நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட விருப்ப மனு கமல்ஹாசனிடம் வழங்கினர்
நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள், கமல்ஹாசனிடம் விருப்ப மனுவை வழங்கினர்.
சென்னை,
நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள், கமல்ஹாசனிடம் விருப்ப மனுவை வழங்கினர்.
மக்கள் நீதி மய்யம்
நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழக அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்வதற்கான ஆயத்த பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சி முதல் தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறது.
புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட முடிவு செய்து மக்கள் நீதி மய்யம் கட்சியினர் களப்பணி ஆற்றி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனுவை பெற்று பூர்த்தி செய்து வழங்க கட்சி சார்பில் அறிவுறுத்தியது.
விருப்ப மனு
மக்கள் நீதி மய்யம் கட்சியை சார்ந்தவர்கள் மட்டுமல்லாது, அரசியல் ஆர்வம் உள்ளவர்கள், சமூக சிந்தனை உள்ளவர்களும் விருப்ப மனு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, சில நாட்களாக மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனுவை பெற்றனர்.
விருப்ப மனுவை பெற்றவர்கள் தாங்கள் போட்டியிட விருப்பம் தெரிவித்த இடங்களை குறிப்பிட்டு, விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனிடம் கட்சி தலைமை அலுவலகத்தில் நேரடியாக வந்து நேற்று வழங்கினர்.
ராமநாதபுரம், தென்சென்னை
நேற்று ஒரே நாளில் மட்டும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து 750 பேர் மனுவை பூர்த்தி செய்து வழங்கி இருப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதில் 100-க்கும் மேற்பட்ட விருப்ப மனு, கமல்ஹாசன் பெயரில் வழங்கி இருப்பதாகவும், அதிகபட்சமாக ராமநாதபுரம், தென்சென்னையில் கமல்ஹாசன் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு செய்து இருப்பதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இன்றும் (வியாழக்கிழமை) கட்சி தலைமை அலுவலகத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுவை கமல்ஹாசன் பெறுகிறார்.
Related Tags :
Next Story