பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை ரத்து செய்தது செல்லாது ஐகோர்ட்டு உத்தரவு
அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு நடத்தப்பட்ட தேர்வை ரத்து செய்தது செல்லாது என மேல்முறையீட்டு வழக்கில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
தமிழகம் முழுவதும் உள்ள அரசு பாலிடெக்னிக்குகளில் காலியாக உள்ள 1,058 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் 2017-ம் ஆண்டு அறிவிப்பு வெளியிட்டு, தேர்வு நடத்தியது. இதில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 569 பேர் பங்கேற்றனர். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றவர்.
பின்னர் அவர்கள் கல்வி சான்றிதழ்களை சரிபார்க்கும் பணிக்காக அழைக்கப்பட்டனர். இந்த தேர்வில் மிகப் பெரிய முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து இந்த தேர்வை ரத்து செய்து தமிழக அரசு கடந்த ஆண்டு பிப்ரவரி 8-ந்தேதி உத்தரவிட்டது.
இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டிலும், ஐகோர்ட்டு மதுரை கிளையிலும் தனித்தனியாக பலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டில் விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், ‘தேர்வை ரத்து செய்த தமிழக அரசின் முடிவு சரிதான்’ என்று உத்தரவிட்டார்.
ஐகோர்ட்டு மதுரை கிளையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில், ‘196 விடைத்தாள்களில் மட்டுமே மோசடி நடந்துள்ளது என்று குற்றம் சாட்டப்படுகிறது. எனவே, தேர்வை ரத்து செய்தது செல்லாது. 196 பேரை தவிர, தேர்ச்சி பெற்ற பிறருடைய கல்வி சான்றிதழை சரிபார்க்கும் பணியை மேற்கொள்ளலாம்’ என்று உத்தரவிட்டார்.
இரு விதமான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதால் அரசு தரப்பிலும், தேர்வில் பங்கேற்றவர்களும் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்குகளை நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசலு ஆகியோர் விசாரித்தனர்.
பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான தேர்வை ரத்து செய்த அரசின் உத்தரவு செல்லாது. முறைகேட்டில் ஈடுபட்ட 196 பேரின் விண்ணப்பங்களை மட்டும் நிராகரித்துவிட்டு, தேர்ச்சி பெற்ற பிற தகுதியான நபர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி பணி மேற்கொள்ள வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் உத்தரவை வழங்க வேண்டும். இந்த நடைமுறைகளை ஏப்ரல் 30-ந்தேதிக்குள் செய்து முடிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.
Related Tags :
Next Story