‘சீர்மரபினர் சமுதாயத்தினர்’ என்ற பெயர் ‘சீர்மரபினர் பழங்குடியினர்’ என மாற்றம் தமிழக அரசு உத்தரவு
மத்திய அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்காக ‘சீர்மரபினர் சமுதாயத்தினர்’ என்ற பெயரை ‘சீர்மரபினர் பழங்குடியினர்’ என மாற்றி தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.
சென்னை,
மத்திய அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்காக ‘சீர்மரபினர் சமுதாயத்தினர்’ என்ற பெயரை ‘சீர்மரபினர் பழங்குடியினர்’ என மாற்றி தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.
68 சமுதாயம்
தமிழக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் ஏ.கார்த்திக் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த 68 சமுதாயத்தினர், 1979-ம் ஆண்டுக்கு முன்புவரை, சீர்மரபினர் பழங்குடியினர் என்று அழைக்கப்பட்டனர். அவர்களை பழங்குடியினர் என்று குறிப்பிடக்கூடாது என்று உத்தரவு ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது.
எனவே அதற்கான அரசாணையை 1979-ம் ஆண்டு ஜூலை 30-ந் தேதி தமிழக சமூக நலத்துறை பிறப்பித்தது. அதன்படி, சீர்மரபினர் பழங்குடியினர் என்று அழைக்கப்பட்டவர்கள் அனைவரும் சீர்மரபினர் சமுதாயத்தினர் என்று அழைக்கப்பட்டனர்.
ஆய்வுக்குழு பரிந்துரை
இந்த நிலையில், சீர்மரபினர் சமுதாயத்தினர் என்று அழைக்கப்படுவதால் பாதிப்பு ஏற்படுவதாக அரசுக்கு அந்த சமுதாய அமைப்புகளின் பிரதிநிதிகள் கோரிக்கை அளித்தனர். அவர்களின் கோரிக்கைகளை ஆய்வு செய்ய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவின் அறிக்கை 4-ந் தேதி அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. அதில், சீர்மரபினர் சமுதாயத்தினர் என்று அழைக்கப்படுகிறவர்களை சீர்மரபினர் பழங்குடியினராக மாற்றலாம் என்றும், அவர்களுக்கான இடஒதுக்கீடு உள்ளிட்ட சமூக நலக் கூறுகளில் மாற்றங்களை செய்யாமல் பெயரை மட்டும் மாற்றிக்கொள்ளலாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டு இருந்தது.
பெயர் மாற்றம்
மேலும், மத்திய அரசின் சமூக நலத் திட்டங்களை பெறுவதற்காகவே சீர்மரபினர் பழங்குடியினர் என்று பெயர் மாற்றம் செய்ய அனுமதிப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இதற்கு ஏற்ப, கடந்த 1979-ம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை திரும்பப்பெற வேண்டும் என்றும் அந்த பரிந்துரையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த பரிந்துரை ஏற்கப்படுகிறது.
அதன்படி, மத்திய அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்காக சீர்மரபினர் பிரிவின் கீழுள்ள 68 சமுதாயத்தினர் சீர்மரபினர் பழங்குடியினர் என்று மீண்டும் அழைக்கப்படுவார்கள். தமிழகத்தில் சமுதாய அடிப்படையிலான இடஒதுக்கீடு உள்ளிட்ட விவகாரங்களில் அவர்கள் சீர்மரபினர் சமுதாயத்தினராகவே கருதப்படுவார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story