37 அ.தி.மு.க. எம்.பி.க்களால் தமிழகத்திற்கு பலன் இல்லை தே.மு.தி.க. தனித்து போட்டியிட தயார் பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேட்டி


37 அ.தி.மு.க. எம்.பி.க்களால் தமிழகத்திற்கு பலன் இல்லை தே.மு.தி.க. தனித்து போட்டியிட தயார் பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேட்டி
x
தினத்தந்தி 8 March 2019 10:00 PM GMT (Updated: 2019-03-09T01:38:42+05:30)

37 தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றி பெற்றும் தமிழகத்திற்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. தனித்து போட்டியிட தயார் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

சென்னை, 

37 தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றி பெற்றும் தமிழகத்திற்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. தனித்து போட்டியிட தயார் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைவதில் தொடர்ந்து இழுபறி நிலை நீடித்து வருகிறது. இதற்கிடையே கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க., தி.மு.க. இரு கட்சிகளிடம் தே.மு.தி.க. பேசியதாக வெளியான தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் தே.மு.தி.க. குறித்து தெரிவித்த கருத்துகள் தமிழக அரசியல் அரங்கில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக விளக்கம் அளிக்கும் வகையிலும், கூட்டணி தொடர்பாகவும் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. கட்சி அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

துரைமுருகன்

அ.தி.மு.க, தி.மு.க. இரண்டு தரப்பிலும் நாங்கள் கூட்டணிக்காக பேசியதாக கூறப்படுவது தவறு. இது குறித்து சுதீசும், முருகேசன், இளங்கோவன் ஆகியோர் உங்களிடம் தெளிவாக சொல்லி விட்டார்கள். ஆனாலும் மூத்த அரசியல்வாதியான துரைமுருகன், வயதில் மூத்தவர். ஒருவர் நம்முடைய வீட்டிற்கு வந்தால் அவர்களை வரவேற்பது தான் தமிழர் பண்பாடு. ஒரு எதிரியே நம் வீட்டிற்கு வந்தால் கூட அவர்களை உபசரிப்பது தான் நம்முடைய கடமை.

ஏதோ காரணத்திற்காக அவர்கள் வந்தார்கள் என்று வைத்துக்கொண்டாலும், அவர்கள் உள்ளே வந்தபோது எந்த பத்திரிகையாளர்களும் இல்லை. வெளியே செல்லும்போது பத்திரிகையாளர்கள் வந்து நிற்கிறார்கள் என்றால் என்ன காரணம். அப்போது அங்க என்ன நடக்கிறது. உங்களை (துரைமுருகன்) ஒரு பெரிய மனிதர் என்று நினைத்து தானே அவர்கள் வந்தார்கள். அவர்களுக்கு கொடுக்கிற நம்பிக்கை இது தானா?.

தில்லுமுல்லு கட்சி

சுதீஷிடம், துரைமுருகன் அவரது கட்சியை பற்றி என்ன சொன்னார்? என்பதை அவர் சொல்லட்டும் அதன்பிறகு எங்கள் நிர்வாகி முருகேசன் சொன்னதை நாங்கள் சொல்கிறோம். ஒரு சின்ன பிரச்சினையை பூதாகரமாக்கி, தே.மு.தி.க.வை பழி வாங்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக, தி.மு.க. ஒரு சூழ்ச்சியை கையாண்டு இருக்கிறது. தி.மு.க. என்றாலே தில்லுமுல்லு கட்சி. எங்களை வைத்து அரசியல் செய்கிறார்கள்.

விஜயகாந்த் அமெரிக்காவில் இருந்தபோதே, தேர்தல் குழுவை நாங்கள் அமைத்து விட்டோம். அன்றில் இருந்து அனைத்து கட்சிகளும் எங்களிடம் பேசி இருக்கிறது. ஆனால் கூட்டணிக்கான முடிவை விஜயகாந்த் தான் எடுப்பார் என்று தெரிவித்து இருந்தோம். மு.க.ஸ்டாலின் எங்கள் வீட்டிற்கு வந்தார். நாங்கள் நினைத்தால் அவரை வர விடாமல் தடுத்திருக்க முடியாதா?. கருணாநிதி உடல் நிலை சரியில்லாத போது அவரை சந்திக்க விஜயகாந்த் முதல் ஆளாக அனுமதி கேட்டார்.

