அ.தி.மு.க-பா.ம.க. கூட்டணி முடிவான சமயத்தில் “துரைமுருகனுடன் நான் பேசியது உண்மை” எல்.கே.சுதீஷ் பரபரப்பு பேட்டி


அ.தி.மு.க-பா.ம.க. கூட்டணி முடிவான சமயத்தில் “துரைமுருகனுடன் நான் பேசியது உண்மை” எல்.கே.சுதீஷ் பரபரப்பு பேட்டி
x
தினத்தந்தி 7 March 2019 3:30 AM IST (Updated: 7 March 2019 2:20 AM IST)
t-max-icont-min-icon

‘அ.தி.மு.க-பா.ம.க. கூட்டணி முடிவான சமயத்தில் துரைமுருகனுடன் நான் பேசியது உண்மை தான்’, என்று எல்.கே.சுதீஷ் தெரிவித்தார்.

சென்னை, 

‘அ.தி.மு.க-பா.ம.க. கூட்டணி முடிவான சமயத்தில் துரைமுருகனுடன் நான் பேசியது உண்மை தான்’, என்று எல்.கே.சுதீஷ் தெரிவித்தார்.

அ.தி.மு.க-தே.மு.தி.க. இழுபறி

பா.ஜ.க., பா.ம.க., புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீடு முடிந்தநிலையில், அ.தி.மு.க. கூட்டணிக்கு தே.மு.தி.க. வருவதில் தொடர்ந்து இழுபறி ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் சென்னை வந்த மத்திய மந்திரி பியூஸ் கோயலுடன், தே.மு.தி.க. துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் நேற்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படும் பட்சத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த பேச்சுவார்த்தையிலும் முடிவு எட்டப்படவில்லை. இதையடுத்து பிரதமர் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் படங்கள், பேனர்கள் உடனடியாக அகற்றப்பட்டன.

பேச்சுவார்த்தை முடிந்து தே.மு.தி.க. துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பேச்சுவார்த்தை

மத்திய மந்திரி பியூஸ் கோயல் நேற்றிரவு(நேற்று முன்தினம்) மும்பையில் இருந்து தொலைபேசி மூலம் என்னிடம் பேசினார். தான் சென்னை வரவுள்ளதாகவும், தன்னை சந்திக்க வருமாறும் அவர் கேட்டுக்கொண்டார். அதன் அடிப்படையில் அவரை சந்தித்தேன். வரும்போதே எங்களது கூட்டணி விவகாரம், தொகுதிகள் எண்ணிக்கை மற்றும் எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து நாங்கள் பேசினோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து சுதீஷிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

துரைமுருகனிடம் பேசியது உண்மை

கேள்வி:- தி.மு.க. கூட்டணிக்கு வருவதற்கு நீங்கள் விருப்பம் தெரிவித்ததாக அக்கட்சி பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளாரே?

பதில்:- நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை நாங்கள் ஒரே நிலைப்பாட்டில் இருக்கிறோம். பா.ஜ.க.வுடன் கூட்டணி என்று விஜயகாந்த் முடிவு செய்தபிறகு, பா.ஜ.க.வுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். ஆனால் தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணி உருவாகவேண்டும் என பா.ஜ.க. விரும்பியது.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் எங்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தனர். அந்த சமயத்தில் பா.ம.க. உடன் கூட்டணியில் அ.தி.மு.க. கையெழுத்திட்டது எங்களுக்கு சற்று வருத்தம் அளித்தது. கடந்த முறை போலவே அனைத்து கட்சிகளை ஒன்றாக வைத்து தொகுதி பங்கீடு கையெழுத்திட்டது போல இந்தமுறை நடக்கவில்லை என்ற எங்களின் வருத்தத்தை தெரிவித்துக்கொண்டோம். அந்த நேரத்தில் எங்களுக்கு தி.மு.க.வில் இருந்து அழைப்பு வந்தது உண்மை தான். அப்போது துரைமுருகனிடம் நான் பேசியதும் உண்மை தான்.

ஓரிரு நாளில் முடிவு

கேள்வி:- பா.ம.க. போலவே தே.மு.தி.க.வும் 7 தொகுதிகள் கேட்கிறதா?

பதில்:- பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை சீட்டும் கொடுத்தது அவர்களின் தனிப்பட்ட விஷயம். தே.மு.தி.க.வின் பலம் என்ன? என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். அதன்படி எங்களின் இலக்கு குறித்து அவர்களிடம் கேட்டிருக்கிறோம்.

கேள்வி:- அ.தி.மு.க- தே.மு.தி.க. கூட்டணியில் இழுபறி ஏன்?

பதில்:- இழுபறி ஒன்றும் கிடையாது. இன்று (நேற்று) நடந்த பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட தொகுதி பங்கீடு முடியும் தருவாயை எட்டியது. அனேகமாக நாளை (இன்று) அல்லது நாளை மறுநாள் (நாளை) முடிவு தெரிந்துவிடும். பிரதமர் மோடி அடுத்தடுத்து தமிழகத்துக்கு வர இருக்கிறார். அந்த சமயங்களில் நடக்கும் கூட்டங்களில் விஜயகாந்த் நிச்சயம் பங்கேற்பார்.

மேற்கண்டவாறு சுதீஷ் பதில் அளித்தார்.

Next Story