திருவண்ணாமலை, ராமநாதபுரம் அருகே விபத்து: கணவன்-மனைவி உள்பட 7 பேர் பலி


திருவண்ணாமலை, ராமநாதபுரம் அருகே விபத்து: கணவன்-மனைவி உள்பட 7 பேர் பலி
x
தினத்தந்தி 9 March 2019 9:30 PM GMT (Updated: 9 March 2019 8:40 PM GMT)

திருவண்ணாமலை, ராமநாதபுரம் அருகே நடந்த விபத்துகளில் கணவன் - மனைவி உள்பட 7 பேர் பலியானார்கள்.

திருவண்ணாமலை, 

திருவண்ணாமலை, ராமநாதபுரம் அருகே நடந்த விபத்துகளில் கணவன் - மனைவி உள்பட 7 பேர் பலியானார்கள்.

மாட்டு சந்தைக்கு...

திருவண்ணாமலையை அடுத்த காட்டுமலையனூர் பகுதியை சேர்ந்த குமார் (வயது 40), முருகன் (50), ஞானசேகரன் (35) ஆகியோர் போளூர் அருகில் கேளூர் மாட்டு சந்தைக்கு விற்பனை செய்வதற்காக 3 மாடுகளை மினி லாரியில் ஏற்றிக்கொண்டு சென்றனர். மினிலாரியை அதே பகுதியை சேர்ந்த பிரவீன்ராஜ் (29) என்பவர் ஓட்டினார்.

அவர்கள் மாட்டு சந்தையில் 2 மாடுகளை விற்பனை செய்தனர். பின்னர் சினையாக இருந்த பசுமாட்டை மினி லாரியில் ஏற்றிக் கொண்டு கலசபாக்கம் வழியாக காட்டுமலையனூருக்கு நேற்று காலை சென்று கொண்டிருந்தனர்.

மரத்தில் மோதியது

கலசபாக்கம் அருகே வந்தபோது காட்டு மலையனூரை சேர்ந்த சேவி (70). அவரது மனைவி ரகம்மாள் என்ற காவியம்மாள் (65) ஆகியோரை பார்த்ததும் அவர்களை மினிலாரியில் ஏற்றிக் கொண்டனர்.

அப்போது மினிலாரியின் அருகில் சென்ற வாகனம் ஒன்று தடை செய்யப்பட்ட ‘ஹாரன்’ சத்தத்தை எழுப்பியுள்ளது. அதனால் மிரண்ட பசுமாடு மினிலாரிக்குள் துள்ளி குதித்தது. இதனால் மினி லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள புளிய மரத்தில் மோதியது.

கணவன்-மனைவி உள்பட 4 பேர் பலி

இதில் படுகாயம் அடைந்த சேவி, ஞானசேகரன், முருகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் மினி லாரியில் இருந்த பசு மாடும் உயிரிழந்தது. டிரைவர் பிரவீன்ராஜ், காவியம்மாள், குமார் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த கலசபாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காவியம்மாள் பரிதாபமாக இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.

இதே போல் ராமநாதபுரம் அருகே நடந்த விபத்தில் 3 பேர் பலியானார்கள். அதன் விவரம் வருமாறு:-

பஸ்-சரக்கு வாகனம் மோதல்

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே ஏ.மணக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். அவருடைய மகன் கருப்பையா என்ற சுரேஷ் (வயது 29). இவருக்கு சொந்தமான சரக்கு வாகனத்தில், சுரேஷ், தொண்டி கிழக்கு தெரு செய்யது இப்ராகிம் (30), முகமது ரிபாக் (24), அபுல்கலாம் ஆசாத் (23), முகமது அப்ரித் (30), அஸ்பாக் (25) ஆகியோர் நேற்று முன்தினம் இரவில் ராமநாதபுரம் சென்று சினிமா பார்த்து விட்டு கிழக்கு கடற் கரை சாலையில் தொண்டி நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

நள்ளிரவில் 2.10 மணி அளவில் நம்புதாளை மீனவர் சாலை அருகே ஒரு வளைவில் அந்த வாகனம் திரும்பியது. அப்போது தொண்டியில் இருந்து தூத்துக்குடி நோக்கி வந்த அரசு பஸ்சும், அந்த சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

3 பேர் உயிரிழந்தனர்

இந்த சத்தம் கேட்டு அப்பகுதியை சேர்ந்த மக்கள் ஓடிவந்து பார்த்தனர். தகவல் அறிந்து போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த கோர விபத்தில் சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த சுரேஷ், செய்யது இப்ராகிம், அபுல்கலாம் ஆசாத் ஆகிய 3 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய முகமது ரிபாக், அஸ்பாக், முகமது அப்ரித் ஆகியோர் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இரு விபத்துகளிலும் மொத்தம் 7 பேர் பலியாகி உள்ளனர்.

Next Story