தண்டையார்பேட்டையில் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் பெண்கள் முற்றுகை போராட்டம் 20 ரூபாய் நோட்டுகளை வீசி எறிந்தனர்
தண்டையார்பேட்டையில் உள்ள டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், 20 ரூபாய் நோட்டுகளை வீசி எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பூர்,
தண்டையார்பேட்டையில் உள்ள டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், 20 ரூபாய் நோட்டுகளை வீசி எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
20 ரூபாய் நோட்டு
சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டி.டி.வி. தினகரன், மக்களிடம் வாக்குகளை பெறுவதற்காக 20 ரூபாய் நோட்டை டோக்கனாக கொடுத்து, ஒரு வாக்குக்கு ரூ.10 ஆயிரம் வழங்குவதாக உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.
ஆனால் டி.டி.வி. தினகரன் அளித்த வாக்குறுதிபடி இதுவரையிலும் ரூ.10 ஆயிரம் தராததால், அவருக்கு ஓட்டுப்போட்ட பொதுமக்கள், அவர் தொகுதிக்கு வரும்போதெல்லாம் 20 ரூபாய் நோட்டை காண்பித்து முற்றுகை போராட்டங்களை நடத்தி வந்தனர்.
முற்றுகை போராட்டம்
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மகளிர் தினத்தையொட்டி அ.தி.மு.க. சார்பில் வண்ணாரப்பேட்டை மணிக்கூண்டு அருகே வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமையில் மகளிர் தினவிழா பொதுக்கூட்டம் மற்றும் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்துகொண்ட 200-க்கும் மேற்பட்ட பெண்கள், திடீரென தண்டையார்பேட்டை இரட்டைகுழாய் தெருவில் உள்ள ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், கையில் 20 ரூபாய் நோட்டுகளை வைத்துக்கொண்டு, “20 ரூபாய் நோட்டு டோக்கன் இங்கே உள்ளது. ஓட்டுக்கு தருவதாக சொன்ன பணம் எங்கே?” எனக்கேட்டு கோஷமிட்டனர்.
பின்னர் கையில் இருந்த 20 ரூபாய் நோட்டுகளை எம்.எல்.ஏ. அலுவலகத்தில் வீசி எறிந்தனர். இதனால் அங்கிருந்த டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்கள், நைசாக நழுவிச்சென்று விட்டனர். இதுபற்றி தகவல் அறிந்துவந்த தண்டையார்பேட்டை போலீசார், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை சமரசம் செய்து கலைந்துபோக செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story