துரைமுருகன் திமுக பற்றியும் திமுக தலைமை பற்றியும் என்னிடம் நிறைய பேசி உள்ளார் - சுதீஷ்


துரைமுருகன் திமுக பற்றியும் திமுக தலைமை பற்றியும் என்னிடம் நிறைய பேசி உள்ளார் - சுதீஷ்
x
தினத்தந்தி 7 March 2019 2:02 PM IST (Updated: 7 March 2019 2:02 PM IST)
t-max-icont-min-icon

துரைமுருகன் திமுக பற்றியும் திமுக தலைமை பற்றியும் என்னிடம் நிறைய பேசி உள்ளார் என தேமுதிக துணைத்தலைவர் சுதீஷ் கூறி உள்ளார்.

சென்னை,

கூட்டணி சேர்வதில் ஏற்பட்டுள்ள மிகவும் இக்கட்டான சூழலில் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் தலைமையில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கூடி ஆலோசனை நடத்தி வருகின்றனர். 

அதிமுக-பாஜக கூட்டணியில் தேமுதிக இடம்பெறும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று சென்னை வந்த பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியுஷ் கோயலிடம், தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தைக்குழு தலைவர் சுதீஷ் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.

இதற்கிடையே அக்கட்சியின் சில நிர்வாகிகள் திமுக பொருளாளர் துரைமுருகனை சந்தித்து கூட்டணி தொடர்பாக பேசினர். இதனால் தேமுதிகவின் இதர நிர்வாகிகளும், தொண்டர்களும் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.

பாமகவுக்கு சமமான தொகுதிகள் மற்றும் அக்கட்சி கேட்கும் தொகுதிகளையே தேமுதிகவும் கேட்பதே இழுபறி நீடிக்கக் காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த இக்கட்டான சூழலில், தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் தலைமையில் கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் முக்கிய நிர்வாகிகள் கூடி ஆலோசனை நடத்தப்பட்டது.

பின்னர் துணை தலைவர் சுதீஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது  தனிப்பட்ட காரணங்களுக்காகவே திமுக பொருளாளர் துரைமுருகனை நேற்று சந்தித்தோம், அரசியல் காரணங்கள் இல்லை. கூட்டணி தொடர்பாக பேச துரைமுருகனை சந்திக்கவில்லை  என தேமுதிக  நிர்வாகிகள் கூறி உள்ளனர்.

தேமுதிக துணை தலைவர் சுதீஷ் கூறியதாவது:-

அனகை முருகேசனும், இளங்கோவனும் தனிப்பட்ட காரணங்களுக்காக துரைமுருகனை சந்திக்க சென்றனர்.  ஒரே மாவட்டத்தை சேர்ந்த நானும், துரைமுருகனும் பலமுறை சந்தித்து அரசியல் தவிர பல்வேறு விஷயங்கள் குறித்து பேசி உள்ளோம்.  உள்ளே பேசுவதை வெளியே சொல்லும் பழக்கம் எங்களுக்கு கிடையாது.  துரைமுருகன் என்னவெல்லாம் பேசினார் என்பதை நான் கூறட்டுமா? திமுக பற்றியும் திமுக தலைமை பற்றியும் என்னிடம் நிறைய பேசி உள்ளார்.

பாமக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்திட்ட போது எங்களுடைய தொகுதி பங்கீட்டை உறுதி செய்திருக்கலாம் என்பது எங்கள் வருத்தம். அ.தி.மு.க உடன் கூட்டணி  முடிவாகி விட்டது. இரண்டொரு நாளில் வெளியிடப்படும் என கூறினார்.

Next Story