ஆனால் கடைசி வரைக்கும் விஜயகாந்திற்கு மு.க.ஸ்டாலின் அனுமதி வழங்கவில்லை. ஆனால் எங்களை அவர்கள் கேட்டபோது அனுமதி கொடுத்தோம். ரஜினிகாந்த் வந்து சென்ற பிறகு, விஜயகாந்தை உடனடியாக பார்க்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கேட்டார். நாங்கள் வாருங்கள் என்று தான் அழைத்தோம். மு.க.ஸ்டாலினை மிக மரியாதையாக அழைத்து பேசி அனுப்பி வைத்தோம். அரசியல் பேசவில்லை என்பதை மு.க.ஸ்டாலின் சொல்லட்டும். பிறகு அதற்கு நான் பதில் சொல்கிறேன்.

வீட்டிற்குள் விடுவாரா?

துரைமுருகன் பேசியது முற்றிலும் உளறலாக தான் பார்க்கிறேன். முதலில் எங்கள் நிர்வாகிகளை பார்த்து யார் என்பதே தெரியாது என்றார். தெரியாத ஆளை வீட்டிற்குள் துரைமுருகன் விட்டு விடுவாரா?. நானும் வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவள் தான். அங்கே தான் படித்தேன். வேலூர் மாவட்டத்தை சேர்ந்த அவர், இந்த அளவுக்கு கீழ்தரமான அரசியலை செய்வாரா? என்பதை துரைமுருகனை பார்த்து தான் தெரிந்து கொண்டேன்.

40 தொகுதிகளுக்கும் தொகுதி பங்கீட்டை முடித்து விட்டு, மு.க.ஸ்டாலின் வெளியூர் சென்று விட்டார். இது எல்லோருக்கும் தெரியும். அந்த நேரத்தில் யாராவது கூட்டணி பற்றி பேசுவார்களா?. மு.க.ஸ்டாலின் தூங்குகிறார் என்று துரைமுருகன் கூறுகிறார் என்றால், அவரது தலைவரையே அவர் அசிங்கப்படுத்துகிறார் என்று தானே அர்த்தம்.

37 எம்.பி.க்களால் பலன் இல்லை

எங்களை பொறுத்தவரையில் தே.மு.தி.க.வை யாரும், மிரட்டி பணிய வைக்க முடியாது. தி.மு.க. முறை தவறியதால் தான் நாங்கள் இப்படி பேச வேண்டியுள்ளது. தேர்தல் நேரம் வந்தால் எல்லோரும் கூட்டணி பேச தான் வருவார்கள். ஆனால் யாருடன் கூட்டணி என்பதை அந்தந்த கட்சி தலைமை தான் அறிவிக்கும். எல்லோரும் தான் கூட்டணி பேசுகிறார்கள். இதை வைத்து என்ன கொள்கை வைத்து இருக்கிறீர்கள் என்று கேட்டால் என்ன அர்த்தம். முதலில் தனித்து போட்டியிட்ட கட்சி தே.மு.தி.க. தான். மக்கள்நல கூட்டணி வைத்தபோது, அ.தி.மு.க.வின் ‘பி டீம்’ என்று சொன்னீர்கள். எங்கள் கொள்கைகளில் இருந்து என்றைக்குமே நாங்கள் மாறியதில்லை.

தற்போது நடக்க இருப்பது நாடாளுமன்ற தேர்தல், தமிழகத்திற்கான தேர்தல் இல்லை. எனவே நிச்சயமாக நாங்கள் 2 தேசிய கட்சிகளில் ஒன்றுடன் தான் கூட்டணி அமைத்தாக வேண்டும். கடந்த முறை ஜெயலலிதா தேர்தலில் வெற்றி பெற்று 37 எம்.பி.க்களை பெற்றார். அவர் யாருடனும் கூட்டணி வைக்கவில்லை. அதனால் தமிழ்நாட்டில் என்ன நன்மை கிடைத்தது?. 37 பேரும் வெற்றி பெற்று டெல்லிக்கு போனார்கள், வந்தார்கள். கூட்டணியில் இல்லாததால் எந்த நல்ல திட்டங்களும் கிடைக்காமல் போயிற்று.

