அம்மிக்கல்லை தலையில் போட்டு தந்தையை கொன்ற அதிகாரி தாயையும் கத்திரிகோலால் குத்தியதால் பரபரப்பு


அம்மிக்கல்லை தலையில் போட்டு தந்தையை கொன்ற அதிகாரி தாயையும் கத்திரிகோலால் குத்தியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 9 March 2019 9:15 PM GMT (Updated: 2019-03-10T01:56:51+05:30)

தனி அறையில் அடைத்து வைத்த ஆத்திரத்தில், அம்மிக்கல்லை தலையில் போட்டு தந்தையை கொன்று, தாயையும் கத்திரிகோலால் குத்திய நிதி நிறுவன அதிகாரியை போலீ சார் கைது செய்தனர்.

திண்டுக்கல், 

தனி அறையில் அடைத்து வைத்த ஆத்திரத்தில், அம்மிக்கல்லை தலையில் போட்டு தந்தையை கொன்று, தாயையும் கத்திரிகோலால் குத்திய நிதி நிறுவன அதிகாரியை போலீ சார் கைது செய்தனர்.

நிதி நிறுவன மேலாளர்

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை பகவதியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 50). இவர், கடை வீதியில் பிரியாணி கடை நடத்தி வந்தார். இவருடைய மனைவி மகாலட்சுமி (45). இவர்களுக்கு வினோத்குமார் (26) என்ற மகனும், அபிராமி என்ற மகளும் உள்ளனர். அபிராமிக்கு திருமணமாகி நாகர்கோவிலில் வசித்து வருகிறார்.

வினோத்குமாருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர், கோவிலூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வினோத்குமார் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி குஜிலியம்பாறையில் நடந்த காளியம்மன் கோவில் திருவிழாவில் வினோத்குமாருக்கும், அப்பகுதியை சேர்ந்த சிலருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில், வினோத்குமார் தாக்கப்பட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர், தன்னை தாக்கியவர்களிடம் மீண்டும் சண்டை போட வேண்டும் என்று தனது பெற்றோரிடம் கூறி வந்தார்.

தனி அறையில் அடைப்பு

இந்த நிலையில் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு குடிபோதையில் இருந்த வினோத்குமார், அந்த தெருவில் வசிப்பவர்களுடன் தகராறு செய்ததார். இதனைக்கண்ட அவருடைய பெற்றோர், வினோத்குமாரை வீட்டுக்கு அழைத்து வந்து தனி அறையில் வைத்து பூட்டினர். தன்னை வெளியே விடும்படி அவர் கூச்சலிட்டார்.

சிறிது நேரத்தில் கதவின் பூட்டை உடைத்து கொண்டு அவர் வெளியே வந்தார். பின்னர் வீட்டில் இருந்த கத்திரிகோலை எடுத்து தாயார் மகாலட்சுமியை சரமாரியாக குத்தினார். இதனை செல்வராஜ் தடுக்க முயன்றார். அவரையும் கத்திரிகோலால் வினோத்குமார் குத்த முயன்றார்.

அம்மிக்கல்லை தலையில் போட்டு...

இதனால் செல்வராஜ் அலறியபடி வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தார். அவரை விடாமல் விரட்டிய வினோத்குமார், அங்கு கிடந்த உருட்டுக்கட்டையால் செல்வராஜை தாக்கினார். இதில் நிலை தடுமாறி அவர் கீழே விழுந்தார்.

இருப்பினும் ஆத்திரம் தீராத வினோத்குமார், வீட்டுக்கு வெளியே இருந்த அம்மிக்கல்லை எடுத்து செல்வராஜின் தலையில் போட்டார். படுகாயமடைந்த அவர், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த குஜிலியம்பாறை போலீசார் அங்கு விரைந்தனர்.

கைது

போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து வினோத்குமார் தப்பி ஓடினார். அவரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் வீட்டில் படுகாயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த மகாலட்சுமியை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத்குமாரை கைது செய்தனர்.

Next Story