தமிழகத்தில் காலியாக இருக்கும் 18 சட்டசபை தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18-ந் தேதி இடைத்தேர்தல் தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா அறிவிப்பு


தமிழகத்தில் காலியாக இருக்கும் 18 சட்டசபை தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18-ந் தேதி இடைத்தேர்தல் தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா அறிவிப்பு
x
தினத்தந்தி 11 March 2019 4:30 AM IST (Updated: 11 March 2019 1:29 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து காலியாக இருக்கும் 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் ஏப்ரல் 18-ந் தேதி நடத்தப்படும் என்று இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா அறிவித்துள்ளார்.

சென்னை, 

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து காலியாக இருக்கும் 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் ஏப்ரல் 18-ந் தேதி நடத்தப்படும் என்று இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா அறிவித்துள்ளார்.

18 தொகுதி இடைத்தேர்தல்

17-வது நாடாளுமன்றத்தை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக ஏப்ரல் 11-ந் தேதி முதல் மே மாதம் 19-ந் தேதி வரை நடைபெறுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18-ந் தேதி 2-வது கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் அதே நாளில் (ஏப்ரல் 18) நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா நேற்று பேட்டியின்போது தெரிவித்தார்.

காலியாக உள்ள தொகுதிகள் எவை?

தமிழகத்தில் ஏற்கனவே, சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது மாற்றி வாக்களித்ததாக டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு அளித்த 18 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர்.

தங்க தமிழ்செல்வன் (ஆண்டிப்பட்டி), முருகன் (அரூர்), மாரியப்பன் கென்னடி (மானாமதுரை), கதிர்காமு (பெரியகுளம்), ஜெயந்தி பத்மநாபன் (குடியாத்தம்), பழனியப்பன் (பாப்பிரெட்டிப்பட்டி), செந்தில் பாலாஜி (அரவக்குறிச்சி), முத்தையா (பரமக்குடி), வெற்றிவேல் (பெரம்பூர்), பார்த்திபன் (சோளிங்கர்), கோதண்டபாணி (திருப்போரூர்), ஏழுமலை (பூந்தமல்லி), ரெங்கசாமி (தஞ்சாவூர்), தங்கதுரை (நிலக்கோட்டை), பாலசுப்பிரமணி (ஆம்பூர்), சுப்பிரமணியன் (சாத்தூர்), சுந்தரராஜ் (ஓட்டப்பிடாரம்), உமா மகேஸ்வரி (விளாத்திகுளம்) ஆகியோர் இந்த நடவடிக்கையில் சிக்கினர்.

இதனால் அந்த 18 தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டது.

கருணாநிதி மறைவு

இதேபோல், தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அடைந்ததால் திருவாரூர் தொகுதியும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ் மரணம் அடைந்ததால், திருப்பரங்குன்றம் தொகுதியும் காலியாக உள்ளது.

மேலும், 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டியின் எம்.எல்.ஏ. பதவி பறிபோனதால், ஓசூர் தொகுதியும் காலியாக உள்ளது.

இவ்வாறு, காலியாக உள்ள 21 சட்டசபை தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு ஏப்ரல் 18-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.

மீதமுள்ள ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கை காரணம் காட்டி இந்த 3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வாக்காளர்களுக்கு 2 ஓட்டு

எனவே, குறிப்பிட்ட 18 சட்டசபை தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் மட்டும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தனியாகவும், சட்டமன்ற தேர்தலுக்கு தனியாகவும் வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றன.

வாக்காளர்களும் ஒரே நேரத்தில், நாடாளுமன்ற தொகுதி வேட்பாளருக்கும், சட்டசபை தொகுதி வேட்பாளருக்கும் என 2 வாக்குகளை அளிக்க முடியும். இந்த 18 தொகுதி சட்டசபை இடைத்தேர்தலுக்கும் நாடாளுமன்ற தேர்தலைப்போல இம்மாதம் (மார்ச்) 19-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் மார்ச் 26-ந் தேதி ஆகும். வேட்புமனு பரிசீலனை மார்ச் 27-ந் தேதி நடைபெறுகிறது. வேட்புமனுவை திரும்ப பெற கடைசி நாள் மார்ச் 29-ந் தேதி ஆகும்.

இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் மே 23-ந் தேதி நடைபெறுகிறது.

Next Story