அ.தி.மு.க-தே.மு.தி.க. வெற்றிக்கூட்டணி ஓ.பன்னீர்செல்வம், பிரேமலதா கூட்டாக பேட்டி
அ.தி.மு.க - தே.மு.தி.க. வெற்றிக்கூட்டணி என்று ஓ.பன்னீர்செல்வமும், பிரேமலதாவும் கூறினார்கள்.
சென்னை,
அ.தி.மு.க - தே.மு.தி.க. வெற்றிக்கூட்டணி என்று ஓ.பன்னீர்செல்வமும், பிரேமலதாவும் கூறினார்கள்.
தே.மு.தி.க.வுக்கு 4 தொகுதிகள்
அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், இருகட்சி தலைவர்களும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-
நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. நடைபெற உள்ள 21 சட்டசபை தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு தே.மு.தி.க. தனது முழு ஆதரவை அளிக்கும் என்று உடன்பாடு கையெழுத்தாகியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
சுமுகமான உடன்பாடு
கேள்வி:- தே.மு.தி.க. போட்டியிடும் 4 தொகுதிகள் எவை?
பதில்:- அ.தி.மு.க. அமைத்துள்ள மெகா, வெற்றிக்கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பதை கலந்து ஆலோசித்து, சுமுகமான உடன்பாடு எட்டிய பின்னர் அறிவிப்போம்.
கேள்வி:- த.மா.கா. உங்கள் கூட்டணிக்கு வருமா?
பதில்:- கூடிய விரைவில் நல்ல முடிவு எட்டப்படும்.
கேள்வி:- கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது எப்போது இறுதி செய்யப்படும்?
பதில்:- வேட்புமனு தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது முடிவு செய்யப்படும்.
கேள்வி:- உங்கள் கூட்டணி பலமாக இருக்கிறதா?
பதில்:- 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுகின்ற வலிமையான, உறுதியான, கெட்டியான கூட்டணி எங்களுடையது.
கேள்வி:- நாளை (இன்று) நடைபெற உள்ள நேர்காணல் திட்டமிட்டப்படி நடைபெறுமா?
பதில்:- திட்டமிட்டப்படி நேர்காணல் நடைபெறும்.
கேள்வி:- நீண்ட நாளுக்கு பிறகு தே.மு.தி.க. உங்களோடு இணைந்திருப்பதை எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்:- அ.தி.மு.க., தே.மு.தி.க. எப்போதுமே உணர்வுப்பூர்வமான கூட்டணியாக இருக்கும்.
இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்தார்.
வெற்றிக்கூட்டணி
இதையடுத்து பிரேமலதா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- அ.தி.மு.க.வை தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தீர்கள். இப்போது அவர்களோடு கூட்டணி அமைத்திருக்கிறீர்களே?
பதில்:- நான் சொன்ன கருத்து, தவறாக திரித்து கூறப்பட்டது. அதற்கான விளக்கத்தை முதல்-அமைச்சரும், அமைச்சரும் தெளிவாக புரிய வைத்து விட்டார்கள். அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்த இன்றைய தினமே (நேற்று) நல்ல நாள். அ.தி.மு.க.வும், தே.மு.தி.க.வும் எப்போதுமே வெற்றிக்கூட்டணி. அதற்கான உதாரணம் 2011 தேர்தல். ஜெயலலிதாவும், விஜயகாந்தும் இணைந்து மிகப்பெரிய வெற்றியை நிலைநாட்டினார்கள். அதுபோல இப்போதும் நாளை நமதே, நாற்பதும் நமதே என்று சொல்லக்கூடிய வகையில் 40 தொகுதிகளிலும் மாபெரும் வெற்றியை நாங்கள் பெறுவோம்.
21 சட்டமன்ற தொகுதிகளிலும் நாங்கள் அ.தி.மு.க.வுக்கு முழு ஆதரவு கொடுப்போம். அதன் பின்னர் வருகிற உள்ளாட்சி தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும். இந்த ஆட்சிக்கு அனைத்து விதத்திலும் தே.மு.தி.க. முழு ஆதரவு அளிக்கும்.
கேள்வி:- தொகுதி உடன்பாட்டில் மன நிறைவு ஏற்பட்டிருக்கிறதா?
பதில்:- மனநிறைவு ஏற்பட்டிருக்கிறது. எண்களில் ஒன்றும் இல்லை. எண்ணங்களில் தான் எல்லாம் இருக்கிறது.
விஜயகாந்த் பிரசாரம்
கேள்வி:- விஜயகாந்த் பிரசாரம் செய்வாரா?
பதில்:- நிச்சயமாக பிரசாரம் செய்வார்.
இவ்வாறு பிரேமலதா கூறினார்.
Related Tags :
Next Story