விவசாயிகளிடம் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு குற்றச்சாட்டு


விவசாயிகளிடம் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 7 March 2019 10:15 PM GMT (Updated: 2019-03-08T01:51:20+05:30)

விவசாயிகளுக்கு மானியம் வழங்கும் முன்பே அதிகாரிகள் லஞ்சம் கேட்கிறார்கள் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடு, 

ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வேளாண்மைத்துறை சார்பில், கூட்டுப்பண்ணைத் திட்டத்தின் கீழ் உழவர் குழுக்களுக்கு பண்ணை எந்திரங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவுக்கு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கினார். தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் முன்னிலை வகித்தார். விழாவில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு பேசும்போது கூறியதாவது:-

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள அனைவருக்கும் ரூ.2 ஆயிரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளின் நலனை பேணி காக்கும் அரசாக இந்த அரசு திகழ்ந்து வருகிறது. விவசாயிகளுக்கு மானியம் வழங்குவதற்கு முன்பே அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்கிறார்கள். இது மிகுந்த மனவேதனையை அளிக்கிறது.

விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறிகளுக்கு போதிய விலை கிடைப்பதில்லை. இதை கருத்தில் கொண்டு ஈரோடு, மதுரை, சென்னை ஆகிய இடங்களில் நவீன முறையில் மிகப்பெரிய அளவில் குளிரூட்டப்பட்ட பதனிடும் நிலையம் அமைக்கப்பட உள்ளன. இதில் விவசாயிகள் தங்களது விளைபொருட்களை நீண்ட நாட்கள் வைத்திருந்து நல்ல விலை கிடைக்கும் போது விற்பனை செய்து கொள்ளலாம். இது தேர்தல் முடிந்த பிறகு தொடங்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story