அனுமதி மறுக்கப்பட்டதால் த.மு.மு.க.மாநில செயற்குழுவில் இரு கோஷ்டியினரிடையே தள்ளுமுள்ளு


அனுமதி மறுக்கப்பட்டதால் த.மு.மு.க.மாநில செயற்குழுவில் இரு கோஷ்டியினரிடையே தள்ளுமுள்ளு
x
தினத்தந்தி 9 March 2019 9:30 PM GMT (Updated: 2019-03-10T01:51:47+05:30)

த.மு.மு.க. மாநில செயற்குழு கூட்டத்தில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டதால், இரு கோஷ்டியினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

விழுப்புரம், 

த.மு.மு.க. மாநில செயற்குழு கூட்டத்தில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டதால், இரு கோஷ்டியினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

மாநில செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் மாநில செயற்குழு கூட்டம் நேற்று காலை விழுப்புரத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாநில தலைவர் ஜவாஹிருல்லா தலைமை தாங்கினார். இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக மாநில பொதுச்செயலாளர் ஹைதர்அலி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 25 பேர் வந்தனர்.

தள்ளுமுள்ளு

அப்போது மண்டபத்தின் முன்பு நின்றுகொண்டிருந்த இளைஞரணி நிர்வாகிகள், ஹைதர்அலியின் ஆதரவாளர்களை கூட்டம் நடைபெற்ற மண்டபத்திற்குள் உள்ளே அனுமதிக்காமல் வெளியே தடுத்து நிறுத்தினர். இதனால் இளைஞரணி நிர்வாகிகளுக்கும், ஹைதர்அலி ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு உருவானது.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்து நிர்வாகிகளை சமாதானம் செய்தனர். அதன் பிறகு ஹைதர்அலி மட்டும் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டார்.

25 நிர்வாகிகள் நீக்கம்

ஆனால் அவரது ஆதரவாளர்களான மனித நேய மக்கள் கட்சியின் மாநில செயலாளர் உஸ்மான், கொள்கை பரப்பு செயலாளர் சையத், த.மு.மு.க. மாநில செயலாளர் ஹவுரியா உள்ளிட்ட 25 பேர் உள்ளே செல்ல அனுமதிக்கப்படாததால் அவர்கள் அனைவரும் கூட்டம் நடைபெற்ற மண்டபத்தின் வெளியே அமர்ந்துகொண்டு திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் கூறுகையில், த.மு.மு.க. மாநில தலைவர் ஜவாஹிருல்லா, பொதுச்செயலாளர் ஹைதர்அலி ஆகியோருக்கு இடையே சிறு கருத்து வேறுபாடு இருப்பதால் ஹைதர்அலியுடன் இருக்கும் 20 மாவட்டங்களை சேர்ந்த 25 நிர்வாகிகள் எந்தவித அறிவிப்பும் இன்றி நீக்கப்பட்டுள்ளதோடு, மாநில செயற்குழு கூட்டத்தில் எங்களுடைய கருத்துகளை கூறவும் அனுமதி மறுப்பதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தினால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story