‘அரசியலில் நடிகனாக இருக்க மாட்டேன்’ மகளிர் தின விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேச்சு
‘அரசியலில் நடிகனாக இருக்க மாட்டேன்’ என்று சென்னையில் நடந்த மகளிர் தின விழாவில் நடிகர் கமல்ஹாசன் கூறினார்.
சென்னை,
‘அரசியலில் நடிகனாக இருக்க மாட்டேன்’ என்று சென்னையில் நடந்த மகளிர் தின விழாவில் நடிகர் கமல்ஹாசன் கூறினார்.
மகளிர் தின விழா
சென்னை வேப்பேரியில் உள்ள ஜெயின் மகளிர் கல்லூரியில் மகளிர் தின விழா நேற்று நடந்தது. கல்லூரி முதல்வர் மாலதி வரவேற்றார். விழாவில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசினார்.
பின்னர், மாணவிகளின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
எந்த திசையை நோக்கி தமிழகம் செல்கிறது என்பது உங்களுக்கு தெரியும். உங்களுக்கான எதிர்காலத்தை நோக்கி என்னை நகர்த்துவதே எனது கடமை என செயல்பட்டு வருகிறேன். நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டிய நேரம் நெருங்கி விட்டது.
சுலபமானது அல்ல
சாதி என்ற தொழுநோயை ஒழிக்க வேண்டும். அதை நோக்கி தமிழகம் செல்ல வேண்டும். பெண்கள் ஆரோக்கியம் குறித்து யாரும் பேசாதது வேதனை அளிக்கிறது. திகட்டும் அளவுக்கு பெண்களுக்கான பல்வேறு திட்டங்கள் குறித்து பரிசீலித்து வருகிறோம்.
நேர்மையானவர்கள் யாருக்குமே அரசியல், சுலபமான படிக்கட்டுகள் அல்ல. நடிகனாக இருந்து அரசியலில் நுழைவது சுலபமானதா? என்று கேட்கிறார்கள். என்னை பொறுத்தமட்டில் நடிகனாக இருந்து அரசியலில் நுழைவது என்பது கண்டிப்பாக சுலபமானது அல்ல.
ஒரு நீதிபதியோ, டாக்டரோ அரசியலுக்குள் வந்திருந்தால் இவ்வளவு கேவலப்படுத்தி இருக்க மாட்டார்கள். என்னை போன்றவர்கள் உள்ளே வந்ததும் ‘இன்னொரு நடிகன் வந்து விட்டான்’ என்ற விமர்சனமே மேலோங்கி இருந்தது.
இலவசங்கள்
உச்சம் எது? என்று பார்த்து அதை அடைய வேண்டும், அதன்மூலம் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு அரசியலுக்கு வந்தேன். அரசியலில் இன்னொரு நடிகனாக இருக்க மாட்டேன். அதேபோல் இன்னொரு அரசியல் வாதியாகவும் இருக்க மாட்டேன். எங்களை பொறுத்தமட்டில் இலவசங்களை எதிர்க்கிறோம்.
எதுபோன்ற இலவசங்கள் என்பதை நீங்கள் பார்க்க வேண்டும். ஸ்கூட்டர், குவார்ட்டர் போன்ற இலவசங்களை சாடுகிறோம். எல்லோருக்கும் ஆதாரக்கல்வி ஒரே தரத்துடன் கிடைக்க வேண்டும் என்பது எங்களது கொள்கைகளில் ஒன்று. இதுபோன்ற இலவசங்களை எதிர்க்கவில்லை.
வெட்கம் இல்லாமல் கூறுகிறார்கள்
தமிழகத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் 60 லட்சம் பேர் இருப்பதாக வெட்கம் இல்லாமல் கூறுகிறார்கள். இனிமேல் தான் இதை சரி செய்வார்களா? கடந்த 50 ஆண்டுகளில் ஏன் இதை சரி செய்யவில்லை. புதிய ஏழைகளை உருவாக்கியது யார்? அரசியல் சவுகரியங்களுக்காக ஏழ்மை வெகு ஜாக்கிரதையாக பாதுகாக்கப்படுகிறது என்பது தான் எனது கருத்து.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக கல்லூரியில் மாணவிகளின் படைப்புகளை அவர் பார்வையிட்டார். அப்போது தனது உருவத்தை ஓவியமாக வரைந்த மாணவிக்கு பாராட்டு தெரிவித்த கமல்ஹாசன் அந்த ஓவியத்தில் கையெழுத்திட்டார்.
நடிகை கோவை சரளா
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் கமல்ஹாசன் தலைமையில் மகளிர் தின விழா நடந்தது. விழாவில் கட்சி செயற்குழு உறுப்பினர்கள் கமீலாநாசர், ஸ்ரீபிரியா உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவுக்கு வந்திருந்த நடிகை கோவை சரளா, மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார். அவருக்கு கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்தார்.
நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடுபவர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. அதன்படி, தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து கமல்ஹாசன் நேற்று விருப்ப மனுக்களை பெற்றுக்கொண்டார். நேற்றுவரை மொத்தம் 1,337 பேர் விருப்ப மனுக்கள் அளித்துள்ளனர்.
Related Tags :
Next Story