ஜெயலலிதாவை எதிர்த்தவர் விஜயகாந்த்

யார் பிரதமர் வேட்பாளரை அறிவிக்கிறார்களோ, அந்த கூட்டணியில் இணைந்து வெற்றி பெறும்போது தான் தமிழகத்திற்கு நன்மைகளை கொண்டு வர முடியும். இதனால் நாடாளுமன்ற தேர்தலின்போது, பிரதமர் வேட்பாளரை மனதில் வைத்து விஜயகாந்த் முடிவு எடுக்கிறார். எனவே எங்களின் நிலை, நாங்கள் யாருடன் கூட்டணி வைத்திருக்கிறோம், தமிழகத்திற்கு எதையெல்லாம் கேட்க போகிறோம், எத்தனை தொகுதிகள் போன்றவற்றை தெளிவாக உங்கள் அனைவரையும் அழைத்து கண்டிப்பாக தெரிவிப்போம்.

கட்சிகள் விமர்சனம் வைப்பது என்பது வேறு. விஜயகாந்த் மீது ஜெயலலிதா விமர்சனம் வைத்தார். ஆனாலும் கூட்டணி வைக்கவில்லையா?. ஜெயலலிதா முதல்-அமைச்சராகவும், விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராகவும் ஆகவில்லையா?. இன்றைக்கு வரைக்கும் அ.தி.மு.க. ஆட்சியில் இருக்கிறது என்றால், அதற்கு தே.மு.தி.க. தான் காரணம் என்பது எல்லோருக்கும் தெரியும். மக்கள் பிரச்சினைக்காக ஜெயலலிதாவையே எதிர்த்து சட்டசபையில் குரல் எழுப்பியவர் விஜயகாந்த். கிழியாத சட்டையை கிழித்தது போல் போட்டோ எடுக்கவில்லை. தப்பு நடந்தால் கேட்போம், இல்லையென்றால் எதிர்ப்போம்.

அ.தி.மு.க. ஆட்சி தொடருமா?

ஒரு கட்சி விமர்சனம் வைக்கும்போது, பதிலுக்கு மற்ற கட்சியும் வைக்கும். அதற்காக அந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என்று ஆகி விடுமா?. அரசியலில் அதையெல்லாம் பார்க்க முடியுமா?. கூட்டணி நிலைப்பாட்டில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். 2 நாள் பொறுத்திருங்கள். அப்போது தனித்து போட்டியா? கூட்டணி வைத்து போட்டியா? எத்தனை தொகுதிகள் என்பதெல்லாம் உங்களுக்கு தெரியும். எங்களுக்கான தொகுதிகள் கிடைப்பதற்காக காத்திருந்து, பொறுமையாக கையாளுகிறோம்.

21 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த ஆட்சி தொடருகிறதா? இல்லையா? என்ற பதில் அந்த தேர்தலில் தான் கிடைக்கும். எல்லாவற்றையும் பார்த்து தெளிவாக அறிவிப்போம். தேர்தல் தேதி அறிவிக்கட்டும், கூட்டணி இறுதியாகட்டும் அதன்பிறகு விஜயகாந்தின் பிரசாரம் குறித்து அறிவிக்கப்படும்.

தனித்து போட்டியிடுவதில் எங்களுக்கு என்ன தயக்கம். தனித்து போட்டி என்பதை தமிழகத்தில் அறிமுகப்படுத்தியதே தே.மு.தி.க. தான். அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஓ.பன்னீர்செல்வம் எங்கள் வீட்டிற்கே வந்தார். கூட்டணி சம்பந்தப்பட்ட விஷயங்கள் உறுதியாகாததால் பிரதமர் பங்கேற்ற மேடையில் தே.மு.தி.க. பங்கேற்க முடியவில்லை. உங்கள் அவசரத்திற்காக நாங்கள் போக முடியுமா?. அ.தி.மு.க. எங்களுக்கு உரிய மரியாதை வழங்கவில்லை என்பது உங்கள் கற்பனை.

