற்றி வருகிறேன். எனவே, எதிர்காலத்தில் அரசியலின் தரத்தை மாற்ற வேண்டும் என்ற உறுதியான எண்ணம் கொண்டு வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளேன். இந்த உடலில் உயிர் உள்ளவரை கூட்டணிக்கு போவதில்லை.

6 சதவீதம் வாக்கு

மேலும் 21 சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும், 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் தனித்தே போட்டியிட உள்ளோம். தூய்மையான மக்கள் பணியில் ஈடுபட விரும்பும் ஒத்த கருத்துடைய அரசியல் மற்றும் பிற அமைப்புகள், அரசியல் களத்தில் மாற்றத்தை விரும்பும் குடிமக்களும் எங்களுக்கு ஆதரவு அளிக்க முன்வர வேண்டும். தேர்தல் அறிவிக்கப்பட்ட உடன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும்.

போர் வந்தால் வெற்றி வரலாம், தோல்வி வரலாம், மரணம் கூட வரலாம் அனைத்தையும் சந்திக்க தயாராகிவிட்டோம். எங்களுக்கும் விகிதாச்சார அடிப்படையில் வாக்குகள் இருப்பதால் தான் 2 திராவிட இயக்கங்களும் எங்களை பயன்படுத்திக் கொண்டன. சமத்துவ மக்கள் கட்சி தெளிந்த நீரோடையாக பாய்ந்து கொண்டு இருக்கிறது. எங்களால் 6 சதவீதம் வாக்குகள் பெற முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

விஜயகாந்த் விரும்பினால் நாளையே தயார்

அரசியலில் இப்போதுள்ள அவல நிலையை மாற்ற வேண்டும். தற்போதைய ஆட்சியில் நடைபெற்று வரும் ஊழலை பற்றி கூறிவிட்டு பின்னர், அவர்களுடன் கூட்டணி வைத்து இருப்பது மக்களை ஏமாற்றுவதாகும். எங்களுக்கு வெற்றிவாய்ப்பு உள்ள தொகுதிகளில் நாங்கள் போட்டியிடுவோம். 40 தொகுதிகளிலும் எங்களுக்கு வெற்றிவாய்ப்பு இருக்கலாம் அல்லவா?

இந்த தேர்தலில் எங்களது வாக்கு வங்கி தெரியவரும். தேர்தலில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். எங்கள் கட்சியில் குடும்ப அரசியலுக்கு வாய்ப்பு இல்லை. கட்சி தான் எனது குடும்பம். விஜயகாந்த் எங்களுடன் சேர விரும்பினால் நாளையே இணைந்து பணியாற்ற சமத்துவ மக்கள் கட்சி தயாராக இருக்கிறது. 3 கட்சிகளில் உள்ள நண்பர்கள் என்னுடன் பேசினார்கள். அவர்கள் தேர்தல் குழுவினர் அல்ல. எங்கள் இயக்கத்துடன் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்தார்கள். அது கூட்டணி பேச்சுவார்த்தை அல்ல.

ஜெயலலிதாவை எதிர்த்து பிரசாரம்

ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போதே, 1996-ல் முதல் முறையாக 40 தொகுதிகளிலும் அவரை எதிர்த்து பிரசாரம் செய்தவன். அப்போது ரஜினிகாந்த் ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று கூறிவிட்டு அமெரிக்காவுக்கு சென்றுவிட்டார். நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் தனிப்பட்ட முறையில் யாரையும் தாக்கி பேசப்போவது இல்லை. கொள்கை சார்ந்தே பிரசாரம் செய்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story