சட்டசபை இடைத்தேர்தல்-நாடாளுமன்ற தேர்தல்: தி.மு.க. வேட்பாளர்கள் யார்? நாளை முதல் நேர்காணல்


சட்டசபை இடைத்தேர்தல்-நாடாளுமன்ற தேர்தல்: தி.மு.க. வேட்பாளர்கள் யார்? நாளை முதல் நேர்காணல்
x
தினத்தந்தி 7 March 2019 10:15 PM GMT (Updated: 2019-03-08T01:18:50+05:30)

நாடாளுமன்ற தேர்தல், 21 சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான நேர்காணல் அண்ணா அறிவாலயத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடக்கிறது.

சென்னை, 

நாடாளுமன்ற தேர்தல், 21 சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான நேர்காணல் அண்ணா அறிவாலயத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடக்கிறது.

தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

ஆதரவாளர்களுக்கு அனுமதி இல்லை

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பி தலைமை அலுவலகத்தில் விண்ணப்பம் தந்துள்ளவர்களை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் 10-ந்தேதி காலை 9 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேர்காணல் வாயிலாக சந்தித்து தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்புகள் குறித்து ஆராய்ந்து அறிந்திட இருக்கிறார்.

இந்த நேர்காணலின்போது, அந்தந்த நாடாளுமன்ற தொகுதிகளை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு-பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி செயலாளர்கள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும். வேட்பாளர்கள் தங்களுக்கான ஆதரவாளர்களையோ-பரிந்துரையாளர்களையோ அழைத்து வரக்கூடாது. அவர்களையெல்லாம் நேர்காணலுக்கு கண்டிப்பாக அனுமதிக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இடைத்தேர்தல்

நாடாளுமன்ற தேர்தலுடன் வர உள்ள 21 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்பமனு செய்துள்ள தி.மு.க.வினரிடம் மு.க.ஸ்டாலின் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடத்த உள்ளார். இதற்கான அறிவிப்பையும் பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ளார்.

மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

இந்த 2 நேர்காணலிலும் வேட்பாளர்களாக போட்டியிட விண்ணப்பித்துள்ளவர்கள் தங்களின் ஆதரவாளர்களையோ, பரிந்துரையாளர்களையோ அழைத்து வரக்கூடாது என்று கண்டிப்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 நேர்காணல் முடிந்த பிறகு, 11-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல், 21 தொகுதி இடைத்தேர்தல் குறித்தும் தேர்தல் பணி குறித்தும் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.

Next Story