காரணம் என்ன?

கடந்த முறை தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தபோது, ஒரேநாளில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது அப்படி இல்லாமல், பா.ம.க.வை முதலில் கூப்பிட்டு கையெழுத்து பெற்றது தான் இவ்வளவு காலதாமதம். எல்லோரும் ஒன்றாக அமர்ந்திருந்து முடித்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பது தான் எங்கள் நிலைப்பாடு. இருந்தாலும் இவ்வளவு நாள் பொறுத்து இருந்தீர்கள். 2 நாள் பொறுத்து இருங்கள். கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை, குளறுபடியும் இல்லை. நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பத்திரிகையாளர்கள் சந்திப்பில்
‘நீ, வா, போ’ என்று ஒருமையில் பேசிய பிரேமலதா
வாக்குவாதத்தால் பரபரப்பு

பத்திரிகையாளர்களுக்கு பிரேமலதா விஜயகாந்த் பேட்டி அளிக்கும்போது, பத்திரிகையாளர்களை ‘நீ கேளு, நீ என்ன சொன்ன..., நீ கேட்கிறதுக்கு பதில் சொல்ல முடியாது’ மேலும், நீ, வா, போ, என்று ஒருமையில் பேசினார். ஒரு கட்டத்தில், ‘எங்களுக்கு கொள்கை இல்லையென்று உனக்கு தெரியுமா?’ என்ன கேட்கிற நீ? என்று ஆவேசமாக, மிரட்டுவது போன்று பேசினார். தொடர்ந்து ஒவ்வொரு கேள்விக்கும் பதில் அளிக்கும்போது, நீ... என்ற வார்த்தையே அவர் முன்வைத்தார்.

அப்போது பத்திரிகையாளர்கள் பிரேமலதாவிடம், நீங்கள் ஒரு அரசியல் கட்சி நிர்வாகி, நீங்கள் இப்படி ஒருமையில் பேசலாமா?, தரம் தாழ்ந்து பேசுவது நியாயம் தானா? என்று கேட்டனர். இதற்கு பிரேமலதா, நீங்கள் மட்டும் எங்களை கேள்வி கேட்கலாமா? என்று எதிர் கேள்வி கேட்டார். அதற்கு பத்திரிகையாளர்கள், ‘கேள்வி கேட்பது எங்கள் கடமை. உங்கள் தொண்டர்களுக்காகவும், மக்களுக்காகவும் தான் இதுபோன்ற கேள்விகளை நாங்கள் எழுப்புகிறோம். இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். முதலில் ஒருமையில் பேசுவதை கைவிடுங்கள்’ என்றனர். ஆனாலும் பிரேமலதா தொடர்ந்து, நீ... என்ற வார்த்தையை பயன்படுத்தினார்.

உடனே பத்திரிகையாளர்கள் ஒருசேர எழுந்து நின்று, முதலில் நாகரீகமாக பேசி விட்டு, கேள்விகளுக்கு பதில் அளியுங்கள் என்று கோரசாக கூறினர். அதற்கு பிரேமலதா, ‘நீங்கள் ஒவ்வொருவராக கேள்வி கேளுங்கள், நான் பதில் சொல்கிறேன். நீங்கள் 24 மணிநேரம் வாசலில் காத்திருக்கிறீர்கள் என்பதற்காக நாங்கள் எதையும் சொல்ல முடியாது. எங்கள் கட்சி தலைமை எப்போது சொல்கிறதோ? அப்போது தான் கட்சி சம்பந்தமான அறிக்கைகளை, தகவல்களை வெளியிடுவோம்’ என்றார். பத்திரிகையாளர்களின் கேள்வி கணைகளில் சிக்கிய பிரேமலதா அதனை சமாளிக்கும் வகையில் ஒருமையில் பேசியது முகம் சுளிக்கும் வகையில் அமைந்ததாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Next Story