கள்ளக்காதல் அதிகரிக்க டி.வி. தொடர்கள் காரணமா? மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட்டு கேள்வி
கள்ளக்காதல் அதிகரிக்க டி.வி. தொடர்கள் காரணமா? என்று மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை,
கள்ளக்காதல் அதிகரிக்க டி.வி. தொடர்கள் காரணமா? என்று மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
கள்ளத்தொடர்பு
திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டை சேர்ந்த அஜித்குமார், தன்னை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை போலீஸ் கமிஷனர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், அப்துல்குத்தூஸ் ஆகியோர் பிறப்பித்த இடைக்கால உத்தரவில் கூறியிருப்பதாவது:-
சென்னை கொரட்டூரை சேர்ந்த ஒரு பெண்ணுடன் ஜோசப் என்ற ரஞ்சித்குமார் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். அந்த பெண், ரஞ்சித்குமாரின் நண்பரான லோகேசுடனும் கள்ளத்தொடர்பை வளர்த்து கொண்டார். இதனால் லோகேசை, ரஞ்சித்குமார் தாக்கினார்.
கொலை
பின்னர் அன்னை சத்தியா நகரை சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன், ரஞ்சித்குமார் கள்ளத்தொடர்பு வைத்துக்கொண்டார். தன்னை தாக்கிய ரஞ்சித்குமாரை பகை தீர்க்க லோகேஷ் காத்திருந்தார். இதை தெரிந்து கொண்ட ரவுடி ஒழிப்பு பிரிவை சேர்ந்த போலீஸ்காரர் சதீஷ், ரஞ்சித்குமாரை அயனாவரம், நியூ ஆவடி சாலையில் வைத்து விசாரித்து கொண்டிருந்தார். அப்போது, 5 பேருடன் வந்த லோகேஷ், ரஞ்சித்குமாரை சரமாரியாக வெட்டிக்கொன்றார்.
இந்த வழக்கில் லோகேசுடன் கைது செய்யப்பட்ட மனுதாரர் அஜித்குமார், தன்னை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்ததை எதிர்த்து மனுதாக்கல் செய்துள்ளார்.
‘டி.டி.நெக்ஸ்ட்’ பத்திரிகை
கள்ளக்காதலால் கொடூரமான கொலைகள், ஆள் கடத்தல், கொடூர தாக்குதல் போன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. துரோகம் செய்யும் மனைவியை கணவனும், கணவனை மனைவியும் தீர்த்து கட்டுகின்றனர். சென்னையில் கள்ளத்தொடர்பு காரணமாக நடந்த கொலைகளின் புள்ளிவிவரங்களை ‘டி.டி.நெக்ஸ்ட்’ ஆங்கில பத்திரிகை 2016-ம் ஆண்டு வெளியிட்டது.
அதில், ‘2014-ம் ஆண்டு நடந்த 141 கொலைகளில் 90 கொலைகளும், 2015-ம் ஆண்டு நடந்த 129 கொலைகளில் 91 கொலைகளும், 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் வரை நடந்த 65 கொலைகளில், 50 கொலைகளும் கள்ளக்காதலால் நடந்துள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.
மற்றொரு ஆங்கில பத்திரிகை 2014-ம் ஆண்டு வெளியிட்ட புள்ளிவிவரங்களில், ‘ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் தான் கள்ளக்காதலால் அதிக கொலை நடக்கிறது என்றும், 2013-ம் ஆண்டு கள்ளக்காதல் காரணமாக 385 கொலைகள் நடந்துள்ளது என்றும் கூறியுள்ளது.
டி.வி. தொடர்
சமுதாயத்தில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக திகழும் கள்ளக்காதல் அதிகமாக என்ன காரணம் என்ற கேள்வி எழுகிறது. எனவே, கீழ்க்கண்ட கேள்விகளுக்கு மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்கவேண்டும்.
* கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை கள்ளக்காதல் கொலைகள் தமிழகத்தில் நடந்துள்ளன?, நாடு முழுவதும் எத்தனை கொலைகள் நடந்துள்ளன?
* கள்ளக்காதலால் பிற குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதா?
* கள்ளக்காதலுக்கு டி.வி. தொடர், சினிமா போன்றவை முக்கிய காரணமாக உள்ளதா?
* கள்ளக்காதலுக்காக கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் போன்ற குற்றச்செயல்களை செய்ய டி.வி. தொடர், சினிமா தூண்டுகிறதா?
* வாழ்க்கை துணையை கொலை செய்ய கூலிப்படையினருக்கு பணம் கொடுக்கின்றனரா?
கள்ளக்காதல் தளம்
* ஆண் மற்றும் பெண்கள் சுயமாக சம்பாதிப்பதாலும், பொருளாதார சுதந்திரத்தாலும் கள்ளக்காதல் அதிகரிக்கிறதா?
* வாழ்க்கை துணையின் ‘செக்ஸ்’ குறைபாடும் காரணமா?
* முகநூல், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் கள்ளக்காதலை ஏற்படுத்த ஒரு தளத்தை உருவாக்குகிறதா?
* மேற்கத்திய கலாசாரமும், மதுவுக்கு அடிமையான வாழ்க்கை துணையும் கள்ளக்காதலுக்கு காரணமா?
* கூட்டுக்குடும்ப முறை மறைந்ததால், கள்ளக்காதலின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதா?
* நிச்சயிக்கப்பட்ட திருமணம் அல்லது விருப்பம் இல்லாதவரை திருமணம் செய்வதால் அதிகரித்துள்ளதா?
உளவியல் மையம்
* இதுபோன்ற பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க உளவியல் ரீதியான சிகிச்சை உள்ளிட்டவை வழங்குவது குறித்து தீர்மானிக்க சுப்ரீம் கோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் ஒரு குழு அமைத்தால் என்ன?
* தம்பதியருக்கு உளவியல் ரீதியான ஆலோசனை வழங்க மையங்களை தொடங்கினால் என்ன?
இந்த கேள்விகளுக்கு விரிவான பதிலை அளிக்க வேண்டும். விசாரணையை ஜூன் 3-வது வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.
Related Tags :
Next Story