தடுப்பு சுவரில் கார் மோதி 4 பேர் பலி திருப்பதிக்கு சென்று திரும்பியபோது பரிதாபம்
திருப்பதிக்கு சென்று விட்டு திரும்பியபோது, தடுப்பு சுவரில் கார் மோதியதில் 4 பேர் பலியானார்கள்.
கரூர்,
திருப்பதிக்கு சென்று விட்டு திரும்பியபோது, தடுப்பு சுவரில் கார் மோதியதில் 4 பேர் பலியானார்கள்.
தடுப்பு சுவரில் கார் மோதல்
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காந்திநகரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 38). நாளிதழ் விற்பனை ஏஜெண்டாக உள்ளார். இவருடைய மனைவி சரஸ்வதி (37), இவர்களது மகள் ஷக்சிதா (5). ராமகிருஷ்ணனின் நண்பரான ஒட்டன்சத்திரம் நல்லாக்கவுண்டர் நகரை சேர்ந்தவர் செல்வம் (50). இவர் மெக்கானிக் வேலை பார்த்து வந்தார்.
இவர்கள் 4 பேரும் ஒரு காரில் ஒட்டன்சத்திரத்தில் இருந்து திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய சென்றனர். பின்னர் அங்கு தரிசனத்தை முடித்துவிட்டு நேற்று முன்தினம் ஒட்டன்சத்திரத்திற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
காரை ராமகிருஷ்ணன் ஓட்டினார். மனைவி சரஸ்வதி, மகள் ஷக்சிதா ஆகிய இருவரும் பின் இருக்கையிலும், செல்வம் ராமகிருஷ்ணன் அருகிலும் அமர்ந்து வந்தனர். அந்த கார் நேற்று அதிகாலை கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள சீத்தப்பட்டி காலனி என்ற இடத்தில் திண்டுக்கல்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக கார் தாறுமாறாக ஓடி, சாலையோரம் உள்ள பால தடுப்பு சுவரில் மோதியது. இதில் கார் சுக்குநூறாக நொறுங்கியது.
4 பேர் பலி
இதில் காரில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த சரஸ்வதி, ஷக்சிதா, செல்வம் ஆகிய 3 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். ராமகிருஷ்ணன் படுகாயமடைந்து உயிருக்கு போராடினார். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் விபத்து குறித்து அரவக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின்பேரில் அரவக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் படுகாயமடைந்த ராமகிருஷ்ணனை மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன்பிறகு, விபத்தில் இறந்த 3 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்ற ராமகிருஷ்ணன் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ராமகிருஷ்ணனும் நேற்று மாலை பரிதாபமாக இறந்தார். இதனால் சாவு எண்ணிக்கை 4-ஆக உயர்ந்தது. இந்த விபத்து குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story