21 தொகுதி இடைத்தேர்தலுக்கான தி.மு.க. வேட்பாளர்கள் நேர்காணல் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது


21 தொகுதி இடைத்தேர்தலுக்கான தி.மு.க. வேட்பாளர்கள் நேர்காணல் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது
x
தினத்தந்தி 10 March 2019 5:00 AM IST (Updated: 10 March 2019 2:32 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் நடைபெற உள்ள 21 தொகுதி இடைத்தேர்தலுக்கான தி.மு.க. வேட்பாளர்கள் நேர்காணல் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

சென்னை, 

தமிழகத்தில் நடைபெற உள்ள 21 தொகுதி இடைத்தேர்தலுக்கான தி.மு.க. வேட்பாளர்கள் நேர்காணல் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

காலியாக உள்ள 21 தொகுதிகள்

தமிழகத்தில் காலியாக உள்ள திருவாரூர், திருப்பரங்குன்றம், பூந்தமல்லி, ஆம்பூர், ஆண்டிப்பட்டி, ஓட்டப்பிடாரம், பெரம்பூர், பாப்பிரெட்டிப்பட்டி, பெரியகுளம், திருப்போரூர், அரூர், சாத்தூர், அரவக்குறிச்சி, சோளிங்கர், நிலக்கோட்டை, பரமக்குடி, தஞ்சாவூர், குடியாத்தம், மானாமதுரை, விளாத்திகுளம், ஓசூர் ஆகிய 21 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் கடந்த 1-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.

வேட்பாளர் நேர்காணல்

இந்தநிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் வேட்பாளர் நேர்காணல் நடைபெற்றது. மு.க.ஸ்டாலினுடன் கட்சியின் முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு, பொருளாளர் துரைமுருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

நேற்று காலை 9.20 மணிக்கு வேட்பாளர் நேர்காணல் தொடங்கியது. நேற்று மதியம் 1.20 மணி வரை நடைபெற்ற நேர்காணலில் ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், சாத்தூர், பரமக்குடி, மானாமதுரை, பெரியகுளம், ஆண்டிப்பட்டி, நிலக்கோட்டை, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு விருப்பமனு அளித்தவர்களிடம் வேட்பாளர் நேர்காணல் நடைபெற்றது.

பின்னர் மாலையில் ஓசூர், திருவாரூர், பூந்தமல்லி, ஆம்பூர், பெரம்பூர், பாப்பிரெட்டிப்பட்டி, திருப்போரூர், அரூர், அரவக்குறிச்சி, சோளிங்கர், தஞ்சாவூர், குடியாத்தம் ஆகிய தொகுதிகளுக்கான வேட்பாளர் நேர்காணல் நடைபெற்றது.

தொகுதி குறித்த கேள்விகள்

வேட்பாளர் நேர்காணலின் போது, விருப்பமனு அளித்தவர்களிடம் அவர்களின் பெயர், கட்சியில் தங்கள் பொறுப்பு, கட்சிக்காக என்ன செய்தீர்கள்? தேர்தலில் எவ்வளவு பணம் செலவு செய்ய முடியும்? தொகுதியில் தங்களுக்கு உள்ள வாக்கு வங்கி என்ன? தொகுதியின் சாதக பாதக நிலைகள் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டன. ஒவ்வொரு தொகுதியின் வேட்பாளர் நேர்காணலின் போதும், அந்தந்த தொகுதியின் மாவட்ட செயலாளர்கள் உடன் இருந்தனர்.

மேலும், ஒவ்வொரு தொகுதிக்கான வேட்பாளர் நேர்காணல் முடிந்த உடன் அந்த தொகுதியின் மாவட்ட செயலாளர், மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு-பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றியம், நகரம், பகுதி செயலாளர்கள் அழைக்கப்பட்டு அவர்களிடம் விருப்பமனு தாக்கல் செய்யப்பட்டவர்களின் விவரம் குறித்து கேட்டு அறியப்பட்டது. யார்? யாருக்கு தொகுதியில் வெற்றி வாய்ப்பு உள்ளது? யார் சிறந்த முறையில் மக்கள் சேவை செய்வார்கள்? என்பது குறித்து கேட்கப்பட்டுள்ளது.

தி.மு.க.வில் இணைந்தனர்

ஒவ்வொரு வேட்பாளரின் பெயரையும் வாசித்து இவரை உங்களுக்கு தெரியுமா? என்றும் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இவர் கட்சியில் இந்த பொறுப்பில் இருப்பதாக கூறுகிறார் அது உங்களுக்கு தெரியுமா? என்றும் கேட்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், புதிய தமிழகம் கட்சியின் நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் ஏ.ஜெயக்குமார் தலைமையில் நெல்லை மேற்கு மாவட்ட துணை செயலாளர் கே.குற்றாலம், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் ஏ.மங்கள்ராஜ் மற்றும் பல்வேறு ஒன்றிய முன்னாள் தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் உள்பட பலர் அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.

Next Story