7 பேர் விடுதலைக்காக ஆளுநர் உடனடியாக கையொப்பமிட வேண்டும் -அற்புதம்மாள் பேட்டி


7 பேர் விடுதலைக்காக ஆளுநர் உடனடியாக கையொப்பமிட வேண்டும்  -அற்புதம்மாள் பேட்டி
x
தினத்தந்தி 9 March 2019 6:29 PM IST (Updated: 9 March 2019 6:29 PM IST)
t-max-icont-min-icon

7 பேர் விடுதலைக்காக ஆளுநர் உடனடியாக கையொப்பமிட வேண்டும் என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.

சென்னை,

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கடந்த 28 ஆண்டுகளுக்கு மேலாக பேரறிவாளன், முருகன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன், ரவிச்சந்திரன் உள்பட 7 பேர் ஆயுள் சிறை தண்டனை பெற்றுள்ளனர். இவர்களது தண்டனை காலம் முடிந்தும் இதுவரை அவர்கள் யாரும் விடுவிக்கப்படவில்லை. அண்மையில் பேரறிவாளனும், ரவிச்சந்திரனும் பரோலில் வந்தனர்.

இந்த நிலையில் சட்டப் பிரிவு 161-ஐ பயன்படுத்தி சம்பந்தப்பட்ட மாநில அரசே 7 பேர் விடுதலையில் முடிவு எடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதையடுத்து தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அதை அனுப்பியிருந்தது. எனினும் இது தொடர்பாக ஆளுநர் இன்னும் எவ்வித முடிவையும் எடுக்கவில்லை. இதையடுத்து 28 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்யக் கோரி மார்ச் 9-ஆம் தேதி 7 நகரங்களில் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தப்போவதாக பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் அறிவித்தார்.

இந்தநிலையில் சென்னை சேப்பாக்கம் அருகே மனித சங்கிலி போராட்டம் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் ஒருங்கிணைப்பில் தொடங்கியது. 

மனித சங்கிலி போராட்டத்தில் கி.வீரமணி, வெற்றிவேல், இயக்குநர் வெற்றிமாறன், அன்புமணி ராமதாஸ், திருமாவளவன், நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மனித சங்கிலி போராட்டத்தின்போது பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் கூறுகையில்,  7 பேர் விடுதலைக்காக ஆளுநர் உடனடியாக கையொப்பமிட வேண்டும். 

மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்ட கட்சி தலைவர்கள் கூறியதாவது;-

* 7 பேர் விடுதலை குறித்த கோரிக்கையை 6 மாதமாக கிடப்பில் போட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது, ஆளுநர் விரைவில் கையெழுத்திட வேண்டும் -திருமாவளவன் 

* பேரறிவாளன் உட்பட 7 பேரை சட்டத்தை மீறாமல் உடனே விடுவிக்க ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் -கி.வீரமணி

* அரசியலமைப்புச்சட்டம் கேள்விக்குறியாக மாறாமல் உடனே 7 பேரை விடுவிக்க வேண்டும் -வேல்முருகன்

* கருணை அடிப்படையில் 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் - நடிகர் சத்யராஜ்

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

மதுரையில் இயக்குநர் அமீர்  கூறுகையில்,  தமிழர்களின் உணர்வுகளை மதிக்க மறுக்கிறார் முதலமைச்சர். 7 பேர் விடுதலையில் ஆளுநர் கையெழுத்திடாமல் இருப்பதற்கு காரணம் மத்திய அரசின் தலையீடு தான்  என்றார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்கக்கோரி மதுரை, கோவை உள்ளிட்ட இடங்களில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது. 7 பேர் விடுதலைக்காக தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவும் வலியுறுத்தப்பட்டது.

Next Story