மோடி அமைதிக்கானவர் அல்ல; ராகுல் காந்தி நல்ல தலைவர் பாக். முன்னாள் அதிபர் முஷரப் பரபரப்பு பேட்டி ‘தந்தி டி.வி.’யில் இன்று ஒளிபரப்பாகிறது
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப் தந்தி டி.வி.க்கு அளித்துள்ள சிறப்பு பேட்டியில், மோடி அமைதிக் கானவர் அல்ல என்றும், ராகுல் காந்தி நல்ல தலைவர் என்றும் கூறி உள்ளார். அவரது பரபரப்பான பேட்டி தந்தி டி.வி.யில் இன்று இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
சென்னை,
காஷ்மீரில் துணை ராணுவ படையினர் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு ராணுவம் பதிலடி கொடுத்ததை தொடர்ந்து, இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நீடிக்கிறது.
இந்த நிலையில் ‘தந்தி டி.வி.’ சார்பில் ஹரிஹரன் பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் முஷரப்புடன் சிறப்பு நேர்காணல் நடத்தி உள்ளார்.
அப்போது, புலவாமா தாக்குதல், இந்திய விமானி அபிநந்தன் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலையானது, எல்லையில் நிலவும் பதற்றம் போருக்கான ஆயத்தமா? போன்றவை தொடர்பாக முஷரப்பிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- இந்திய துணைக் கண்ட வரலாற்றின் முக்கிய கட்டங்களில் பாகிஸ்தான் தலைமை பொறுப்பில் இருந்துள்ளர்கள், தற்போது இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தை எப்படி மதிப்பிடுகிறீர்கள்?
பதில்:- நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இரண்டும் அணுசக்தி நாடுகள். இது மிகவும் ஆபத்தான நிலைமை. இந்த பதற்றம் பெரிதாகலாம். நீங்கள் போர் விமானம் அனுப்பியதில் தொடங்கி, வளர்ந்தது இந்த விவகாரம். இப்போது எங்களை தண்டிக்க நினைக்கிறீர்கள். நாங்கள் அதை அனுமதிக்க தயாராக இல்லை. நீர்மூழ்கி கப்பல் சம்பவத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.
பாகிஸ்தான் ராணுவத்தினரை கேட்டேன். எங்கள் முக்கிய ஆயுதங்களை அங்கே வைத்திருந்தார்கள். அதை நீங்கள் மூழ்கடித்திருந்திருப்பீர்கள். அப்படி நடந்தால் என்னாவது? இந்த விவகாரத்தை வளர்த்துக்கொண்டு போகும் இந்திய அரசியல் தலைமையை பற்றி பேச விரும்பவில்லை.
ஆனால் காழ்ப்புணர்ச்சி கொண்ட நிலையை தற்போது உருவாக்கி இருக்கிறார்கள். இது சரி அல்ல.
கேள்வி:- இதை தொடங்கியது யார்?
பதில்:- அது பெரிய கதை, எல்லாம் காஷ்மீரோடு தொடர்புடையது.
கேள்வி:- எல்லாம், பாகிஸ்தான், காஷ்மீர் விவகாரத்தில் தலையிடுவதோடு தொடர்புடையது
பதில்:- நான் இதை மறுக்கிறேன்
கேள்வி:- தற்போதைய சூழலில், பாகிஸ்தான் பயங்கரவாதத்தின் பக்கம் உள்ள நாடு என்ற எண்ணத்தைதானே உருவாக்குகிறது?
பதில்:- வெளிப்படையாகவே பேசலாம். இதை இரு நாடுகளும் செய்கிறோம். உங்கள் ஆட்கள், குண்டு வெடிப்புகள், பயங்கரவாத செயல்களுக்கு காரணமாக உள்ளனர்.
கேள்வி:- இந்தியா குண்டு வீசுகிறதா?
பதில்:- ஆம். பலுசிஸ்தானில்... உங்கள் உளவு அமைப்புகளின் தூண்டுதலால் நடக்கிறது. இது 200 சதவீதம் உண்மை. உங்கள் தூதரகம் ஆப்கானிஸ்தானில் என்ன செய்வதாக நினைக்கிறீர்கள்?
கேள்வி:- உங்கள் கைப்பாவைகள் காஷ்மீரில் செய்வதை விடவா?
பதில்:- ஆம். அதைத்தான் நான் சொல்கிறேன். பரஸ் பரம் இதைத்தான் செய்து கொள்கிறோம். அதை நிறுத்துவோம்.
கேள்வி:- தற்போதைய பதற்றத்தை சற்று விரிவாகவே அலசுவோம். உங்கள் நாட்டு பயங்கரவாத முகாமை இந்தியா பாலகோட்டில் தாக்கியது. அதற்கு பதிலாக பாகிஸ்தான் எங்கள் ராணுவத்தளங்களை ஏன் வான் வழியாக வந்து தாக்குகிறது?
பதில்:- இல்லை, பயங்கரவாத மையங்கள் என்று நீங்கள் அழைக்கிறீர்கள். நான் அவற்றை பயங்கரவாத மையங்களாக பார்க்கவில்லை. ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்புதான்.
கேள்வி:- அப்படியானால் அவற்றின் மையங்கள், பயங்கரவாத மையங்கள்தானே?
