தி.மு.க. கூட்டணியில் ஒதுக்கப்பட்ட 9 இடங்களில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 4 தொகுதிகள் உறுதியானது
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 4 தொகுதிகள் உறுதியாகி இருக்கிறது.
சென்னை,
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 4 தொகுதிகள் உறுதியாகி இருக்கிறது.
4 தொகுதிகள் உறுதியானது
நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
எனவே, தமிழகத்தில் உள்ள 9 தொகுதிகள் எவை என்பதை கண்டறிவதற்காக காங்கிரஸ் தொகுதி பங்கீட்டு குழுவினர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நேற்று சென்னை அண்ணா அறிவாலயம் வந்து துரைமுருகன் தலைமையிலான தி.மு.க. குழுவினரை சந்தித்து பேசினார்கள்.
அப்போது, சிவகங்கை, கன்னியாகுமரி, தேனி, விருதுநகர் ஆகிய 4 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படுவது உறுதியானது.
2-ம் கட்ட பேச்சுவார்த்தை
மீதமுள்ள 5 தொகுதிகளை கண்டறிவதற்காக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கூறப்பட்டது. தென்காசி, திருநெல்வேலி, திருச்சி, மயிலாடுதுறை, ஈரோடு, கள்ளக்குறிச்சி, அரக்கோணம், திருவள்ளூர் ஆகிய 8 தொகுதிகளில் இருந்து, 5 தொகுதிகளை தருமாறு காங்கிரஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால், தி.மு.க. ஒரு பட்டியலை வழங்கியுள்ளது.
அதனால், அகில இந்திய காங்கிரஸ் தலைமையிடம் இதுகுறித்து பேசிவிட்டு, மீண்டும் 2-வது கட்ட பேச்சுவார்த்தைக்கு வருவதாக காங்கிரஸ் தரப்பில் கே.எஸ்.அழகிரி தெரிவித்துவிட்டு குழுவினருடன் புறப்பட்டு சென்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு
தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அந்த கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் அண்ணா அறிவாலயத்துக்கு நேற்று இரவு வந்த குழுவினர் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் தலைமையிலான குழுவினரை சந்தித்து பேசினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி குழுவில், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர்கள் டி.ரெங்கராஜன், அ.சவுந்தரராஜன், சம்பத் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
ஆனால், பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு எட்டப்படவில்லை. அதனால், கட்சி நிர்வாகிகளுடன் பேசிவிட்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் தெரிவித்துவிட்டு சென்றனர்.
தி.மு.க.விடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மதுரை, கோவை ஆகிய தொகுதிகள் கேட்கப்பட்டுள்ளது.
இந்திய கம்யூனிஸ்டு
தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்றொரு கட்சியான இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கும் 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
அந்த 2 தொகுதிகள் எவை என்பது குறித்து முடிவு செய்வதற்காக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தலைமையில் துணை செயலாளர் சுப்புராயன், பழனிசாமி, ஆறுமுகம் ஆகியோர் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் தலைமையிலான குழுவினரை சந்தித்து பேசினார்கள். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாக தெரிகிறது. ஆனால், பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு வெளியே வந்த இரா.முத்தரசன், தொகுதி ஒதுக்கப்பட்டது குறித்து தி.மு.க. தலைமை நாளை (அதாவது இன்று) தெரிவிக்கும் என்று கூறி விட்டு சென்றுவிட்டார்.
தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு நாகப்பட்டினம், திருப்பூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
Related Tags :
Next Story