பதில்:- அதை நான் ஏற்கிறேன். அவர்கள் பொதுமக்களை தாக்குகிறார்கள். என்னைக்கூடத்தான் தாக்கி உள்ளனர்.
கேள்வி:- அவர்களின் மையங்களைத்தான் நாங்கள் தாக்கினோம். ஆனால் பாகிஸ்தான், அதற்கு பதிலடியாக எங்கள் ராணுவத்தை தாக்குகிறது.
பதில்:- வெளிப்படையாகவே சொல்கிறேன்.. இது முழுக்க முழுக்க பொய்.
கேள்வி:- எது பொய்?
பதில்:- பாலகோட்டில் இந்தியா தாக்குதல் நடத்தியதாக கூறுவது. இது அபத்தமான கருத்து. நான் ராணுவ வீரன். என்னால் ஒரு தாக்குதலின் வீரியத்தை கணிக்கமுடியும். தொலைக்காட்சியில் பார்த்தேன்.
சிறிய பள்ளத்தைத்தான் பாலகோட்டில் உங்கள் தாக்குதல் உண்டாக்கி உள்ளது. வேறு ஒன்றுமே இந்த தாக்குதலால் ஏற்படவில்லை. 350 பேர் இறந்ததாகவும் கூறுகிறீர்கள்.
கேள்வி:- 350 என்பது அதிகாரபூர்வ எண்ணிக்கை அல்ல. ஆனால் பெரும் சேதம், உயிர்ச்சேதங்கள் நடந்துள்ளதை எப்படி மறுப்பீர்கள்?
பதில்:- எல்லாம் பொய்...எல்லாம் பொய்...
கேள்வி:- விங் கமாண்டர் அபிநந்தன் விடுதலையில் சர்வதேச அழுத்தம் இருந்ததா?
பதில்:- ஒன்றுமே இல்லை... அது எங்கள் பெருந்தன்மையால் நடந்தது. அதையும் நீங்கள் சர்ச்சைக்கு உள்ளாக்குகிறீர்கள்.
கேள்வி:- கார்கில் போரின் போது இந்திய வீரர் நாச்சிகேதாவை ஏன் நீங்கள் விடுதலை செய்ய நேரிட்டது? வீரர்களை திரும்பப் பெறுவது எங்கள் உரிமை
பதில்:- இந்தியா-பாகிஸ்தான் உறவு எப்போதும் காழ்ப்புணர்ச்சியும் வெறுப்பும் நிறைந்தது. நீங்கள் எங்களுக்கு பலுசிஸ்தான் பகுதிகளில் தொடர்ந்து பிரச்சினை உருவாக்குகிறீர்கள். நாங்களும் உங்களுக்கு தொல்லைகள் கொடுக்கிறோம்.
கேள்வி:- உலகின் மிக பிரமாண்டமான தேர்தல் இந்தியாவில் நடக்க இருக்கிறது. இதில், உங்கள் எதிர்பார்ப்பு என்ன?
பதில்:- எனது எதிர்பார்ப்பை வெளிப்படையாக கூற வேண்டுமானால், அமைதி வேண்டுமானால், மோடி சரியானவரல்ல. அவர் அமைதிக்கானவரல்ல.
கேள்வி:- எதிர்க்கட்சிகள்?
பதில்:- எதிர்க்கட்சிகளை பொறுத்தவரையிலும் கூட சில பிரச்சினைகள் உள்ளன.
கேள்வி:- ராகுல்காந்தி தலைமை உங்களுக்கு மேலானதாக தெரிகிறதா?
பதில்:- ஆமாம். அவர் நல்ல தலைவராக தெரிகிறார். நான் அதிபராக இருந்தபோது எனது குடும்பத்தினர் டெல்லிக்கு சென்று இருந்தனர். ராகுல் எனது குடும்பத்தாரை அழைத்து தேனீர் விருந்து அளித்தார். மன்மோகன்சிங் மதிய விருந்து அளித்தார். இவை வரவேற்கத்தகுந்தவை. உங்களுக்கு தெரியுமா...? இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளை நான் ஊக்கப்படுத்தி இருக்கிறேன். லாகூரில் இந்திய அணி விளையாடியபோது, இந்தியாவை பொதுவாகவே வெறுக்கும் லாகூர் கூட்டம், இந்தியாவை ஊக்கப்படுத்தியது. இப்படித்தான் உறவுகள் மேம்பட வேண்டும். காழ்ப்புணர்ச்சியை அதிகரிக்காமல் இருக்க வேண்டும். பாகிஸ்தான் வெறுப்பை வைத்து வாக்கு அறுவடை செய்யக்கூடாது.
கேள்வி:- ஆகவே, ராகுல் காந்தியை நல்ல தலைவராக நீங்கள் மதிப்பிடுகிறீர்கள்?
பதில்:- ஆமாம்.. அவரை நான் ஆதரிக்கிறேன்.
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்பின் இது போன்ற பரபரப்பான பதில்கள் அடங்கிய பேட்டியின் முழு தொகுப்பு இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8 மணிக்கு ‘தந்தி டி.வி.’யில் ஒளிபரப்பாகிறது.
Related Tags :
Next Story